Sunday, 17 February 2013

யாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்..

(நாக்கில் எச்சில் ஒழுக..)கடல்மட்டத்துக்கு கீழே வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்தவற்றின் கறிகள்.இந்தப் பதிவுடைய முன்னைய பதிவு இங்கே உள்ளது. அதற்கு இத்தனை ஆதரவு வரும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தமிழனின் உணவு சார்ந்த பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றி விட்டோம் நாங்கள். உண்மையில் இந்தப் பதிவுகள் எங்களது கடந்த பலகால யாழ்ப்பாண சாப்பாட்டுக்கடை அனுபவங்களைப் பற்றிய ஒரு பகிர்வு. (அதுவும் முக்கியமாக சென்ற வருட நடுப்பகுதியில் எமது வலைத்தளப் பதிவர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும், அங்கெல்லாமுள்ள உணவுக் கடைகளில் சாப்பிடும் அனுபவத்தை பெற்றதால்.) எமக்கு தகுதியும், காலமும் வாய்த்தால், யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கங்கள் பற்றிய விரிவான பதிவை எழுதுகிறோம்.  இப்போதைக்கு – முப்பது ஊர்களில் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டவர்கள் என்கிற தகுதியில் எழுதப்பட்ட -  முன்னைய பதிவின் தொடர்ச்சி...


யாழ் நகரத்திலே சாப்பாட்டுக் கடைகள் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கின்றன. நகரின் புறப் பகுதியிலே பிரபலமாக இருக்கும் அசைவக் கடைகள், (பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்துக்கும்படிக்கும் வர்க்கத்துக்கும் மத்தியானஇரவு உணவுகளையும்பார்ட்டிகளையும் அனுசரணை செய்பவை.) நகரின் நடுப்பகுதியிலே இருக்கும் மென் உணவுக் கடைகள் (டவுனுக்கு (யாழ் நகரத்துக்கு) வரும் மத்தியதர குடும்பங்களும்பெண்களும் பசியாறும் கடைகள். படிக்கும் பெண்வர்க்கத்தின் பார்ட்டிகளும் இங்கேதான்.) அடுத்தது வணிகரீதியிலே பிரபலமாகிவிட்ட அதி நவீனக் கடைகள். (சாப்பிடப் போவோம் என்றில்லாமல், கடையின் பெயரைச் சொல்லி, ***க்குப் போவோம் என அழைக்கப்படும் மக்கள் அபிமானம் பெற்றவை. பெரும்பாலான ஐஸ்கிரீம் கடைகளும் சிறுபாலான உணவுக் கடைகளும் இதிலே அடக்கம்.) இவைதவிர கடந்த ஒருவருட காலத்திலேயே முளைத்த நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களும் நகரத்திலே உள்ளன என்கிறபோதும்அவை மக்களின் அபிமானத்தைப் பெறாமல், வெறுமனே குடாநாட்டுக்கு வெளியில் இருந்து வருபவர்களின் பசியையும் பேர்ஸ் பணத்தையும்  மட்டுமே போக்கிவருகின்றன. யாழ்ப்பாணத்தவர்களின் சாப்பாட்டுக்கடைகள் மேலான அன்னியோன்னியத்தை அவை சம்பாதிக்கவில்லை.
மக்களின் ஆதரவை பெற்ற கடை ஒன்று..

 மற்றபடி குடாநாட்டின் முக்கியமான குறைபாடு உரிய இடங்களில் எல்லாம் சாப்பாட்டுக் கடைகள் போதியளவு இல்லை என்பதே. முக்கிய நகரங்களில் ஒன்றான – குடாநாட்டின் மையமான - சுன்னாகத்திலே ஒரு ஆமான சாப்பாட்டுக் கடை இல்லை. (அண்மையில் முளைத்த ஓரிரு கடைகளும் எல்லா சமூகத்தையும் கவரும் தகுதி அற்றவை.) இதேபோல அளவெட்டிகுப்பிளான்ஊர்காவற்றுறைஉடுவில்பருத்தித்துறை.. என்று மிகப் பெரும்பாலான இடங்களில் ஒன்றுசாப்பாட்டுக் கடையே இல்லைஅல்லது இருக்கும் கடைகளோ, அவற்றின் வசதிகளோ போதாது. (கட்டுரைக்காக எதோ வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுகிறேன் என கடுப்பாகாதீர். மேற்கூறிய இடங்களிலெல்லாம் மத்தியான வேளையில் அகப்பட்டு, பசியில் நாக்கு தள்ளகண்கள் பஞ்சடைத்து ஒரு குத்து மதிப்பாக அகப்பட்ட பெட்டிக்கடை அரைறாத்தல் பானை ஆறாக்கி சாப்பிட்டது எனக்குத்தான் தெரியும்.)

இதேபோலஎனது அனுபவத்தில் வாய்க்கோமனதுக்கோ நிறைவைத் தந்த கடைகளும் இருக்கின்றன. முக்கியமாக வல்வெட்டித்துறையின் ஒரு கொத்து ரொட்டிக் கடை. கொஞ்சமாக சாப்பிடலாம் என்று நான்சைவம் சாப்பிடும் யோசனையுடன் இரண்டு நண்பர்கள்வெறும் மைலோ பால் குடிக்கும் முடிவுடன் ஒருவர். இப்படி நாலு பேர் போனோம். ஒரு ஆண்டி (அன்ரிதான்.) வந்தார். எதார்த்தமாக பதார்த்தங்களை ஓடர் பண்ணினோம். கோழிக் கொத்து ஓடர் பண்ணிய எனக்கு முன்னால் ஒரு அண்டாவை கொண்டுவந்து வைத்தார் அந்த அம்மணி.


“ நாங்கள் நாலு பெரும் தனித்தனியாத்தான் சாப்பிடப்போறம்பிரிச்சுக் கொண்டாங்கோ.
தம்பிஉம்மடை கோழிக் கொத்துத்தான் இது. அவையளிண்ட சைவக் கொத்து பின்னால வருகுது.
பார்த்தேன். ஒரு குவியல் கொத்துக்கு மேலே ஒரு ஆட்டுத் தொடை. மறுபடி கூப்பிட்டேன்.
ஆட்டுத் துடை வேணாம்கோழித் துடை இல்லையா?
இது கோழித் துடைதான் தம்பி... கோழிகளுக்கு ரம்பா படங்கள் போட்டுக் காட்டுவார்கள் போல. ஆறு தடியர்கள் சாப்பிடப் போதுமான சாப்பாடு. ருசியோஏக ருசி. அதன் வாசனையிலேயே சைவ உணவு வைராக்க்யத்தை துறந்து தற்காலிக நாத்திகர்களானார்கள் அடுத்த இருவர். பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பால்பக்கட் குடிக்கவந்த கடைசி விக்கட்டும் கோழி வாசனையில் விழுந்தது. எங்கள் நான்கு பேருடைய வாழ்க்கையிலே இதுவரை சாப்பிட்டிராத அளவுருசி,சூட்டுடன் அதனை ஒரு கை பார்த்தோம். ஆண்டி வேறு அன்பாகக் கதைத்ததுவும், வழக்கமான கோழிக்கொத்து விலைதான் என்பதுவும்கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தன.


இதேபோல ஆனைக்கோட்டையில் ஒரு சின்னக் கடையும் எங்கள் நாக்கை கட்டிப்போட்டது. நாலடிக்கு நாலடி கடைஉபசரிப்பு சரியில்லைசம்பல் தரமாட்டார்கள்தேநீரில் தேயிலைக்குப் பதிலாக காய்ந்த சருகைப் போடுவார்கள் என்பது உள்ளிட்ட ஆயிரத்தெட்டு குறைகளைத் தாண்டி எங்களை சுண்டி இழுத்தது அந்தக் கடை வடையின் சுவை. பக்கத்துக் கோயில் தேர் ஆர்ப்பாட்டத்திலும் கூலாகசூடாக வடை சாப்பிட்டதுஅந்த காதலி வீட்டை எட்டிப் பார்க்க காதலன் போவதுபோல்கோப்பாய் போகவேண்டி வந்தாலும் மானிப்பாய் வழி போனது எல்லாமே அந்த வடையின் சுவைக்காகத்தான்.

எல்லாவற்றையும் விட அதிகமாக எனது இதயத்துக்கு நெருக்கமானது ஒரு புங்குடுதீவு எளிய கடை. மதிய நேரத்தில் எதோ இந்துக்களின் விரதகாலத்தில் போனோம். வழக்கம்போல எங்களில் இரண்டு உருப்படி சைவம். முக்காலத்துக்கும் மீன்சாப்பிட்டே உடல்வளர்த்த நான் மீன் சாப்பாடு சொல்லஅவர்கள் சைவச் சாப்பாடு சொன்னார்கள். உள்கட்டுக்குள் இருந்து வந்த ஆயா, “அந்தத் தம்பியளை உள்ளுக்கு கூப்பிட்டு குடு.. என்று எங்களுக்கு பரிமாறிய அன்ரியிடம் (இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வருவது இயற்கை.. என்ன இவன்கள்.. எபோதும் அன்ரி உள்ள கடைகளுக்கே போகிறான்கள்.. என்று. என்ன செய்வது.. என்னுடன் வந்த இரண்டு மனிதர்களும் அன்ரி அன்றி வாழ அறியாதவர்கள். அன்ரிஹீரோக்கள்.) என்னத்துக்கு அப்படி? என்று கேட்டதற்கு, “அவையள் விரதச் சாப்பாடு சாப்பிடுகினம் போலமுன்னுக்கு மீன் இருக்கேக்க சாப்பிடுறது ஒருமாதிரி இருக்கும் தானே...“ என்று அக்கறைப்பட்டார். போதாததற்கு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போலஇன்னும் போடுங்கோ.. என்று அள்ளி அள்ளி நிரப்பினார்கள் கோப்பையை. கருவாட்டில் உப்பும்சாப்பாட்டில் அன்பும் மிகுந்திருந்தன. மறக்க முடியாத வியாபார விருந்து அது.

ஆனால் அப்படியான மறக்க முடியாத அனுபவங்கள் எல்லாக் கடைகளிலும்எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலான சாப்பாட்டுக் கடைகள் வாடிக்கையாளர்களின் மனத்தையோவயிற்றையோ நிறைக்காதவை. கவனிப்புவியாபாரம் கடந்த அன்னியோன்னியம்நேர்மைவியாபார ஒழுக்கம் இல்லாதவை. யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகளின் குறைபாடுகள் ஆயிரம். பிரபஞ்சத்தின் அனைத்து சாப்பாட்டுக் கடைகளுக்கும் பொதுவான குறைபாடுகள்தான் என்றாலும்குறைபாடுகுறைபாடுதானே.

முதலாவதுகவனிப்பு சரியில்லை. வாடிக்கையாளருக்குரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. அது என்ன நாகரிகமோ தெரியவில்லைபோய் இருந்து பத்து நிமிடம் கழித்து ஆள் வரும்ஓடர் கொடுத்தால் அரை மணிநேரம் கழித்து வரும்தண்ணீர்சோடா எல்லாம் கூப்பாடு போட்டு வாங்கவேண்டும்.. இது வியாபாரத்தை பாதிக்கும் வேளை அல்லவா? முதலாளிக்கு நட்டம் கொடுக்கும் செயற்பாடு அல்லவாஇந்த முகம் சுளிக்கும் வழக்கத்தால் யாழ்ப்பாணத்தில் டிப்ஸ் என்கிற கலாசாரமே இல்லாமல் இருக்கிறது.  ஓரிரு சராசரி சாப்பாட்டுக்கடைகள் தவிரஎந்தக் கடைகளிலுமே இந்த நாகரிகம் இல்லை. ஒரு கடையின் சாப்பாடு முன்னே பின்னே இருந்தாலும், உபசரிப்பு நன்றாக இருந்தால் சனம் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் என்கிற அடிப்படை வியாபார உத்தி இல்லையா உங்களுக்குஅதுவும் எங்காவது இருந்து வானிலோகாரிலோ டை கட்டிய கூட்டமோதென்னிலங்கை கூட்டமோஇறங்கிவிட்டால்போச்சு. அப்புறம் எங்களுக்கும் வெள்ளிக்கிழமை பிச்சைக்காரனுக்கும் வித்தியாசமில்லை. அம்மா.. தாயே.. தான். விருந்தோம்பல் என்று சமாளிக்காதீர்கள். ஒருவிருந்தை ஓம்பிமறுவிருந்தை மதிக்காமல் விடுவதா?
காய்ந்த ரொட்டி...

சுத்தம். அது துண்டாக இல்லை. எந் ஒரு சாப்பாட்டுக் கடையினதும்  சமையல் கட்டை பார்க்கவே முடியாது என்பது வேறுகதை. பெரும்பாலான கடைகளில் சிற்றுண்டிகள் வைக்கும் அலமாரிகளே குப்பைக் கூடைதான். மாநகர சபையின் விதிமுறைகளையும் – வாடிக்கையாளர் கேட்கும் பண்டங்களை மட்டுமே வழங்க வேண்டும்சுத்தமான நீர்கைகழுவும் வசதிசெய்தித்தாளை உணவு சுற்ற பாவிக்கக் கூடாது.. – பின்பற்றுவதில்லை. காசை கீசை கொடுத்து ஏபிசி.. என சான்றிதழ்களை மட்டும் வாங்கி மாட்டிவிடுவார்கள். (இப்போது அந்தத் தரச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முறைப்பாடு எழுப்பப் பட்டுள்ளது.) பரிமாறுபவர்களும் சுத்தமாக இருக்கமாட்டார்கள். அவர்களை விடுங்கள். சமைக்கும் பகுதியிலிருந்து ஒரு ஊழியர் மட்டும் வெளியே வந்தார் என்று வையுங்கள்.. அன்னிக்கு டீ குடிச்சாமாதிரிதாண்டா! அத்தனை அசிங்கம். கராச்சில் வேளை செய்பவர் போல இருப்பார்.

அடுத்தது பண விஷயம். மீதிக்காசை தருவதற்கு அத்தனை கஷ்டப்படுவார்கள் கவுண்டரில் நிற்பவர்கள். அதுவும் ஐந்து பத்து ரூபாய் என்றால் எங்களை தவிர்த்துவிட்டு அடுத்தவர்களை கவனிக்க திரும்பிவிடுவார்கள். அப்புறம் தலைகவிழ்ந்து திரும்ப வேண்டியதுதான். அப்புறம் சோடா உள்ளிட்ட பொதி செய்யப்பட்ட பொருட்களுக்கு நிறுவனம் அடித்த விலையிலும் கூடுதலாக விலை போட்டு விற்பது. கேட்டால் கூலிங் காசு என்று சொல்லுவது. சோடா 40ரூபாய் என்றால் இவர்கள் 45 ரூபாய் விற்பார்கள். டிபிடிப் தொடக்கம் எதற்குமே இவர்கள் நிர்ணயம் செய்த விலைதான்.  ஒருமுறை நயினாதீவில் விழாக்காலத்திலே மினிட் மைட் குடித்துவிட்டு பழக்க தோஷத்திலே உரிய காசை கொடுத்ததற்கு அடிக்கவே வந்துவிட்டார் கடைக்காரர். படகிலே கொண்டுவந்ததற்கு மேலதிகமாக காசை அழவேண்டுமாம்.


அடுத்தது சுவையை கூட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அஜினமோட்டோ போன்ற உடல் நலத்துக்கு ஒவ்வாத பொருட்களை போடுவதுமுதல் நாளையின் மீதிகளை கலப்பது உள்ளிட்ட பல கொடுமைகள்... (ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் பரபரப்பான வியாபாரம் நடக்கும் கடைகளில்தான். மந்தமான கடைகள் பெரும்பாலும் சரியாகவே நடந்துகொள்கின்றன.) என்ன எல்லாம் நடக்கிறது என்று பார்க்க, வாருங்கள்யாழ்ப்பாணத்தின் பிரபல கடையான காதாம்பரிக்கு இரண்டு நண்பர்களுடன் போவோம். (பிரக்கட்டுக்குள் உள்ளவை மைன்ட் வாய்ஸ்கள்.)

வாசலில் நாங்கள் போனதுமே கடையின் பொன்னன் அண்ணை வரவேற்றார். அடேய்எங்கட பொடியள் வாறாங்கள்கவனி...! (அடேய்! பலியாடுகள் வந்திருக்குஒரு ரெண்டாயிரத்துக்கு தலையில கட்டு!)
உள்ளே போய் இருந்தோம். காபன் என்கிற சேவர் பையன் வந்தான். எங்களது வயதின் கால்வாசி வயதுதான் இருந்தபோதும், எங்களை  மதிக்கமாட்டான்.
சொல்லுங்கோ அண்ணைமார்என்ன வேணும்? (நீங்க என்ன கேட்டாலும் உள்ளுக்கு என்ன இருக்கோஅதத்தான் தருவம்.)
நாங்கள் சீரியஸாக கலந்தாலோசித்துவிட்டு, “முட்டை கொத்து இருக்கா?
காபன்: வெளீல மழைக்குணமா இருக்குசோமுட்டை போடமாட்டம். (எங்களுக்கு தெரியுமடீநீ முட்டை கொத்து இல்லை எண்டு சொன்னா கோழிக் கொத்து கேப்பாய் எண்டு!)
நான் : கோழிக் கொத்து இருக்கா?
காபன் : அது ஒரு அரை மணித்தியாலம் செல்லும்அதுவரை என்ன சாப்பிடுறியள்?
என்னுடன் வந்த பஜீந்தன் : அப்போ...(அவன் சொல்லத் தொடங்குமுன்னரே மூன்று கோழிக் கொத்துகளுக்கு காபன் ஓடர் சொல்லிவிடுகிறான்.) கோழிக் கொத்து வேணாம்.
காபன் : ஓடர் சொல்லியாச்சே அண்ணாஇனி மாத்த ஏலாது...
என்னுடன் வந்த சொரித்திகன் (எங்களுக்குள்): டேய்வைகோ வை திருப்பி பொடா சட்டத்தில... (சொல்லிக்கொண்டிருக்கும் போதேகடையில் வேலை செய்யும் பார்த்தி அண்ணை மூன்று பெப்சி போத்தல்களை மேசையில் வைக்கிறார்)
நான் : நாங்கள் சோடா கேக்கவே இல்லையே?
பார்த்தி (சொரித்திகனை காட்டி) : இவர்தான் சோடா கேட்டார்.
சொரித்திகன் : அடப்பாவிகளா! சோடாவுக்கும் பொடாவுக்கும் வித்தியாசம் தெரியாதா? மொட்டைத்தலைக்கும்...(காபன் : மூண்டு முட்டைப் போரியல்..!) முழங்காலுக்கும் (பார்த்தி : ஒரு கோழிக் கால் ரோஸ்ட்!) முடிச்சுப் போடுறீங்களே!
நான் : அடங் கொன்னியா!!!
பார்த்தி அண்ணை : தம்பி, பண்ணிக் கறி சனிக்கிழமைதான் போடுவம், போன சனிக்கிழமை போட்டது இருக்கு, வேணுமா?
மூன்று தட்டுக்களில் நாங்கள் கேட்காத கோழிக் கொத்துமுட்டைப் பொரியல்கோழிக் கால்எல்லாம் வருகிறது. மேசையில் எறியப்பட்ட அவற்றை பொறுக்கி அடுக்கி சாப்பிடத் தொடங்கினோம்.
சொரித்திகன் : என்ன பொன்னண்ணைகோழி கொஞ்சம் பழசா இருக்கு?
பொன்னன் : என்னடா அப்பிடி சொல்லிட்டாய்இப்பதாண்டா உரிச்சது.. (ஆனா செத்துத்தான் மூண்டு கிழமை ஆகுது..)
பஜிந்தன் : அடேய் மச்சான் குழம்பை கொண்டா!
நான் : அடேய் காபன்குழம்பை கொண்டா!
சொரித்திகன் : பார்த்தி அண்ணைகுழம்பு!
பஜிந்தன் : குழம்பு!! குழம்பு!! கு..ழ..ம்..பு.... (களைப்பிலே மயங்கிச் சரிகிறான்.)
இப்படி அவரவர் பாணியில் குழம்பை கேட்டுக் கேட்டு சாப்பிட்டு அவரவர் கடைசி சிறங்கை கொத்தை கையில் எடுக்கும்போது குழம்பு வருகிறது.- இல்லைஉருளைக் கிழங்கு குழம்பு இருந்த அண்டாவை கழுவிய தண்ணீர் வருகிறது.
பஜிந்தன் : தண்ணி கொண்டா!
தண்ணீர் வருகிறது.
பஜிந்தன் : பிரிஜ்சுக்குள்ள இருக்கிற போத்தில் தண்ணிய கொண்டாடா!
காபன் : அது வெளிநாட்டுக் காரரோசிங்களவரோ வந்தா குடுக்கிறதுக்கு அண்ணை.. (அவங்களுக்கு மினரல் வோட்டர் எண்டு குடுத்து காசு பார்ப்பம்.)
இதற்குள் கடைக்குள் இருந்து சற்று முகத்துராஞ்சிபோலத் தோற்றம் அளிக்கும் கண்ணராவி வேலைகள் செய்யும் ஒரு வலது வந்து தானாகவே மூன்று மிதிவெடிகளை எங்கள் முன் வைக்கிறது.
வலது: வளருற பிள்ளைகள்சாப்பிடுங்கோ..
சொரித்திகன்: இது நாங்கள் வளருறதுக்காஇல்லைநீங்கள் வளருறதுக்கா?
விதியை நொந்தபடி மிதிவெடிகளை சாப்பிடத் தொடங்கினோம். திடீரென்று பஜிந்தன் கத்தினான் மச்சான்அண்டைக்கு நாங்கள் இங்க ரொட்டியும் ஆட்டுக் கறியும் சாப்பிடும் பொது கறிக்குள்ள பழைய பேப்பர் ஒண்டு விழுந்துட்டு எண்டு சொல்லி கொஞ்சக் கறிய குப்பைக் கூடைக்குள்ள போட்டியே...
நான் : ஓமடாஅதுக்கு என்ன?
பஜிந்தன் :  அந்தப் பேப்பர் என்ட மிதிவெடிக்குள்ள கிடக்கடா!


விதியை நொந்து எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு பொன்னன் அண்ணை வீற்றிருக்கும் கவுண்டருக்கு வருகிறோம்.
நான் : எவ்வளவு அண்ணை?

பொன்னன் : ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது தம்பி.

சொரித்திகன் : கூட்டிப் பார்த்தா ஆயிரத்து எண்ணூற்று நாப்பதுதானே வருகுது?
பொன்னன் : அப்போ உங்களுக்கு ஆளுக்கு ஒரு கடலை உருண்டை எடுங்கோ...

சொரித்திகன் : சரி, பிடியுங்கோ, (இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கிறான்.)
பொன்னன் : சரி. தம்பி, போய்ட்டு வாங்கோ.
சொறி : மீதி காசு?
பொன் : எங்களுக்குள்ள என்னப்பா? சரி, ஒழிஞ்சு போ, அதுக்குப் பதிலா இந்த குச்சி மிட்டாய பிடி...இப்படித்தான் போகிறது காதாம்பரி வாழ்க்கை எங்களுக்கு. இது உள்ளிட்ட ஏராளமான யாழ்ப்பாணக் கடைகளினதும், வீடுகளினதும் சாப்பாட்டைப் பற்றியும், பண்டிகைக்கால விசேட உணவு வகைகளைப் பற்றியும், பாரம்பரியமான எங்களது விசேட உணவுகளைப் பற்றியும், பனையை ஆதாரமாகக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் தனித்துவ உணவுகளைப் பற்றியும்... விரைவிலே ஆராய்வோம்.

No comments:

Post a Comment