Thursday, 8 November 2012

யாழ் மாணவரின் தலை விதி(jaffna)-04


சுயன்ஸ்கோலில் வகுப்பு முடிவடைந்ததும்  காளிகோவிலில்தான் ஓய்வெடுக்கமுடியும்.ஏரியா மாமாணவர்களின் தொல்லையும் இடையிடையே நடக்கும் ரௌடி சண்டைகளின் தொல்லைகள் காரணமாக மாணவர்கள் சலித்துப்போயிருந்தது ஏனோ உண்மைதான்.ஆனால் அதற்காக தினந்தோறும் மாணவர்கள் அங்கே கத்தியின் மீது நடப்பதுபோல் மிகுந்த துன்பப்படுகிறார்கள் என்றெல்லாம் என்னால் மிகைப்படுத்தமுடியாது.இடையிடையே  நடைபெறும் அவர்களது தொல்லைகள் ஒருபுறம் என்றால் காளிகோவிலடியில் மாணவர்கள் ஓய்வெடுக்கும்போது சுயன்ஸ்கோல் நிர்வாகமும் தொல்லைகொடுத்தது. சுயன்ஸ்கோல் நிர்வாகத்தின் இரண்டு தளபதிகள் இருக்கின்றார்களே பாலா,சசி என்ற இரண்டு செக்கிகள் அவர்கள்தான் காளிகோவிலடிக்குவருவார்கள்.முக்கியமாக வருவது பாலா "டோய் இங்க ஒருத்தரும் நிக்கவேண்டாம்.சுயன்ஸ்கோலுக்குவர்ரவன் எவனாவது இங்க நிக்கிறது கண்டுபிடிச்சன் எண்டால் கார்ட்டைகிழிச்சு அனுப்பிடுவன்"பாலா பேசும் நேரத்தில் காளிகோவிலில் இருந்து மாணவர்கள் காளிகோவிலில் இருந்து செல்வதுபோல் சிறிது தூரம்  சென்றுவிட்டு மீண்டும் காளிகோவிலுக்கே வந்துவிடுவார்கள்.வேறு எங்கு செல்லமுடியும்? ஆனால் சுயன்ஸ்கோல் நிர்வாகத்திற்கும் காளிகோவிலடியில் மாணவர்கள் நிற்பதைத்தடைசெய்வதைத்தவிரவேறு வழியில்லை. சுயன்ஸ்கோலை சுற்றியிருக்கும் அயலவர்கள் காளிகோவிலடியில் நடைபெறும் அடிதடிகள்  தொல்லைகளை"சுயன்ஸ்கோல்ல படிக்கிற பொடியள்"என்ற ஒரே ஒரு பார்வைமூலமே பார்த்தார்கள்.இதனால் அடிக்கடி சுயன்ஸ்கோல்  நிர்வாகத்திடம் முறைப்பாடு கண்டனங்கள் செல்லும்.இதன் காரணமாகத்தான் சுயன்ஸ்கோல் நிர்வாகம்  அங்கு நிற்பதைத்தடைசெய்தது.சுயன்ஸ்கோல் நிர்வாகத்திற்கு காளிகோவிலடியில் என்ன நடைபெறுகின்றது? அதை எப்படி தடுப்பது(தன்னிடம் வரும் மாணவர்களைப்பாதுகாத்தல்) என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நேரமில்லை.காளிகோவிலடி அடிபாடுகள் மோதல்களை ஆராய்ந்தால் சிலவேளைகளில் அரசியல்கட்சி பின்னணிகள் வரைகூட செல்லக்கூடும் என்று புரிந்திருக்கும்.இதனால் தன் பலத்தை இலகுவாகக்காட்டக்கூடிய மாணவர்களோடு நிறுத்திக்கொண்டது சுயன்ஸ்கோல்.இவ்வாறான பிரச்சனைகளை மாணவர்களும் சரி சுயன்ஸ்கோல் நிர்வாகமும் சரி எதிர்கொள்ளாமல் தவிர்க்கவேண்டுமாயின்  வகுப்புக்கள் முடிந்ததும் ஓய்வெடுப்பதற்கு இடவசதி செய்துகொடுத்தாலே போதும்.எதோ ஒரு நாள் அங்கேயே தங்கி படுத்து உண்டு மலசலகூடத்தை நாறடிப்பதற்கு ஏற்றவகையிலான வசதிபடைத்த இடத்தை கேட்கவில்லை.அதிக பட்சம் 2 மணித்தியால பாட இடைவேளைகளின்போது தங்குவதற்கு இடத்தை ஏற்படுத்தினாலே போதும்.2000,3000 மாணவர்கள் கற்கும் இடத்தில் இந்த குறைந்தபட்ச வசதியைக்கூட செய்யவில்லையாயின் நிர்வாகத்தைத்தான் குறைகூறமுடியும். சயன்ஸ்கோலுக்கு படிப்பதற்கு வந்த மாணவனை நடு றோட்டில் போட்டு அடித்தால் அதற்கும் சுயன்ஸ் கோலே பொறுப்பு. பாடசாலை செல்லும் மாணவருக்கு பாடசாலை பொறுப்பு என்பது மாதிரித்தான்.சிறிய தனியார் கல்வி நிலையங்களே பாட இடைவெளிகளில் மாணவர் தங்க ஓரமாக ஒரு கொட்டிலை அமைத்தால் கோடிக்கணக்காக உழைக்கும் ஒரு நிர்வாகம் அதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் புரியவில்லை.
ஒரே ஒரு நன்மை சுயன்ஸ்கோலிற்கு கற்கவரும் பெண்களுக்கு இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.வகுப்புக்கள் நடைபெறாத கொட்டில்களில் தங்கமுடியும்.

யாழ்மாணவரின் தலைவிதி என்று  யாழ் சமூக உயர்தர (ஏ.எல்)மாணவசமூகத்தில் நடப்பவற்றைத்தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.பயோ,மற்ஸ் மாணவர்களிடத்தே/மாணவர்களுக்கு  நடப்பவை.யாழ்மாணவர்களைப்பொறுத்தவரை ஏ.எல் பயோ மற்ஸ் என்றால் சுயன்ஸ்கோல்தான் என்பது எழுதப்படாதவிதியாகிவிட்டது.சட்டமாகவே ஆக்கிவிட்டார்கள்.இதனால் மாணவர்களின் பெருமளவான நேரம்  சுயன்ஸ்கோலிலேயே செலவிடப்படுவதனால் இத்தொடரின் பெருமளவான பகுதி சுயன்ஸ்கோலைப்பற்றியதாக இருக்கின்றது.இதற்காக இதை எழுதும் நான் சுயன்ஸ்கோலுக்கு எதிரான கோஸ்ரி என  வெங்காயத்தனமாக எண்ணவேண்டாம்.அப்படி நீங்கள் சிந்திப்பது உங்கள் தவறல்ல ஏனெனில் கல்வி அரசியலில்,ஆசிரியர்களது அரசியலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றீர்கள் எனவே உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.சுயன்ஸ்கோல் என்ன சகல தனியார் வகுப்புக்கள் பற்றியும் எதிர்காலத்தில் பதிவு எழுதப்படும்.சுயன்ஸ்கோலில் சில திறமையுள்ள ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை.சுயன்ஸ்கோல் ஆசிரியர்களின் திறமை பற்றியோ வேறு ஆசிரியர்களின் திறமைபற்றியோ நான் இங்கு ஆராய்வதாக இல்லை.அதற்கு தனிப்பட்ட ஒரு தகுதிவேண்டும் என்பது உண்மை.


நான் இங்கே ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவில்லை.அதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது.அவர்கள் தேசபிதாக்களாக இருந்தால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதில் ஏதாவது கிடைக்கலாம்.இத்தொடரை வாசித்த சகோதரர் ஒருவர் கேட்டார் இதைப்பற்றி எழுத உமக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று?

இந்தக்கேள்வியை பலர் பலரிடம் போகிறபோக்கில் தோமே என்று கேட்டுவிட்டு சென்றுவிடுகின்றார்கள்.ஒருவிடயத்தை விமர்சனம் செய்வதற்கு, சமூகத்தில் நடப்பவற்றைப்பற்றி கருத்துக்கூறுவதற்கு கேட்பதற்கு  சகலருக்கும் உரிமை இருக்கின்றது.அதற்கு உரிமை இருந்தாலே போதும் தகுதி எல்லாம் தேவையில்லை.விமர்சிக்கவோ கருத்துக்கூறவோ  விமர்சிக்கப்போகும்,கருத்துக்கூறப்போகும் விடய்ங்கள் பற்றிய தெளிவான அறிவு அவற்றின் பின்புலங்கள் பற்றிய தெளிவிருந்தாலே போதும்.

உதாரணத்திற்கு Stephen Hawking  என்ற விஞ்ஞானி வெளியிட்ட The Grand Design என்ற புத்தகத்தில் பிரபஞ்சத்தோற்றம் பற்றிய கருத்துக்களைவெளியிட்டுள்ளார்.பிரபஞ்சத்தோற்றத்தை விளகக் இறைவன் தேவையில்லை விதிகளே போதும்  என்று கூறி புதிய கொள்கைகளை முன் வைத்திருக்கிறார்.சில கொள்கைகள் என்னவென்பதை விளக்கவில்லை இது அவரது புத்தகத்தில் இருந்த குறைபாடு.இதை விமர்சனம் செய்யவோ கருத்துகூறவோ தகுதிவேண்டுமானால் இன்னொரு ஸ் ரீபஹோக்கிங்கால்தான் முடியும்.அப்படியானால் அந்த 2 ஹோக்கிங்களும் இதை தமக்குள் விமர்சனம் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான்.

ஆசிரியர்களின் சொந்த வாழ்க்கையை அலசினால் அது தனி நபர் தாக்குதலாகிவிடும்.

ஒரு மாணவன் சாதாரணதரத்தில் இருந்து உயர்தரத்திற்கு செல்லும்போது சில பல மாற்றங்கள் ஏற்படும்.பயோலொஜிக்கலான மாற்றங்களை சொல்லவில்லை.மனதளவில் ஏற்படும் மாற்றங்களைத்தான் கூறுகின்றேன். நட்புவட்டாரங்களும் கூடவே மாறிவிடுகின்றன.சாதாரண தரம்வரை  நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் உருத்திராக்கக்கொட்டையுடனும் திரியும் ஒருவன்,பாடசாலை வகுப்பு நேரங்களில் அருகில் இருக்கும் கோவில் மணித்தியாலத்திற்கு ஒருதடவை மணி ஓசை கேட்டதும் இருக்கையில் இருந்து எழுந்து கண்களைமூடி வினாயகாய நம என்று வழிபடும் ஒருவன்  இன்னொருவனின் மூக்கை உடைத்துவிட்டு டேய் வீடு பூந்து உன்னை வெட்டுவன்ரா என்று கூறுமளவிற்கு அவனை எது மாற்றுகின்றது?

உண்மையில் இது பெரிய கேள்வி பலதளங்களில் ஆய்வு செய்யப்படவேண்டிய கேள்விதான்.இதில் பெருமளவானபங்கு அவனது நட்புவட்டாரத்திற்குத்தான் இருக்கின்றது. உயர்தரத்தில் தோன்றும் புதிய நட்புக்கள்,சீனியர் மாணவர்களின் தவறான செயற்பாடுகள்  தாமாகவே  கற்பிக்கப்படல் போன்றவைதான் முக்கியகாரண்ங்களாக இருக்கமுடியும்.சாதாரண தரம்வரை கல்வியில் கொடிகட்டிப்பறந்தவைக்கூட உயர்தரம் சராசரிமாணவனாக்கிவிடுகின்றது. இதற்காகத்தான் யாழ்ப்பாணப்பெற்றோர் தமது பிள்ளைகளை பயோ,மற்ஸ் படிக்க அனுமதிப்பதற்கு பயப்படுகின்றார்கள்.சொல்லும் காரணம்"அவன் 10 ஏ எடுத்தவனே All "F" எடுத்துட்டான் நீ அதைவிடக்குறைவாத்தான் எடுத்தனி எப்படி சாமாளிப்பாய்? இந்தக்கேள்விகள் அனேக பயோ,மற்ஸ் உயர்தர மாணவர்களின் வீட்டில் கேட்பவை.எப்படியோ ஓ.எல் முடித்து தான் விரும்பும் பாடத்தை தெரிவு செய்வதற்குள் பெரிய கண்டத்தை தாண்டிய  பீலிங்கே வந்துவிடும்.அதுவரை தனக்கு என்ன உறவென்றே தெரின்திராத பார்த்திராத அண்ணன்கள், சித்தப்பர்கள்,மாமன்கள் என்று பலர் வருவார்கள் கொலைமிரட்டல்விடுவது போல் இப்படித்தான் அவர் சுப்பண்ணேன்ர மோன் இருக்கிறார்தானே என்று  ஒரு கதை சொல்லி எச்சரித்துவிட்டு செல்வார்கள்.

சிறியவயதில் கற்பித்த ஆசிரியர் அந்த நேரம்தான் பலவருடங்கள் கழித்து வந்திருப்பார்.அட உனக்கு கூட்ட கழிக்கவே தெரியாதேடா? நீ ஏ.எல்ல மற்ஸ் எடுக்கப்போறியா? ஏன் நடி  றோட்டில நிக்கப்போறியே? என்பதுடன் பாருங்கோ...உன்ரபொடி அவ்ன்ர பிறன்ஸ் எடுக்கிறாங்கள் எண்டு தானும் எடுக்க ஆசைப்படுது..அவங்கள் கெட்டிக்காரங்கள் பாஸாவது ப்ண்ணிடுவாங்கள் உன்ர பொடி All "F" ஓட நிற்கப்போகுது என்பார்.காலையில் இருந்து வீடு கூட்டி வெங்காயம் வெட்டி,தேங்காய் துருவி ஒரு மாதிரி அம்மாவை காக்காய் பிடித்து ஓரளவிற்கு சம்மதம் வாங்கினால் ஒரே குண்டில் அத்தனையும் காலியாகிவிடும்.சரி அப்பா என்னசொல்வார் மம்மி முடிவெடுத்தால் பிறகென்ன சரி அதைவிடுங்கள்.

அத்துடன் நிற்காமல் வேறு ஆசிரியர்களைக்கொண்டு மகனுக்கு/மகளுக்கு அட்வைஸ்வேறு நடக்கும்.அந்த அளவிற்கு பெற்றோருக்குப்பயம்தான்.சரி ஒரு மாதிரி பாடத்தை தெரிவு செய்துவிட்டால் முடிந்தது என்று நினைக்கின்றீர்களா?அதுதான் இல்லை...பாடசாலையில் நடக்கும் கூத்துக்களை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்....ஆனால் ஒருவிடயத்தை மட்டும் இப்பொழுதே கூறவேண்டுமானால்....பேரன்ஸ் மீட்டிங்கிற்கு போய்ஸ் பெரும்பாலும் தமது தாயாரைத்தான் அனுப்புவார்கள்...அதற்கு முதல் நாள் எந்த ஆசிரியரிடம் என்ன பேசவேண்டும் என்ன கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்றேல்லாம் ரெயிங்க் கொடுத்துத்தான் அனுப்புவார்கள். தாங்கள் கூறிய பீலா வெளியே தெரியக்கூடாதல்லவா.

சரி பாடத்தை தெரிவு செய்தால் ஒரு  மருத்துவ அல்லது பொறியியல் பீட மாணவனை பெற்றோர் கொண்டுவந்து முன்னே நிறுத்துவார்கள் அதோடு இவன் நம்ம சொந்தம்தான் என்று அறிமுகப்படுத்துவார்கள் ஆலோசனை வழங்க.அட நம்ம சொந்தத்தில கூட புத்திசாலிகள் இருக்கிறாங்களா ஆச்சரியமா இருக்கே என்ற நினைப்பில் கடவுளைப்பார்த்த பீலிங்கில் அந்த ஜீவன் அந்த பொறியியல்/மருத்துவபீட மாணவனைப்பார்க்க.அவன் தொடங்குவான். நான் கடைசியாக ஒருவருடன் பேசி 3 மாதங்களாகின்றது என்பதை சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கும்.பயோ என்பது என்று ஆரம்பித்து தான் பட்ட கஸ்ரங்கள்,வாங்கிய மார்க்குகள்,வாங்கிய ரியூட்கள் ஒவ்வொரு செக்ஸனுக்கும் குறைந்தது 2 ஆசிரியர்களின் பெயரை பரிந்துரை,அவரிடம் செல் இவரின் நோட்ஸை எழுதி வைத்திரு அல்லது போட்டோக்கொப்பி எடுத்து வைத்திரு என்று? மருத்துவராவது எப்படி வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஅ? என்று கூவாத குறையில் 3 மணித்தியால சொற்பொழிவு நடக்கும்.அவன் ஒரு அடிமைசிக்கிடிச்சு என்ற நினைப்பில் சென்றுவிட கேட்ட அப்பாவி ஜீவன்தான் பாவம் விறைத்துப்போய் வானத்தையே சிறிது நேரம் பார்த்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு...ஊகும்...அப்படின்னா அவ்வளவுதானா? இவ்வாறு பலவிடயங்கள் நடக்கும்.

உயர்தரம் என்பது கடினமான ஒன்றுதான்.ஆனால் அவற்றை மேலும் பலவிடயங்கள் கடினமாக ஆக்கிவிடுகின்றன.சுயன்ஸ்கோல் இன்னபிற தனியார் நிறுவனங்கள்,கல்வி நிலையங்கள் மாணவர்கள் மீது எவ்வாறு நெருக்குதலை என்னவிதத்தில் மேற்கொள்கின்றன? போன்ற விடயங்களை இத்தொடரினூடாக கூறமுயன்றுகொண்டிருக்கின்றேன்.

சரியான ஒரு வழி நடத்தல் ,ஆரம்பம் இல்லாமைதான் இவற்றிற்கு மூலகாரணம்.பிரபல ஆசிரியர்களாக இருந்துகொண்டு,திறமையான ஆசிரியர்களாக இருந்துகொண்டு தமது சுய இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு சில ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள்.இவ்வாறானவர்களுக்கு போட்டியான சில ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் இவர்கள்தான் எதிரிகள்.இவர்கள் தமக்குள் நேரடியாக மோதிக்கொள்ளமாட்டார்கள்.தமக்கென்று வரும் தனது திறமைக்கென்று வரும்,திறமையினால் கிறங்கிப்போயிருக்கும் மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கெதிரான பிரச்சாரங்களுக்குஏவிவிடல் என்பனவெல்லாம் நடக்கும்.ஒவ்வொரு பாடசாலைகளிலும் இவ்வாறான ஒரு கதை உண்டு.
இவ்வாறான ஆசிரியர்கள் தாம் நேரே சந்தித்துக்கொண்டால் தமக்கிடையே மிகுந்த மரியாதை நட்புறவுடன் நடந்துகொள்வார்கள்.அப்படியானால் மானவர்கள்?
டோய் தளபதிதாண்டா பெஸ்டு...அடுத்த சூப்பர்ஸ்ரார்டா...தல தாண்டா பெஸ்டு..நல்ல ஸ்ரைல்டா என்ற நிலைதான்  தொடர்கின்றது.

(வெங்காயம் தளத்தில் எழுதப்படும் இப்படியான விடயங்கள் முக்கியமான சிலரின் காதுகளுக்கு எட்டலாம். எட்டினால் "தம்பி அதில எழுதிறவரை எங்களுக்கு நல்லாத்தெரியும்.உங்க கடைசிவாங்கில இருந்து கத்தி விசிலடிச்சதில நாந்தான் தம்பி காட்டைக்கிழிச்சு வெளில அனுப்பின்னான்.பிறகு அவன் வந்து கையில கால்ல விழுந்து அழுதுதான் தம்பி உள்ள விட்டனாங்கள்" என்று ஒரு பீலாக்கதையை போகிறபோக்கில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)
அப்படி நடந்தால்....அட அரசியல்ல இதெல்லாம்.

No comments:

Post a Comment