Saturday, 3 November 2012

SHARE IF YOU ARE PROUD TO BE A தமிழன்!!! (2)

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே என்பது தமிழில்தானே சொல்லப்பட்டது? அதை ஏன் மறந்தோம்? பழையதுகளை பாடிக்கொண்டிருக்க வேண்டாம் என்பது பழைய பாடலிலேயே உள்ளதே? பிறகென்ன?தமிழ் பழமையானது, மூலம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முதலானது, எகிப்திலிருந்து அவுஸ்திரேலியா வரையான எல்லா மொழிகளிலும் செல்வாக்கை காட்டிய வேர்மொழி, உலகின் முதல் நாகரிகங்கள் தமிழோடு இணைந்தவை, இதெல்லாம் உண்மைதான். அதற்காக மனித நாகரிகமே வளராத முப்பதாயிரம் வருடங்களுக்கு முன் தமிழ் பேசப்பட்டது என்பது கேட்கவே சிரிப்பாக இல்லை? மனித உருவமே முப்பதாயிரம் வருடங்களுக்குள் எவ்வளவோ மாறியது, மொழி மாறவில்லையாம். கண்டத் தகட்டு நகர்வுகளோடுகூட தமிழை இணைக்கிறார்கள். லெமூரியா மூழ்கிய காலத்திலேயே தமிழ் இருந்ததாம், அதைக்கூட மன்னிப்பேன், அபோதுதான் முதல் தமிழ் சங்கம் இருந்ததாம். அதுவே நாலாயிரம் வருடங்களுக்கு மேல் நடந்ததாம். சீப் கெஸ்ட் சிவபெருமானாம். கேட்கிறவன் கேனையன் என்றால் கே ஆர் விஜயா மகன்தான் ஏ ஆர் ரஹ்மான் என்பீர்களா?


அடுத்தது தமிழர்களின் தொழில்நுட்பம். என்னமோ அணு என ஒரு சொல் இருக்கிறதாம். அதை வைத்து அணு விஞ்ஞானம் லெவலுக்கு போய் விட்டார்கள். துகள் என்பதை குறிக்க அணு என்கிற சொல் இருந்ததென்னமோ உண்மைதான், அதற்காக இப்படியா? இப்படி தேவையில்லாததைஎல்லாம் கத்தி, உண்மையான தமிழர் அறிவியல் கண்டுபிடிப்புக்களை மறந்துவிடுகிறோம். அன்றிலிருந்து இன்றுவரை கணிதம் தான் தமிழர்களின் முக்கிய அரசு. அடுத்தது கட்டுமானம். (கட்டடம் மற்றும் கடற்கலங்கள்.) அடுத்தது வானியல். அதை ஒரு பெருமையாக சொல்லு என்றால் அதை மறந்து விடுகிறார்கள். தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து இராவணனின் விமானம் பறந்ததாம், ஆகவே தமிழன் விமானம் வைத்திருந்தான் என்கிற அளவுக்கு போய்விட்டது தமிழ் வெறி. 
நாம் தமிழராக இருந்து வெட்கப்பட வேண்டிய ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன. அவற்றை முதலிலே திருத்துவோம் வாருங்கள். எத்தனை எத்தனையோ அபத்தங்களை தினம்தோறும் செய்து தமிழ்த்தாயை துகிலுரியும் அளவுக்கு கேவலப்படுத்துகிறோம். பிறகு இணையத்திலே தமிழராயிருக்க பெருமை என்று போட்டால் சரியா? 


என்னை மிகவும் கடுப்பாக்கியது இந்த அங்கோர் வாட் கோயில் பற்றிய நமது பெருமிதம்தான். அண்மையில் ஒரு நண்பர் இணையத்திலே இந்தக் கோயிலின் புகைப்படத்தை உலவ விட்டிருந்தார். ‘பண்டைத் தமிழரின் சாதனைகளில் ஒன்று!!! பாருங்கள்!!! நம் முன் தமிழ் மன்னர்கள் கம்போடியாவை வென்று அங்கே உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலை கட்டினார்கள்!! எத்தனை பெருமை!!! தமிழனே பெருமைப்படு! என அதட்டியது அது. தமிழ் மன்னன் ஒருவன் இன்னொரு நாட்டை போரில் வென்று, அங்கே தனது மதக் கோயில் ஒன்றை கட்டுவது ஏற்கத்தக்கது, அது பெருமை என்றால், கிளிநொச்சியிலே விகாரைகள் கட்டுவதும் சரிதானே? இது தவறு என்றால்,அங்கே அங்கோர் வாட் கட்டியதும் வெட்கக் கேடுதானே?


பிச்சை

பிச்சை எடுப்பது என்பது என்பது மிகக் கேவலமான செய்கையாக பண்டைத் தமிழர் மத்தியிலே கருதப்பட்டு வந்தது. பிச்சை (பிட்ஷை) என்கிற வடசொல்லுக்கு நேரான தமிழ் பதமே இல்லை. இரத்தல் என்பதுவும் புலவர்கள் பாடல் பாடிக்காட்டி செல்வரிடம் பொருள் பெறும் நடவடிக்கையையே குறிப்பிடுகிறது. சமண சமயத்திலே துறவிகள் பிச்சை கேட்டு உண்ணும் வழக்கமே தமிழில் பிச்சை அறிமுகம். அதுவரை பிச்சை என்பது மானக்கேடாக இருந்திருக்கிறது தமிழர் சமூகத்தில். கேட்க வாயில்லாத பசுவிற்காக- அதற்குத் தண்ணீர் வேண்டுமென்று நாவால் கேட்டு பிச்சை எடுப்பதுவே இழிவு என்கிறார் வள்ளுவர். அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமூக மதிப்பீடு அதாக இருந்திருக்கிறது.

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
தமிழர் பெருமை - இன்றைய வேர்ஷன்.
அப்படியானால் அந்தக் காலத்திலேயே எல்லோருமே நிறைவுடன் இருந்தார்களா? பிச்சையே தேவைப்படவில்லையா? இல்லை. மானம் என்கிற தமிழர் பண்பாடு பிச்சை எடுப்பதை அனுமதிக்கவில்லை. ஆனால் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அவர்கள் வாயால் கேட்க முதலே உணவும் உறையும் வழங்கும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் பலகாலமாக நீடித்திருக்கிறது. ஒற்றை ஊரில் விளைத்து நாட்டுக்கு சோறிடும் வழக்கம் இருந்த பண்டைத் தமிழர் நாட்டில் பிச்சைக்கு வாய்ப்பிருக்காது. பிச்சை எடுப்பது கேவலம் என்கிற மனப்பாங்கு தமிழரிடையே இல்லாது போனது ஏன்? முதலில் எவ்வாறு பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள்? உதவ யாருமற்ற நிலைமை ஏன் உருவாகிறது? தமிழரின் கேட்க முதலே உதவும், உறவை மதிக்கும், மானத்தை பெரிதாக எண்ணும் பண்பு இல்லாமல் போனதன் அறிகுறிதானே பிச்சையும், தர்மமும்? பிச்சை என்கிற சொல்லே இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோருக்கு இது வெட்கக் கேடல்லவா? பிறகு எப்படி தமிழராயிருப்பதற்கு பெருமைப்படுவது?

இளங்கோவடிகளுக்கு பின்னர் உலகம் போற்றும் தமிழ் காவியத்தை தந்த தனுஷ், ஒரு தமிழர்!
உடை

உடுப்பது என்கிற கருத்துப்படவே உடை என்கிற சொல்லும், (காற்றில்) ஆடுவது என்கிற பொருள்படவே ஆடை என்கிற சொல்லும் உருவாயின. ‘உண்பது நாழி, உடுப்பவை இரண்டே எனப் புறநானூற்றில் செய்தி உள்ளது. எத்தனை செல்வனாயிருந்தாலும், எத்தனை ஏழையாயிருந்தாலும், உடம்பில் உடுக்கக்கூடியது இரண்டே – அரையில் சுற்றும் அரையாடை, மேலில் சுற்றும் மேலாடை. உடுத்துவது என்கிற சொல்லும் ஒரே துணியை உடலில் சுற்றுவது என்கிற பொருளையே கொண்டது.

ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்கள் உடை இடுப்பில் சுற்றிய துணியாக இருந்திருக்கிறது. வெட்டி எடுக்கப்பட்ட துணி என்கிற பொருளில் வெட்டிதம் என்கிறதாக அந்த உடையின் பெயர் அமைந்திருக்கிறது. பின்னர் அதுவே வேட்டி ஆனது. மேலே அணியும் துண்டுக்கு உத்தரீயம் என்று பெயர். அவரவர் குடியின் பெருமைக்கேற்ப வேட்டியின் நீளமும், (முழங்காலிலிருந்து கணுக்கால் வரை) உத்தரீயத்தை கட்டும் இடமும் (தலையிலிருந்து தோள், இடுப்பு என) மாறுப-ஆடுகிறது. ஆனால் எல்லா குடிக்கும் பொதுவான ஆண்கள் ஆடையாக வேட்டியும் உத்தரீயமும் காணப்படுகிறது. எனவே வேட்டியை கலாசார ஆடை என்பதிலே தவறில்லை.
தமிழின் பெருமை தெரிகிறதா?

இந்தப் பெண்கள் அணியும் சேலை என்கிற இடத்திலேதான் கலாசாரம் கந்தலாகிறது. ஒன்பதாம் நூற்றாண்டுவரை பெண்கள் மார்புக் கச்சைகளை அணிவதில்லை. ஆண்களைப்போலவே இடையில் சுற்றும் துணியுடனே அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் உத்தரீயம் அணிந்ததற்கும் சான்றுகள் கல்வெட்டுகளிலோ, சிற்பங்களிலோ, பாடல்களிலோ இல்லை. பண்டைத் தமிழ்ப் பெண்களின் மார்பகமானது காமத்தை தூண்டும் பொருளாக இருக்கவில்லை. (இன்றளவும் ஆபிரிக்க, ஆசிய, அவுஸ்திரேலிய ஆதிவாசிப் பெண்கள் மார்பில் ஆடைகள் அணிவதில்லை.) மாறாக அது வெறுமனே பாலூட்ட பயன்படும் பொருளாகவே இருந்திருக்கிறது. பாடல்களில் மார்பகத்தை வர்ணிக்கும்போதுகூட அது பெண்ணின் வளமையையும், பாலூட்ட- அதாவது தாயாக – அவள் தகுதியானவள் என்கிற பொருள்படவே வர்ணிக்கப்படுகிறது. எப்படி ஆண்களை வர்ணிக்கும்போது அவர்களது வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் பெருத்த தோள்களை எடுத்துக்கொள்வார்களோ, அவ்வாறே, பெண்களை வர்ணிக்கும்போது அவர்களது தாய்மையை, வளமையை குறிக்க மட்டுமே மார்பகத்தை எடுத்துக்கொண்டார்கள். கவர்ச்சி, ஆபாசம் என்கிற கண்ணோட்டம் அப்போது இருக்கவில்லை.  அரசர்கள் முன்னிலையில் அரசிகளை வர்ணிக்கும்போதும், தெய்வங்களை வர்ணிக்கும்போதும் சற்றும் கூசாமல் அவர்களின் மார்பகங்களை வர்ணித்திருக்கிறார்கள். இதிலிருந்து மார்பகம் என்பது அத்தனை தர்மசங்கடமான அங்கமாக இருந்திருக்கவில்லை எனது தெரிகிறது. பாலூட்டுதல் என்கிற உன்னத நோக்கத்துக்கு படைக்கப்பட்ட அதனை, அந்தக் கண்ணோட்டத்திலே மட்டும்தான் நமது பண்டையோர் பார்த்திருக்கிறார்கள்.

தமிழை இவர்கள் பாதுகாக்கிறார்களாம். தமிழ் என்ன, கன்னிப்பெண் கற்பா, பாதுகாக்க?

மார்பை மறைக்கும் ஆடைப் பயன்பாடு சிலப்பதிகார காலத்தின் பின்னர்தான் ஏற்பட்டது. எனினும் அப்போதும் இன்றளவில் நாமனைவரும் கலாசார ஆடை எனப் பெண்களை அணிய வற்புறுத்தும் சேலை கட்டும் வழக்கம் ஏற்படவில்லை. மார்புக் கச்சைகளே அணியபட்டன. கீழே அரையாடை, மார்பில் கச்சு, அதன்மேலே உத்தரீயமாகிய மேலாடை இவையே தமிழ்ப் பெண்களின் உண்மையான பாரம்பரிய கலாசார ஆடையாக இருக்க முடியும். அப்படியானால் சேலை?

தமிழ் மன்னர்களின் பயந்து ஓட்டம் மற்றும் துரோகத்தால் விஜயநகரப் பேரரசு தமிழகத்திலே பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. தெலுங்கர்களின் குடியேற்றங்கள் தமிழகத்திலே ஏற்பட்டது. அப்படித்தான் சேலை கட்டும் வழக்கம் தமிழ்ப் பெண்களிடை ஏற்பட்டது. நாங்கள் பெண்களின் கலாசார ஆடை என போற்றித் துதிக்கும் சேலை தமிழரின் உடை அல்ல. தெலுங்கர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய - அந்நிய  உடைதான்.

புடவை என்கிற சொல்லானது ஆண்களும், பெண்களும் அணியும் எல்லாவிதமான உடுப்புக்களுக்கும் பொதுப் பெயராக அமைந்தது. பண்டைத் தமிழரின் அனைத்துவகை ஆடைகளும் நீண்ட துணியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட துணித் துண்டுகளாக இருந்தனவே அன்றி தைக்கப்பட்டோ, வெவ்வேறு வடிவங்களிலோ இருக்கவில்லை. கோவணம், வேட்டி, உத்தரீயம், கச்சை, மேலாடை அனைத்துமே துண்டுகள்தான். பிற்காலத்தில் சோனகர் வந்த பிற்பாடே தைத்து அணியும் வழக்கமே தமிழரிடையே ஏற்பட்டது.

இதன்மூலம் சொல்ல வருவது என்ன என்றால், நமது கலாசார ஆடை என நாம் நினைக்கும் ஆடை நமது உடையே அல்ல. அன்னியருடையது. பாடசாலைகளில் போசைகளின்போது கலாசார ஆடை அணிந்து வாருங்கள் என்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது ஆண்கள் வேட்டி, சேட், பெண்கள் புடவை. இதிலே வேட்டியைததவிர எதுவுமே தமிழர் ஆடைகள் இல்லை. இதிலே பெண்கள் பஞ்சாபி, ஜீன்ஸ், டீ சேட் அணிந்தால் கலாசார சீரழிவு என்றும், சேலை அணிந்தால் பண்பாடு என்றும் கத்துகின்ற கோட்டத்தின் அறியாமைதான் எரிச்சலூட்டுவது. உண்மையான கலாசார ஆடை என்றால் இப்போது பெண்கள் நவீன ஆடைகள் அணியும்போது வெளியே காட்டும் அங்கங்களிலும் அதிகளவு வெளியே காட்டவேண்டும். மார்பை வெளியே காட்டுவது அல்ல, மார்பை மறைக்கும் சூழ்நிலை பெண்களுக்கு ஏற்பட்டதுதான் உண்மையாக தமிழர் கலாசாரத்தில் ஏற்பட்ட சீரழிவு. வணக்கப் பொருளாக இருந்த யோனி, தாய்மைப் பொருளாக இருந்த மார்பகம் எல்லாம் போதைப் பொருளாக ஆனது இருக்கிறதே, அதுதான் சீரழிவு. அது தெரியாதா நாய்கள்தான் பெண்களின் ஆடைகளை வைத்து கலாசாரத்தை மதிப்பிட்டு கத்துகின்றன.

முதலில் முஸ்லிம்கள், ஆரியர்கள்.. பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆங்கிலேயர்கள் இவர்கள் வந்தபிறகுதான் உடலை மூடி ஆடை அணியும் வழக்கமே தமிழரிடையே பரவியது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் காலம்வரை யாழ்ப்பாணத்திலே பெண்களில் பெரும்பாலானோர் மார்பை மறைக்க துணிகளை அணிந்திருக்கவில்லை. இது எல்லாமே ஐரோப்பியர்களும் ஆரியர்களும் கொண்டுவந்த மாயை. கடுங்குளிர், அல்லது மணற்புயல் என்கிற சூழல்களில் புவியியல் அவர்களை உடலை மூடி ஆடை அணிய கட்டாயப்படுத்தியது. பிற்காலத்தில் கடும் வெப்ப நாட்டில் வாழும்- உடலை திறந்து வைக்கவேண்டிய தமிழர்களை அவர்கள் ஆண்டபோது அவர்கள் தமிழர்களை அந்தப் பழக்கத்துக்கு திணித்துவிட்டார்கள்.
ஆகவே தமிழர்களே, பெண்களின் அங்கங்களை போதைப்பொருளாக ஆக்கப் பழகிய பழக்கத்தின், நாம் அடிமைகளாக வாழ்ந்த வரலாற்றின் எச்சங்கள்தான் இப்போது நமது கலாசார ஆடைகளாக இருக்கிறது. அதற்காக பண்டைத் தமிலர்போல அவிழ்த்துவிட்டுத் திரிய வேண்டும் என்பதல்ல, நாம் வாழும் காலத்துக்கு ஏற்றாற்போல ஆடை அணிவதில் தவறில்லை, அவசியமும்கூட. அப்படி இருக்கும்போது, நமது முன்னோரில் ஒரு குறிப்பிட்ட காலத்தவர் அணிந்துவந்த அல்லது அன்னியர் அணிந்துவந்த ஆடைகளை நாம் கலாசார ஆடை என்று கூறி இன்றுவரை அணிவது எவ்வாறு சரியானதாகும்? வெட்கக்கேடல்லவா? அது ஏன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் அணிந்ததும், ஐந்நூறு ஆண்ண்டுகளுக்கு முன் பெண்கள் அணிந்ததும் மட்டும் கலாசார ஆடையாக ஆகிறது? ஏனைய காலங்களில் அணிந்தவை ஏன் கலாசார ஆடையாகவில்லை? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அணிந்த வேட்டியை அணிவது கலாசாரமென்றால், அதைவிடப் பழமையான மரவுரி ஏன் கலாசார அடையாளமாகவில்லை? அதைவிடப் பழமையான இலைகுழை? அதைவிடப் பழமையான அம்மணம்?

தமிழர்கள் ஆடை சம்பந்தமாகக் கொண்டிருந்த உன்னத பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு, அடிமையாக வாழ்ந்ததன் தொடர்ச்சியாக, அந்நிய ஆதிக்கத்தின் குறியாக, பெண்ணை போதைப்பொருளாக, அடிமையாக பார்க்கும் பழக்கத்தின் அடையாளமாக ஆடையை அணிந்துவிட்டு அதை கலாசார ஆடை என்று சொல்லுவது நமது முன்னோருக்கு – ஆடை விஷயத்தில்கூட நாகரிகம், சமத்துவம் எல்லாம் காட்டிய அவர்களுக்கு - செய்யும் அவமானமல்லவா? அதையும் செய்துவிட்டு எப்படி தமிழராயிருப்பதற்கு பெருமைப்படுவது?
தொடரும்...
 நீதுஜன் பாலசுப்பிரமணியம் 

No comments:

Post a Comment