Friday, 2 November 2012

வாருங்கள்! தமிழர்களாக இருப்பதற்கு வெட்கப்படுவோம்...
நாம் தமிழராக பிறந்ததற்காக பெருமைப்பட்டுக்கொள்ள ஆயிரம் ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன. சரிதான், ஆனால் நாம் வெட்கப்படுவதற்கும் ஆயிரம் விடயங்கள் இருக்கின்றனவே? பெருமைகளை நாம் படுகிறோம், வெட்கத்தை யார் படுவது? Share If you are proud to be a Tamilan என்று பேஸ்புக்கில் போட்டு அராத்துகிறோமே, பண்டைக்காலத்திலே தமிழர்கள் எப்படி எல்லாம் இருந்தார்கள் என்று கத்துகிறோமே, இன்றைக்கு இப்படி ஒரு நிலைமை – இத்தனை கேவலம்- நமக்கு வர யார் காரணம்? நாம்தானே? தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று பண்டைத் தமிழன் சொல்லுகிறானே, அப்படியானால் நமது இன்றைய கேவலத்துக்கும் நாம்தானே பொறுப்பு? எத்தனை காலம்தான் சோழன் கோயில் கட்டினான், அவ்வையார் அணுகுண்டு கண்டுபிடித்தார் என்றே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? பண்டைக்காலத்திலே தமிழர்கள் மட்டும் என்ன கொம்புடனா திரிந்தார்கள்? அப்படித்தான் திரிந்தார்கள் என்றால் பின்னால் வந்தவர்கள் தமிழர்களின் தலைமீது ஏறி ஆடியபோது எசகுபிசகான இடத்திலே ஏன் கொம்பு குத்தவில்லை?
இந்த உண்மையான பெருமைகளே போதாதா? எதற்கு வீண் பெருமைகள்?


நமது பழம் பெருமைகளை கண்டுபிடித்து மெருகேற்றச் சொன்னால் மிகை ஏற்றுகிறார்கள். நம் முன்னோர்களோ, பெரியோர்களோ நமக்கு ஏதாவது சொன்னால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களது சொந்த அறிவால் அதனை ஆராய்ந்து, உங்களுக்கும் அது சரி என்று பட்டால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று திருவள்ளுவர், புத்தர், பெரியார் என்று மூவருமே சொல்லியிருக்கிறார்கள். நமது தமிழின் தொன்மை, பெருமை சம்பந்தமாக என்று வரும்போதும் இதே கருத்தை (அந்தக் கருத்தில் ஒரு பரடொக்ஸ் இருக்கிறது. அந்த மூன்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் சொன்னது சரியாய் என நீங்களே ஆராய்ந்து, சரி என்றல் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அப்படி ஆராய்வதற்கு அந்தக் கருத்தை ஏற்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? என்ன, புரியவில்லையா? விடுங்கள். மேட்டருக்கு வருவோம்.) பின்பற்றுங்கள். சும்மா அகப்பட்டதையெல்லாம் தமிழின் பெருமை என்று கத்திக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. தமிழர்கள் அணுவை கண்டுபிடித்தார்கள், அப்போதே அறுவை சிகிச்சை செய்தார்கள் என்றெல்லாம். ஒவ்வொன்றாக ஆராய்வோம். உண்மை காண்போம். பிறகு கத்துவோம்.

உலகத்தின் முக்கியமான மதம் ஒன்றை பின்பற்றுபவர்களுக்கு ஒரு குணம் உண்டு. தனது மதம் மட்டும்தான் மதம் என்கிற எண்ணம். அதைப்பற்றி யாருமே தவறாக என்ன, நடுநிலையாக கூட கதைக்க கூடாது என்கிற எண்ணம். அதே சர்வாதிகாரப் போக்கை நாங்கள் நமது மொழிக்கும் கொண்டு வந்துளோம். நமது மொழி பத்தாயிரம் வருடங்களாக பேசப்படுகிறது, முதன்மையானது, முக்கியமானது. தமிழர்கள் அக்காலத்தில் அணு விஞ்ஞானிகளாக இருந்தார்கள், விமானம் வைத்திருந்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தையே கண்டுபிடித்தார்கள், காகம், கருங்குரங்கு உட்பட உலகத்தின் அனைத்து உயிரினங்கள் பேசும் அனைத்து மொழிகளும் தமிழிலிருந்து பிரிந்தவையே... இப்படியெல்லாம் அள்ளி எறிகிறோம். இப்படியாக வகை தொகை இல்லாமல் புளுகுவதால் நமது மொழியின் உண்மையான பெருமைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள் என்பது ஏன் நமக்கு புரிவதில்லை? உலகத்திலேயே நாம் மட்டும்தான் உன்னதமான எதிர்காலத்தை அல்லாது உன்னதமான இறந்தகாலத்தை கனவு காண்கிறோம்.

இந்த போதி தர்மர், போதி தர்மர் என்று ஒரு பிரகிருதி சம்பந்தமாக அண்மையில் வந்த ஒரு கலா காவியத்தை பார்த்திருப்பீர்கள். தமிழ், பெருமை என்று கண்டவனெல்லாம் – அதுவரை தமில் என உச்சரித்துக் கொண்டிருந்தவனெல்லாம் - கத்தத் தொடங்கியது அதற்குப் பிறகுதான். இணையத்திலே தமிழின் பெருமைகளை மீம்களாக உலாவ விட்ட அபத்தம் தொடங்கியது அதற்குப் பிறகுதான். அந்தத் திரைப்படம் வணிக, கலா ரீதியான மொக்கையாக ஆனபிறகுகூட இதை கைவிடுவார் இல்லை.

இந்த போதி தர்மர் இருக்கிறாரே, அவர் ஒரு பல்லவ இளவரசர். பல்லவர்கள் எவ்வாறு தோன்றினார்கள், என்ன மொழியினர் என்பது பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் நிச்சயம் அவர்கள் தொன் தமிழர்கள் மட்டும் இல்லை என்பது வரலாற்றில் தெளிவாயுள்ளது. அப்படி இருக்கும்போது போதி தர்மரைப்பற்றி நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதே வேளை சிறுமைப்பட ஒரு விடயம் இருக்கிறது. போதி தர்மர் சீனாவுக்கு போனது, சமணர்கள் சார்பில் ஒரு உளவாளியாக, சகுனியாக. சீன தேசத்தில் அப்போதே துளிர்விடத் தொடங்கியிருந்த தத்துவ ரீதியான மதங்களை அழிக்கவே அவர் ஏவப்பட்டிருந்தார். அங்கே போய் அவர் மக்களுக்கு சேவை செய்யவில்லை. அரசர்களின் ஆட்சிகளில்தான் மூக்கை நுளைத்தார். இது பல்லவர்களின் ஆதிக்கம் இருந்த மத்திய இந்திய தொல் ஆவணங்களில் இன்றும் உள்ளது. பொதி தர்மர் தமிழரா இல்லையா என்பதே தெரியாத விடயம். அப்படி அவர் தமிழராக இருந்தால் கூட ஒரு நயவஞ்சகத் திட்டத்துக்காக சீனா சென்ற அவரை நினைத்துப் பெருமைப்படவும் ஒன்றுமில்லை. ஆக, எந்தத் திரைப்படத்துக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் மத்தியிலே தமிழ் உணர்வு பொங்கியதோ, அந்தத் திரைப்படமே தமிழர்களை முட்டாளாக்க எடுக்கப்பட்டதுதான். அந்தத் திரைப்படம் வந்த நாள் முதலாக “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புரட்டி.. என்பதான பாடல் வரிகளை எடுத்துக்காட்டி Share If you are proud to be a Tamilan என அதட்டும் அபத்தம் தொடர்கிறது. விட்டபாடில்லை.

‘தமிழன் என்கிற அடையாளம் துறந்து வாழ நான் தயாரில்லை என நான் மே தினம் தொடர்பான கட்டுரையில் தமிழர்களின் அவல, கேவல நிலை பற்றி எழுதி இருந்ததை பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் சொன்னார். அவரது கம்பீரத்தை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன். கூனிக் குறுகினேன். (அவர் அண்மையில் லண்டன் மாநகரத்துக்கு கல்வி நிமித்தமாக சென்றுள்ளார். அங்கே அவர் தமிழன் என்கிற அடையாளம் துறக்காமல், எலிசபெத் மகாராணி வந்தாலும் தாய்த்தமிழ் மொழியிலேயே பேசி, பரீட்சைகளை தமிழிலேயே பதிலிறுத்து, பாரம்பரிய தமிழ் அடையாள ஆடைகளையே அணிந்து, லண்டனை இலண்டன் (ஆங்கிலத்திலே Ilandan) என எழுதி... தமிழ் அடையாளம் பேணி வாழப்போவதை நினைக்கும்போது எனது உள்ளமெல்லாம் இனிக்கிறது.) எங்கேயடா இருந்து வந்தீர்கள் நீங்களெல்லாம்? இத்தனை காலமும் உங்களது தமிழ் பற்று எங்கே சோரம் போய்க்கொண்டிருந்தது?

அவர்கள் சொல்லுவதன்படி பார்த்தால்  முதல் தமிழ் குடும்பத்தின் புகைப்படம் இதுதான்.
தமிழ் பாரம்பரியமிக்க மொழிதான், உலகின் பழமைமிக்க மொழிகளில் முதன்மைமிக்கதுதான். அதற்காக இப்படியா அள்ளி விடுவது? பத்தாயிரம் வருடங்களுக்கு முதல் லெமூரியாக் கண்டத்திலே முதன் முதலிலே தோன்றிய மனிதன் பேசிய மொழி என்று? பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் எமது மூதாதையர்கள்தான் வாழ்ந்தார்கள் என்பதனால் என்ன சொல்லுகிறீர்கள்? நாமெல்லாம் குரங்குக் கூட்டங்கள் என்பதைத்தானே? குரங்குகள் பேசிய மொழியைத்தான் நாம் பேசுகிறோம் என்பதைத்தானே? தமிழ் உலக மொழிகளுள் பழமை மிக்கதுதான். அதுவும் பழைய ஒரு மொழி இன்றளவும் எட்டு கோடி பேர் பேச, பெருமொழியாக இருப்பது நமக்கு பெருமைதான். அதற்காக பாண்டியராஜன் படத்தில் ஏலம் கேட்பதுபோல பத்தாயிரம்,  பன்னெண்டாயிரம் என்று போவது கொஞ்சம் ஓவராக இல்லையா?

உடனே தொடக்கி விடாதீர்கள் தமிழ் துரோகியே மண்ணின் இழுக்கே என்று.. நானும் தமிழை மூச்சாக உள்ளே எடுத்து பேச்சாக வெளியே விடுபவன்தான். 

தமிழினி அழிமொழி எனுமிழி மொழி அழி.
தமிழினை அழிக்கும் இழிவழி நீ அழி
அமிழ்தினும் யாழினும் இனியது தமிழ்மொழி
தமிழ்மொழி பாழெனின் நமக்கிழி பழி மொழி

என்று எழுதிக்கொண்டு திரிபவன்தான். ஆனால் தமிழரின் உண்மையான அழியாத பாரம்பரியம் அவர்களின் அறிவல்லவா? அது எங்கே போனது?
தமிழன் நானும்தான். பெருமைகளை பாடுவோரே, சிறுமைகளை களைவோம், வாருங்கள்...

-அடுத்த பதிவில் சிறுமைப்படுவோம்.-
(நீதுஜன் பாலசுப்ரமணியம்)

7 comments:

 1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 2. கற்சுவடுகளின் காலச்சுவட்டையும் காட்டுகிறீர்கள்.வெட்கப்படுவோம் எனவும் சொல்கிறீர்கள்.பெருமிதமும்,வெட்கமும் கலந்ததே வாழ்க்கை.முந்தைய வெட்கங்கள் கல்வெட்டுக்களில் இடம் பெறவில்லையென்பதோடு கட்டிட பாரம்பரியங்களே முந்தைய காலத்தை ஆராயும் சான்றுகளாக உலகளாவிய அளவில் உள்ளன.

  //தமிழினி அழிமொழி எனுமிழி மொழி அழி.
  தமிழினை அழிக்கும் இழிவழி நீ அழி
  அமிழ்தினும் யாழினும் இனியது தமிழ்மொழி
  தமிழ்மொழி பாழெனின் நமக்கிழி பழி மொழி//

  இந்தப்பாடலின் சொந்தக்காரர் யார்?

  இந்த கேள்வியெழும்போது இன்னுமொன்று சொல்லத்தோன்றுகிறது.மேலே கட்டிட பாரம்பரியமே முந்தைய வாழ்க்கை முறையை பிற்கால மக்களுக்கு சொல்கிறது என்ற உலக வழக்குக்கு மாறாக சங்க கால பாடல்களும்,பாடல்களின் புலமைகளும் தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பது தமிழின் மேன்மை.

  ReplyDelete
 3. அந்தப் பாடல் என்னுடையது. நான் எழுதியது.
  இன்றளவும் தமிழின் உண்மையான பெருமை சொல்லுவது கட்டிடங்கள்தான்... சங்கப் பாடல்கள் தமிழின் அக்கால இலக்கியச் செறிவைக் காட்டுகின்றன. இந்தக் குழப்பம்தான் எமது பின்னடைவு. இலக்கியங்கள் தமிழ் மொழியின் பெருமையே தவிர, தமிழர் வரலாற்றின் பெருமை அல்ல.

  ReplyDelete
 4. நயம்படச் சொன்னீர்கள் நண்பா..

  ReplyDelete