Wednesday, 13 February 2013

புதுப்புதுக் காதலர்- ஒரே தினம். ~ காதலர் தினம்.LOVE is blind and lovers cannot see.
The pretty follies that themselves commit.
-Shakespeareஇப்போதைக்கு காதலைப்பற்றி கதைச்சா கோவம்தான் வரும் எண்டது உண்மைதான். ஓடிப்போறது, சிலாக்கி மலாக்கி, வாந்தி எடுப்பது, அப்புறம்கல்யாணம் செய்வது... இதுதான் காதல் என்று திருத்தியே எழுதிவிடும் அளவுக்கு இருக்கிறது டிங்கோல்பி. அதனால் கடுப்பாகி இருக்கும் உங்களின் ஆறுதலுக்காக, காதலர் தின வாழ்த்துக்கள்!

#    #     #காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்,
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்.
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்,
காணமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம்.
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே,
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்,
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்,
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

என்று, காதலினால் ஏற்படக்கூடிய  நன்மைகளையெல்லாம் எடுத்துக்கூறி, ஆதலினால் காதல் செய்வீர்! என்று நம்மைக் காதலிக்க அழைக்கிறார் பாரதியார்.  ஆகவே, வாருங்கள் மாதர்களே, காதலிப்போம் – மன்னிக்கவும், மாந்தர்களே, காதலிப்போம்.

மனித மனங்களைப்பற்றி பிரித்து மேய்ந்த சிக்மண்ட் பிரய்ட் தான் சாகும்போது யாரையோ கூப்பிட்டு சொல்லிவிட்டு செத்தார், நாங்கள் காதலைப்பற்றி தெரிந்துவைத்திருப்பது மிக மிகக் கொஞ்சம்தான். என்று. அவருக்கே கண்ணைக் கட்டவைத்த காதல் – அப்படி என்னதான் அந்தப் பதார்த்தம்? மார்க் அண்டனி தொடக்கம் மார்க் சக்கர்பேர்க் வரை சக்கையானது என்னத்துக்கு? வாருங்கள், பிரித்து மேயலாம்.
# # #

4 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் காதல் பிறந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் பலகாலமாகவே அதை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. விஞ்ஞானிகள் கூட அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. பிறகு, பாலியல் வியாதிகள் மனித சமுதாயத்துக்கு பெரும் சவாலாக எழுந்தபோதுதான், ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் வருடக்கணக்காக இணைத்துவைக்கும் ஒரு பிணைப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் மட்டுமே வாழ்வது உலகில் வெறும் 3% உயிரினங்களுக்கிடையிலேயே நடக்கிறது. (மனிதனுக்கும் அதை கட்டாயமாக்கியது எய்ட்ஸ்.) எவ்வாறாயினும், முன்பெல்லாம் காதல் இனப்பெருக்கத்துக்காக ஏற்பட்ட உணர்ச்சி மட்டுமே என்று நம்பிவந்தார்கள். பின்னர் அது வெறும் இனப்பெருக்க உணர்ச்சியல்ல, அதையும் தாண்டியது என்பதை உளவியல் ரீதியாக ஒத்துக்கொண்டார்கள். 1918 இல் ஏர்னெஸ்ட் மொரோ என்கிற ஜெர்மன் மருத்துவர், ஒரு குழந்தை பிறந்தவுடனேயே முதல் வேலையாக அரவணைப்பைத் தேடுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்அதாவது, அரவணைப்பை தேடும் வேட்கை நமது மரபணுக்களிலேயே பதிக்கப்பட்டுள்ளது. வெறும் இனப்பெருக்கத்தை நாடும் உணர்ச்சியல்ல என்பதால்தான் காதல் ஒரே பாலாரிடையேயும் வருகிறது.

அடிப்படை உயிரியல் ரீதியாகப் பார்த்தால், காதல் என்பது நமது இன நீடிப்புக்குத்தேவையான ஒரு முக்கிய அம்சம். ஒரு பெண், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை, ஒரு ஆரோக்கியமான தொடர்ச்சியாக வரவேண்டும் என்பதற்காக அதற்கு ஒரு பொருத்தமான ஆணை (கிடைத்தால் அல்ஃபா ஆணை.) தேடிக்கண்டுபிடிக்கும் நிகழ்வே காதல். இவ்வாறே ஆணுக்கும். இப்படியாக இருவரும் பொருத்தமானவரை தெரிவுசெவதால், குழந்தை மிகப்பொருத்தமானதாகப் பிறக்கிறது. பரிணாமத்தத்துவம் பயன்படுகிறது. தப்பும் தக்கதே பிறக்கும் ஏற்பாடே காதல். ஆதலினால் காதல் செய்வீர்!

இன்னும் கொஞ்சம் ஓவர் உயிரியல் ரீதியாகப் பார்த்தால், நாம் காதலில் விழும்போது என்ன செய்கிறோம்? கைகால் உதறுகிறது, இதயத்துடிப்பு எகிறுகிறது, இன்னும் என்னென்னவெல்லாமோ செய்கிறது.(காற்றில் தலைமயிர் கலைவது, இளையராஜா இசை கேட்பது, உடனடியாக சுவிஸில் சேர்ந்து பாட்டுப்பாடுவது எல்லாம் இல்லை.) எல்லாவற்றுக்கும் காரணம் டொபாமைன் (Dopamine) எனும் ஒமோன். இந்த ஒமோனுக்கு இச்சை இரசாயனம் என்றே பெயர். (Pleasure Chemical.). காதலியை பார்த்ததுமே மூளையின் ஹைபோதலாமஸ் என்கிற பகுதி செயட்படத் தொடங்குகிறது. அது amygada பகுதியை தூண்டிவிட, அங்குதான் சுரக்கிறது டொபாமைன். போதாததற்கு நொர்பைன்பிரைன் (Norepinephrine) என்று அதிரினலினுக்கு இணையான ஒரு ஒமோன். இதுதான் இதயத்துடிப்பை படபடக்கவைக்கிறது. இந்த இரண்டு ஒமோன்களும்தான் காதலுக்கு முக்கியமான காரணங்கள். நாம் காதலிக்கும்போது, காதலிக்கும் நபருக்குப் பக்கத்திலிருக்கும்போது இவையெல்லாம் அமளி பண்ணும். இன்னும் டேஸ்ட்டேஸ்டெரோன், ஈஸ்டிரஜன், ஒக்ஸிடோசின் என்று பலப்பல ஒமோங்கள் சுரந்துதான் காதலர்களை அடுத்தடுத்த வேலைகளை செய்யவைக்கின்றன. காதலர்கள் காதல் மயக்கத்திலிருந்தபோது அவர்களுக்கு MRI Scanning செய்துபார்த்தார்கள். மூளையின் 2 பாகங்கள் காதலின்பொது அதிகமாக இயங்கின. அவை பொசி (Foci) மற்றும் மீடியா இன்சுலா (media insula). (ஆதலால் உலகத்தீரே, காதல் இதயத்தில் இல்லை.)

ஆராய்ச்சியில் இன்னொன்றும் கண்டுபிடித்தார்கள். காதல் செரோடோனின் (serotonin) என்ற ஒமோன் சுரக்கும் அளவைக் குறைத்துவிடும். இந்த ஒமோன் சுரப்பது குறைவதால்தான் ஒப்செஸ்ஸிவ் கொம்பல்ஸிவ் டிஸோர்டர் ஏற்படுகிறது. (Obsessive – Compulsive Disorder – ஏதாவது ஒன்றை திரும்பத் திரும்ப சந்தேகிப்பது, சில அர்த்தமற்ற காரியங்களை செய்வதை பழக்கமாக வைத்திருப்பது – இதெல்லாம்தான் இந்த நோயின் குணங்கள். இந்த நோயின் குணங்களைத்தான் காதலர்களும் காட்டுகிறார்கள்.)
# # #

அப்படியானால் கண்டதும் காதல்? அதுவும் ஒகேதான். ஹில்டன் ஹோடெல்களின் நிறுவனரான கொன்றட் ஹில்டன், 1924ஆம் ஆண்டு ஒரு தேவாலயத்தில் தனக்கு முன்னால் 5 வரிசைகள் தள்ளி இருந்த ஒரு சிகப்புத் தொப்பியை கண்டார். கண்டதும் அந்த தொப்பியின்மேல் காதல் கொண்டார். தேடிப்பிடித்து, அந்தத் தொப்பியையே திருமணம் செய்துகொண்டார். எப்படி? நாம் சிறுவயதுமுதலே, நம்மை அறியாமலேயே,  லவ் மப் (Love Map) ஒன்றை உருவாக்குகின்றோம். நமக்குப்பிடித்த பல விடயங்களை சேர்த்து, ஒரு துணையின் உருவத்தை வரைந்து வைத்திருக்கிறோம், அதோடு பொருந்தக்கூடிய ஒரு உருவத்தை நாம் பார்த்தவுடனே காதல் வந்துவிடுகிறது. (எடிபஸ் கொம்ப்ளெக்ஸ் படி அந்த மப்பில் பெரும்பகுதி ஆண்களுக்கு தமது அம்மாவாகவும், பெண்களுக்கு அப்பாவாகவும் இருக்கும்.) சிக்மண்ட் பிரய்ட் காதலைப்பற்றி நிறைய சொன்னார். முதன்முதலில் ஏற்படும் காதல் – primo affecto – இதுவரைக்காலமும் தேக்கிவைத்த இச்சையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும், அத்தோடு, அதிகப்படியான உணர்ச்சிவசப்படலும் சேர்ந்துதான் காதலாகிறது என்றார்.
# # #

சீனாவுக்கு முதன்முதலில் போய் புண்ணாக்கு விற்ற பேதி அதர்மர் ஒரு தமிழர் என்று பெருமைப்படலாமோ, இல்லையோ, ஆனால் தமிழர்கள் காதலுக்காக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உலகளவில் காதலுக்காக இத்தனை இலக்கியங்கள் வேறு எந்த மொழியிலும் இருந்திருக்குமா, தகவலில்லைபொருந்தாக் காதல், ஒருதலைக் காதல், இறைவன்மேல் காதல், காதலுக்கு இறைவனை தூதுவிடுவது, தமிழையே தூதுவிடுவது.... சங்ககாலம்முழுவதும் புலம்ப விட்டிருக்கிறது, புலவர்களை காதல். 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா...' என்பதைக்கூட யோசித்திருக்கிறார்கள்.(உடன்போக்கு : காதலனும் காதலியும் சுற்றத்தார் எதிர்ப்பை மீறி, ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது.)

குறுந்தொகையின் பின்வரும் பாடல்தான் காதலின் தமிழிலக்கியப் பிரதிநிதி.

  யாயும் ஞாயும் யாரோ, கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.

( உம்மள எனக்குத்தெரியாது, என்ன உமக்குத்தெரியாது, உம்மட அப்பாவும் என்ர அப்பாவும் சொந்தமோ தெரியாது, என்ன எப்பிடித் தெரியும் எண்டு கெட்டுப்போடாதேம், அதுவும் தெரியாது... ஆனா ஒண்டு மட்டும் தெரியும்.. செம்மண்ணுக்குள்ள ஊத்துண்ட தண்ணி சிவப்புக்கலராகுறதுபோல, எங்கட இதயங்கள் கலந்துட்டுது.... நான் மண், நீர் தண்ணி... 
தண்ணி, நான் உம்மளக் காதலிக்கிறன். )

அருமையான இந்தப் பாடலைப்போல எத்தனையோ பாடல்கள்மூலம் காதலைப் போற்றியிருக்கிறார்கள் தமிழர்கள்.

அப்படி தமிழர்கள் காதலை கொண்டாடினார்கள் என்றால் பிறகு ஏன் இன்று காதலுக்கு இத்தனை எதிர்ப்பு? அதற்குக் காரணம் நமது கலாசாரத்தில் அந்நியர்கள் கலந்ததுதான். ஆரியர்களின் கலப்பு, தமிழர்களிடையே இருந்த பொதுவுடைமை சமுதாயத்தை தொலைந்துபோகப் பண்ணியது. இந்துமதம் வந்தது. சாதி ஏற்றதாழ்வுகள் வந்தன. பின்னர் வெள்ளையர்கள் வந்தார்கள், உள்ளவன், இல்லாதவன் என்று தராதர வறுபாடுகள் வந்தன. காதல் போயே போனது. சீதனம், சாதி, சமூக ஏற்றத்தாழ்வுகள், எல்லாவற்றையும் ஒழிக்க ஒரே வழி காதலிப்பதுதான் நண்பர்களே. ஆதலினால் காதல் செய்வீர்!
# # #


# # #

இந்த காதல் தோல்வி, காதல் தோல்வி என்கிறார்களே, அதுதான் என்ன பதார்த்தம் என்று இந்த வலைப்பதிவை எழுதிய மனிதரால் கண்டுபிடிக்க முடியவில்லை. காதலிப்பது என்பதே மனிதக் கணக்கில்  ஒரு வெற்றிதானே? பிறகு என்ன தோல்வி? கல்யாணம் செய்துகொள்வதுதான் வெற்றி என்று பல்லோரும் நினைப்பதால்தான் கல்யாணத்தின்பின் அவர்களால் காதலிக்கவே முடிவதில்லை. அல்லது கல்யாணம் நடக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காதலில் தோல்வி என்று ஒன்றும் இல்லை. காதலிப்பது வெற்றி, காதலிக்கப்படுவது பெருவேற்றி. அவ்வளவுதான். தோல்வி என்று ஒன்று இருக்குமானால், அது காதலிக்காமலே வாழ்வதைக் குறிக்கும். காதலித்து இழப்பது, காதலிக்காமல் இருப்பதைவிடச் சிறந்தது.

காதலில், ஒருவர் சார்பாக மற்றொருவர், அல்லது இருவருமே இறப்பதுதான் காதலின் முடிவாக இருக்கமுடியும். ஆனால் இந்தக் காதலர்களின் பிரிவு இருக்கிறதே, அதுதான் சுவையாக இருக்கிறது உலகத்துக்கு. உலகளவில் பிரபலமான காதல் சிறுகதை வெண்ணிற இரவுகள். (White Nights – Fyodor Dostoyevsky) காதல் ஜோடி ரோமியோ ஜூலியட். காதல் சின்னம் தாஜ் மஹால், இப்படி பிரிந்த காதல்தான் பிரபலமாகிறது. மனரீதியான காரணம் என்னவென்றால், எல்லோருக்கும் பிரிக்கப்பட்ட காதல் கதை ஒன்று இருக்கும் (காதல் தோல்வி என்பார்களே, அந்தக் கொடுமைதான்.). அந்தச் சோகம் இன்னொரு இடத்தில் கிடைக்கும்போது ஏற்படும் அனுதாபம்தான் அவை பிடித்துப்போகக் காரணம். இரண்டாம்தடவை எடுக்கப்பட்டபோது TITANIC பிடித்துப்போகவும் அதுதான் காரணம், விண்ணைத்தாண்டி வருவாயா பிடித்துப்போவதற்கும் அதுதான் காரணம். சங்கத்தமிழின் காதல் பாடல்களிலும் பிரிவின் பாடல்கள்தான் அதிகம். அட, அதையெல்லாம் விடப்பா.. பேஸ்புக்கே காதலின் பிரிவின் வடிகால்தானே.

# # #
காதல் :சில தகவல்கள். பெருமூச்சொடு வாசிக்கவும்.
# சராசரியாக ஒருவர் திருமணத்துக்கு முன், 7 தடவை காதலில் விழுகிறார். (திருமணத்துக்குப் பின்? அது அவரவர் மனைவியின் முகராசியைப் பொறுத்தது.)

# நானெல்லாம் காதலிக்கவே மாட்டேன்! என்கிறாரா நண்பர்? அவருக்கு உள்ள வியாதி ஹைபோபிடுய்டரிசம் (hypopituitarism). வைத்தியரை அணுகவும்.

# நாம் காதலிப்பவர் நம்மை கடுப்பாக்கினால், அவர்மீது வெறுப்புக்குப் பதிலாக காதல் கூடுவதற்குப் பெயர் frustration attraction.

# LOVE என்கிற பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. லப்யாதி என்றால் சமஸ்கிருதத்தில் ஆசை என்று பொருள்.

# திருமணத்தின்போது இடதுகையின் நான்காவது விரலில் மோதிரம் அணிவதன் காரணம், அந்த விரலிலிருந்து நேரடியாக இதயத்துக்கு செல்லும் காதல் நரம்பு (vena amoris) இருந்தது என்று பண்டைய கிரேக்கர்கள் நம்பியதுதான். 
# காதலின் சர்வதேச அடையாளம் ரோஜா. அதிலும்
சிகப்பு ரோஜா - உண்மைக் காதல்
மென்சிகப்பு ரோஜா - ஆசை, வெறித்தனமான காதல்
தடித்த மென்சிகப்பு ரோஜா - நன்றிக்கடன் காதல்
மஞ்சள் ரோஜா - நட்பிலிருந்து, பொறாமையால் காதல்
வெளிர் ஊதா ரோஜா - கண்டதும் காதல்
வெள்ளை ரோஜா - அர்ப்பணிப்பான காதல்

# facebook நிறுவனர் மார்க் சக்கர்பேர்க் தனது காதல் தோல்வியிலிருந்து மீளத்தான் facebook ஐயே உருவாக்கினார்.

# காதலின் உலக நினைவுச்சின்னம் தாஜ் மஹால். அதேபோல், பண்டையகால 7 அதிசயங்களுள் ஒன்றாக ஒரு அரசி, தனது கணவனுக்காகக் கட்டிய கல்லறை இருந்தது. அதுதான் மொசோலியம். (அதைப்பற்றி அறிய, கிளிக்கவும்.)
நீதுஜன் பாலா

No comments:

Post a Comment