Saturday, 16 February 2013

யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு.கொழும்பின் தெருவோர சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிட்டு வயிறு பழுதாகி, ‘மடைதிறந்து பாயும் நதி அலைதான்... என்கிற நிலைமையில் இருக்கும்போது இந்தப் பதிவை எழுதவேண்டிய நிலைமையில் இருக்கிறேன். காலத்தின் கோலம். ஒருவேளை இந்த மொக்கை சாப்பாடுகளால் மனமுடைந்து, அடிக்கடி சொம்போடு காணாமல்போகவேண்டிய நிலைமைதான் பழசை அசைபோடும் வகையில் யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளைப்ப்றி எண்ண வைத்ததோ, தெரியவில்லை.

கொழும்பின் எந்த உணவுக் கடைக்கும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலானாலும் சரி, பத்துக்கு பத்து கடையில் அப்பம் சுட்டு விற்கும் கடையாகட்டும், ஒரு ஒற்றுமை உண்டு. அவரின் மலசலகூடமும், சாப்பாட்டு மேசையும் ஒரே சுத்தத்தில் இருக்கும். இதிலே முன்னையது நமது ஒருவருட பாதீட்டை ஒரே நாளிலே முடிக்குமாதலால், மிளகாய், எண்ணை, பழைய மாவில் செய்த பட்டப்பழைய பண்டங்கள், முகத்துராஞ்சிப் பெண்களின் நடமாட்டம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்த மொக்கை கடைகளிலே சாப்பிட வேண்டி வருகிறது. இது ஆப்பை தேடிப்போய் உட்காரும் வேலைதான் என்றாலும் வேறு வழி இல்லை அமைச்சரே.

சாப்பாட்டுக்கு என்று யாழ்ப்பாணத்துக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. அது உலகளாவிய பெருந்தமிழ் உணவுப் பழக்கங்களோடு ஒட்டாது, பெரும்பாலும் கேரளப் பழக்க வழக்கங்களோடு ஒட்டுகிறது. பிட்டு, சொதி முதலிய உணவுகள் கேரளத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பொதுவானவை, தனித்துவமானவை. சேரர்களின் தொடர்ச்சிதான் யாழ்ப்பாணத்தவர்கள் என்பதற்கு, அவர்கள் சோழர்களின் தொடர்ச்சி என்பதைவிட ஆதாரங்கள் அதிகம். சேரன் தீவு (செரண்டிப்), மலையாளத்தோடு ஒத்துப்போகும் தமிழ்... இதெல்லாம் மானிடவியல். நாம் பார்க்கப்போவது சாப்பாடு.

யாழ்ப்பாணத்தின் அதி முக்கியமான சாப்பாடு ஏனைய உலகத் தமிழர்களுடையது போல சோறு இல்லை. பிட்டு. புட்டு என்று சொன்னால் இன்னும் இதமாக இருக்கும். புட்டு.. எந்தக் கறியுடனும், கறி இல்லாவிட்டால், வாழைப்பழத்துடனோ குறைந்த பட்சம் சீனியுடனோ உள்ளே இறங்கும் உன்னத உணவு. வெள்ளைப் பிட்டு இன்னும் விஷேசம். சுடச் சுட இறக்கப்பட்டால் அதை அப்படியே சாப்பிடலாம். தேங்காய்ப்பூ சேர்த்த பிட்டு அரச உணவு. சுடச் சுட வெள்ளைப் பிட்டுடன் ஆட்டிறைச்சிக் கறியை குழைத்து அடித்துவிட்டு செத்துப்போ என்று சொன்னால்கூட நான் தயார். ஏன், நீங்களும்தான். புட்டு உள்ளே இறங்காதளவு உபாதைகள் வந்துவிட்டால் அதே மிக்சரை உரலுக்குள் போட்டு நசித்தால் இடியப்பம்... புட்டுக்கு முதலிடம் என்றால் இது இரண்டாம் இடத்தை பெறுகிறது. பிறகு கூழ், பனங்காய்ப் பணியாரம் என்று இறங்கினால்... அட போங்கப்பா... பிஸ்ஸா ஹட்டும், கே எப் சியும்... காஞ்சுபோன ரொட்டிக்கு மேல செத்துப்போன கோழிய படுக்க வைச்சு நெருப்பக் காட்டி எடுத்துப்போட்டு ரெண்டாயிரம் ருவா வாங்கிரான்கள்...

இரவு குடும்பமாக உட்கார்ந்து அம்மா குழைத்து தரும் சோற்று உருண்டைகளை சாப்பிடுவது, காலையில் முதல்நாளின் கத்தரிக்காய்/பாகற்காய்/இறைச்சிக் கறியுடன் சாப்பிடுவது.. இப்படி யாழ்ப்பாணத்தின் சாப்பாடு என்பது வெறும் பழக்க வழக்கம் மட்டுமல்லாது ஒரு கலாசாரமாக இருக்கிறது. இது யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் யாழ்ப்பாணத்தவர்களுக்கு புரியும். ஆனால் யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக் கடைகள்.. அது தனிக்கதை. நாம் பார்க்கப்போகும் கதையும் அதுதான்.

யாழ்ப்பாணத்தின் பிரபலமான கடை ஒரு அசைவ உணவுக் கடை. யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த கடை, பெரும்பாலும் எல்லோரும் ஒருமுறையாவது சாப்பிட்ட கடை. சமீபத்தில் ஒரு ஊழியர் அந்தக் கடையின் ஒரு நாள் வருமானமான ஒரு லட்ச ரூபாயுடன் கம்பி நீட்டியதால் கதைகளில் அடிபட்ட கடை. உயர்தர, பல்கலைக்கழக மாணவர்கள், யாழ் நகரத்தில் வேலை செய்வோர், பயணித்து வேளை செய்வோர், வேலைசெய்யாமல் பயணிப்போர்.. எல்லோருக்கும் மூவேளை மூக்குநிறைக்கும் கடை. (இவ்வளவு கஷ்டப்பட்டு அதன் பெயரை சொல்லாமல் எழுதுகிறேன். தயவுசெய்து யாரும் கொமெண்டில் வந்து நீலாம்பரி..!! என்று போட்டுத் தொலைக்க வேண்டாம்.)


நீலாம்பரியோ, காதாம்பரியோ... யாழ்ப்பாணத்தின் சாப்பாட்டுக் கடைகளும் அவற்றின் பண்டங்களும் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தனித்த அடையாளம். விலை, தரம் என ஆயிரம்  விருப்பங்களும் வருத்தங்களும் இருக்கின்றன யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக் கடைகளில். சில குறிப்பிட்ட பண்டங்களுக்காகவே பிரபலமான கடைகளும் இருக்கின்றன. கடையின் பெயருக்காகவே பத்து கிலோமீட்டர் தாண்டிவந்து அப்பளம் வைக்காத சோற்றுக்கு அறுபது ரூபாய் அதிகம் கொடுக்கும் கடைகளும் இருக்கின்றன. ஒரு நாற்பதுநாள் காலம் யாழ்ப்பாணத்தின் எல்லா மூலைகளிலும் சாப்பாட்டுக் கடைகளிலே சாப்பிட வேண்டிய அனுபவம் அடைந்தவன் என்கிற தகுதியில், யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகளை ஆராய்கிறேன்.

கொஞ்ச காலத்துக்கு முன்னர் சைவக்கடைகள் என்று ஒரு கூட்டம் இருந்தது யாழ்ப்பாணத்திலே. மலாயன் கபே என்பது யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த காலமும் உண்டு. இன்றைய இளைஞர்கள் மத்தியிலே கடையிலே சைவச் சாப்பாடு சாப்பிடும் வழக்கம் ஒழிந்து வருகிறது. வெள்ளிக்கிழமையானாலும் கடையில் சாப்பிடும்போது அசைவம் சாப்பிடுவது இந்த நூற்றாண்டில் அப்டேற்றட் இந்துசமயத்திலே அனுமதிக்கப்படுவதால், சைவக்கடைகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அசைவ உணவுகள் – பெரும்பாலும் மாடு தவிர்ந்த அசைவ உணவுகளே, இன்னும் முக்கியமாக கொத்துரொட்டியே கடைகளிலே மக்கள் விரும்பும் முக்கிய சாப்பாடு. அடுத்ததுதான் சோறு.
கொத்து ரொட்டி


மெனு
யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கடைகளின் மெனு ஒன்றுதான். காலையில் இடியப்பம், பிட்டு.. மதியம் சோறு, இரவுக்கு தோசை முதலியவை.  எல்லா நேரமும் கிடைக்கும் உணவுகளும் சில உள்ளன. அவற்றில் முக்கியமானது ரொட்டி. அதுவும் காலை பதினோரு மணிமுதல் இரவு கடை மூடும்வரை கிடைக்கும் கொத்துரொட்டி பிரபலமானது. முட்டை, ஆடு, கோழி, கணவாய், மரக்கறி... இப்படி எதையாவது போட்டு கொத்தும் கொத்துரொட்டி சாப்பிடாதவர்கள் பல்லு முளைக்காக்த பாலகர்கள் மட்டுமே. கொத்துபரோட்டா என்கிற பெயரில் இது இந்தியாவிலேயும் வழக்கத்தில் இருந்தாலும், இலங்கைக்கேயுரிய கொத்தானது மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதாக எண்ண இடமுண்டு.

அடுத்த பிரபலம் மிதிவெடி. ரோலின் பெரிய வேர்ஷனுக்கு மிதிவெடி என்று பெயர் வைத்த மனிதனை தேடித் திரிகிறேன். இதுபற்றி யாராவது சாப்பாட்டு ராமன்கள் ஆராய்ச்சி செய்யலாம். பகல் வேளையில் ஒரு சொடாவோடோ, டீயோடோ கடிக்க மிகப் பொருத்தமான உணவாக எதிர்ப்பின்றித் தெரிவானது மிதிவெடி. ரோல், பற்றிஸ் எல்லாம் வழக்கொழிந்து, வெறும் ஐஸ்கிரீம் கடைகளில் மட்டுமே பரிமாறப்படுகின்றன. உண்மையில் மிதிவெடி என்பது அதற்கு முதல்நாள் மிஞ்சிப்போன சகல கறிகளையும் ஒரு சட்டி அவித்த உருளைக்கிழங்கையும் குழைத்து ரொட்டியால் சுற்றப்படும் ஏமாற்றுவேலை என்று தெரிந்துகொண்டு சாப்பிட்டாலும் அது ருசிப்பதுதான் அதன் வெற்றியின் ஆதாரம். மிதிவேடியையும் தாண்டி முக்காலத்துக்கும் பிரபலம் குறையாத தமிழர் சிற்றுணவென்றால் அது வடைதான்.

யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளில் வெள்ளிக்கிழமைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பூரி, மசால் தோசை போன்ற ஆடம்பர உணவுகள் செய்யப்படுவது வெள்ளி இரவில்தான். அசைவம் வியாபாரமாகாமல் அன்று மட்டும் சரியும் விற்பனையை தூக்கி செங்குத்தாக நிமிர்த்த இந்த ஐடியாவை கண்டுபிடித்தவன்தான் உலகத்தில் ஐடியா மணி என காலப்போக்கில் அன்போடு அழைக்கப்பட்டான்.


இன்னும் ஆராய்வோம், அடுத்த பதிவிலே....

பின்குறிப்பு :
இந்த ஆராய்ச்சியில் எனக்கு உதவியசாப்பாட்டு விஷயத்தில் பழம் தின்று கொட்டை போட்ட.. அல்லது கொட்டையையும் சேர்த்துத் தின்ற சுபராமுக்கு எனது நன்றி. (மேலதிக தகவல் வேண்டுமா? கிளிக்கவும். )

(neethujan bala)

10 comments:

 1. வணக்கம் சகோ,

  அருமையான வர்ணனை, யாழ்பாணம் சென்று சாப்பிட்டு வந்தது போன்ற ஒரு உணர்வு. புட்டு சேட்டன் கடைகளில் சாப்பிட்டது உங்கள் பதிவு படித்து யாழ்பாண கடைகளிடம் சாப்பிட ஆசை வந்து விட்டது.

  சாதி சமய பேதம் எல்லாம் சோத்தை கண்டால் பறக்குது என்பது நமக்கு பிடித்த பாடல் வரிகள்.

  இலங்கை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசை உண்டு. இனிமேலாவது நடப்பது நலமாக இருக்கட்டும்!!!

  யாழ்பாண கலாச்சாரம் பற்றி இன்னும் எழுதுங்கள் சகோ!!

  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல... நிச்சயம் எழுதுகிறோம்.

   Delete
 2. அருமையாக இருந்தது.

  ReplyDelete
 3. மிகச் சிறந்த பதிவு. எனக்கு ஈழத்து உணவு வகைகள் இது வரை சாப்பிட்டதுமில்லை. கேள்விப்பட்டதுமில்லை. இதனை படித்தவுடன் கண்டிப்பாக இதை சாப்பிடவாவது யாழ்ப்பாணம் வர வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி நண்பா.

  ReplyDelete
  Replies
  1. வரவேண்டும்.. இதற்காகவே ஈழத்து உணவு வகைகளைப்பற்றி விரிவாக எழுதுகிறோம். நன்றி.

   Delete
 4. அப்பிடியே பருத்தித்துறைப்பக்கமும் போய்வந்தால் நல்ல பதிவு போடலாம்.கொழும்புக்கடையிலை சாப்பிட்டு நாக்குச்செத்துப்போச்சு

  ReplyDelete
  Replies
  1. போய்விட்டோம் ஐயா.. அடுத்த பதிவு அதைப்பற்றித்தான்..

   Delete
 5. Good Post Bro..

  //மிதிவெடி என்பது அதற்கு முதல்நாள் மிஞ்சிப்போன சகல கறிகளையும் ஒரு சட்டி அவித்த உருளைக்கிழங்கையும் குழைத்து ரொட்டியால் சுற்றப்படும் ஏமாற்றுவேலை என்று தெரிந்துகொண்டு சாப்பிட்டாலும் அது ருசிப்பதுதான் அதன் வெற்றியின் ஆதாரம்.// Very true

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கசப்பான உண்மையையும் சூடான மிதிவெடியுடன் சேர்த்தே விழுங்கிவிடுகிறோம்....

   Delete