Friday, 16 November 2012

தமிழர்களே தமிழர்களே! (3)
இன்னும் இந்த நிலை என்றால் என்ன பெருமை?

ஈமம்

மனிதனின் இறப்புக்குப்பின் தாழிகளில் அந்த உடலை இட்டு அடக்கம் செய்வதே தமிழர் பண்பாடு. அதுதான் சூழலுக்கு நல்லது. பொம்பரிப்பு உள்ளிட்ட இலங்கையின் பல பிரதேசங்களில் ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன. எரிப்பது என்பது பார்ப்பன சார்பான ஆரிய அடிப்படை இந்துமதக் கொள்கை. சூழலுக்கும் பாதிப்பானது. மண்ணிலிருந்தே நாம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளுகிறோம். எனவே எமது வாழ்க்கை முடிந்ததும் மண்ணுக்கே நம்மை வழங்குகிறோம் என்கிற உன்னதமான, இயற்கைக்கு உரமாகிற கொள்கை அது. அதை விட்டு, காற்றுக்கு SO2 CO உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துக்களை விட்டுச்செல்லும் எரித்தலை செய்கிறோம் நாம்.

தாலி


தமிழர் அடையாளமாக, குடும்ப வாழ்வின் குறியீடாக தாலி ஒரு தமிழர் உன்னதம் என நாம் அனைவரும் இறுமாந்திருக்கிறோம். ஆனால் பத்தாம் நூற்றாண்டுவரை தாலி கட்டும் வழக்கம் தமிழரிடையே நிலவியதற்கு எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்திலேகூட தாலி கட்டப்படுவதாக எங்கிலுமே கூறப்படவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் தாலி சம்பந்தப்பட்ட எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை, பழைய ஓவியங்கள், சிற்பங்களில் தாலி குறிப்பிடப்படவில்லை. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த ஆண்டாள் பாசுரங்களில் – பெண்ணின் காதல், திருமணம் எல்லாம் பாடுகின்ற பாடல்களில் ஒரு இடத்தில்கூட தாலி பற்றி குறிப்படப்படவில்லை.


பெரியார் தமிழர் பெருமை ஏதாவது அகப்படுகிறதா என பார்க்கிறார்.

தாலி என்பது சிறுவர்களின் அரையில் கட்டும் கயிற்றை குறிப்பிடவே பயன்பட்டது. ஆண்கள் செய்யக்கூடிய ஆகப் பெரும் வீரச் செயலாக புலியை கொள்வது அக்காலத்திலே இருந்தது. எனவே தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து ஆண் கழுத்தில் அணிந்துகொள்வது வழக்கமாக இருந்தது. அது புலிப்பால் தாலி எனப்பட்டது. (புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி...(அகநானூறு), புலிப்பல் தாலி புன்தலை...(புறநானூறு))

பெண் திருமணமானவள், ஆண் அவளை நிர்வகிக்கிறான் என்பதைக் காட்டும் அடையாளமாகவே தாலி பிற்காலத்திலே – பத்தாம் நூற்றாண்டின் பின் – திருமணத்தின்போது அணிவிக்கப்பட்டது. அவளை வேறு ஆண் நாடக்கூடாது என்பதை அறிவிக்க ஒரு அடையாளம் என விளக்கமும் சொல்லப்பட்டது. இதனை, கட்டாக்காலி நாய்களை பிடிக்க வருவோர் தமது வளர்ப்பு நாய்களை பிடிக்கக் கூடாது என்பதற்காக நாயின் கழுத்தில் பட்டி கட்டி விடுவதற்கு ஒப்பிடலாம்.

தாலியை ஒரு திருமண அடையாளமாக ஏற்றுக்கொண்டாலும், தாலியை பெண்ணின் அடிமைத்தனத்தை காட்ட இன்றளவும பயன்படுத்துவதையே காணக்கூடியதாக உள்ளது. தாலியை வணங்கவேண்டும், கழற்றக்கூடாது, வலுக்கட்டாயமாக என்றாலும் ஒருவன் தாலி கட்டினால் அதை மதிக்கவேண்டும் என்கிற கருத்துப்பாடு இன்றைவரை சினிமாக்களில் காட்டப்படுகிறது.

பெண்களே ஆளும் சக்தியாக இருந்த, பெண் தெய்வங்களே முதன்மையாக இருந்த பண்டைத் தமிழர் பாரம்பரியத்தில் தாலி என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, பெண்களை ஒரு சிறு நகையின் மூலம் – நாயை சங்கிலி மூலம் கட்டுப்படுத்துவது மாதிரி – கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோமே, தமிலராயிருந்து இதற்கு எவ்வாறு பெருமைப்படுவது?

கற்பு
நடிகை குஷ்பு சொன ஒரு கருத்து பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டையே ஆட்டிப் படைத்தது. தமிழர்கள் வெகுண்டெழுந்தார்கள். “தமிழ்ப் பெண்கள் திருமணத்துக்கு முன்னர் உடலுறவு கொள்ளலாம், ஆனால் பாதுகாப்பாக இருந்துகொண்டால் போதும். என்பதை ஒத்த ஒரு சமூக அக்கறையுடைய கருத்தை வர சொல்லியிருந்தார். தமிழர் பாரம்பரியத்தையே சீரழித்து விட்டதாக தமிழகமே கொந்தளித்தது. அவரையும் அவரை ஆதரித்தவர்களையும் நீதிமன்றத்துக்கு இழுத்தார்கள், அவமானப்படுத்தினார்கள். அவர்கள் அறியாத செய்தி ஒன்று உள்ளது. ஒருவேளை குஷ்புவே அறியாத செய்தியாக இருக்கலாம். ஆனால் அப்போது அவருக்கு ஆதரவு தர வராது, பின்னர் தனது அரசியல் தேவைக்காக அவரை பயன்படுத்திய கருணாநிதி நன்கு அறிந்த செய்தி அது.

சங்ககாலத்திலே பெண்கள் திருமணத்துக்கு முன்னர் உடலுறவு கொண்டிருக்கிறார்கள்.

சங்கத்தமிழ்ப் பாடல்கள்தோறும் – அகநானூற்றுப் பாடல்கள்தோறும் திருமணத்துக்கு முந்திய  உறவு பாடப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவன் நினைந்துவிட்டால் மனதிலும் மற்றோரை நினைப்பதில்லை என்கிற உயர் விழுமியம் இருந்த காரணத்தால், ஆணானவன் ஒரு பெண்ணுக்கு தனது மனதை பறிகொடுத்தால், வேறு ஒருத்தியை மணக்க மாட்டான் என்கிற காரணத்தால், உடலுறவு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. விட்டுவிட்டு ஓடுகிற வழக்கம் பிற்காலத்திலேதான் ஏற்பட்டிருக்கிறது.

குடும்பப் பெண்கள் தவிர, காமத்தொழிலை செய்வதற்கென்ற குடிப்பிறப்புக்கள் இருந்திருக்கின்றன. விபச்சாரம் பண்டைத் தமிழரிடையே வெட்கப்படத் தேவையில்லாத வழக்கமாக இருந்திருக்கிறது. கணிகையர் என்கிற சாதியினர் தமது தெருவில் அதை செய்திருக்கிறார்கள். கற்பின் அடையாளமான கண்ணகியே தனது கணவன் பரத்தையரோடு கூடியதை ஏற்றுக் கொண்டவள்தான். 

குடும்பப் பெண்களிடையே ஒரு தரங்குறைந்ததாகக் கருதப்படக் கூடிய வழக்கம் பெருமைக்குரியதாக கையாளப்பட்டிருக்கிறது அரசர்களை புகழும்போது. கலிங்கத்துப் பரணியை- மடை திறப்புப் படலத்தை படிப்பவர்கள் அக்காலப் பெண்கள் எல்லோருமே காமவெறி பிடித்தவர்கள் என்கிற ஒரு முடிவுக்கு வரலாம். அரசனுடன் கூடவே எல்லாப் பெண்களும் ஆசைப்படுவார்கள் என்பதாக அமைகிற பல பாடல்கள் தமிழில் உள்ளன.

இத்தனையும் Share if you are proud to be a தமிழர்களுக்கு தெரியுமா? எத்தனைதான் பெருமைத் தமிழினமாக இருந்தாலும் அது முற்றிலும் உன்னதமானது என்று இல்லை அல்லவா? பிறகு என்னத்துக்கு விசேட பெருமைகள்? நாமும் மனிதர்கள்தானே.. தமிழர்கள் மட்டும் என்ன வானத்திலிருந்தா குதித்தார்கள்?

தீபாவளி
இன்றளவில் தமிழர்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி ஒரு தமிழனை கொன்றதாக ஆரியர்கள் வழங்கும் பண்டிகை. இதைவிட அவலம் என்ன என்றால், சூரன் என்கிற தமிழனை கொன்றதாக வணங்கப்படும் கந்தன் என்கிற கடவுளையும், தமிழர் முதற் கடவுள் முருகனையும் ஒரே கடவுலாக்கியதுதான். இதனால், தமிழனை தமிழனே கொன்றான், அதை தமிழனே வணங்கினான் என்கிறதாக ஆகிவிடுகிறது. இதபற்றி ஏற்கெனவே தனிப் பதிவாக பிதற்றியுள்ளேன். அதனை பார்க்க.

சாதி
இந்தக் கேவலத்துக்காக வெட்கப்பட குவைத்திலிருந்தா  ஆள் வருவான்?

சாதி என்கிற எண்ணக்கரு ஆரியர்களின் வருணப் பிரிவினையோடு தொடர்பில்லாத வேறு கண்ணோட்டத்திலே பண்டைத் தமிழரிடையே இருந்திருக்கிறது. ஆனால், பின்னர், இந்துமதத்தோடு கலந்து, ஆரியர்களின் வரினாசிரம தர்மத்தோடு பிணைந்து, பிராமணர்களின் அடியிலே சாதி என்கிற வேறுபாடு சமூக சீரழிவாக தமிழரிடையே பெருகியது. சாஸ்தி என்கிற வாடா சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் இல்லை. குடி என்பதே அந்நாளில் ஏற்ற தாழ்வுக்குரிய அளவாக இருந்தது. பறை என்பது தமிழர் ஆதி வாத்தியங்களுள் முதன்மையானதாகும். அதை தயாரிப்போரும் வாசிப்போரும் ஆதிக்குடிகளாக மதிப்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள். பிராமண ஆதிக்கம் வந்து, மாட்டை உண்பது, கொல்லுவது எல்லாம் விலக்கப்பட்டதாக ஆக, அதோடு சம்பந்தப்பட்ட அந்த  குடியும் தாழ்குடியானதானது.

இந்துசமயம் ஆதிக்கத்துக்கு வரமுதல் மாட்டை உண்பது இழிவானதாக இருக்கவில்லை. போர் புரியும் குடியான மறவர் அதனைத் தின்றிருக்கிறார்கள்.

“..கலங்கு முனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மழவர்..
என்கிற சங்கப்பாடலில் இது பதிவாகியிருக்கிறது. தமிழர் சமூகத்திலே ஏற்ற தாழ்வுகளே இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. உயர்குடி, தாழ்குடி என இருந்தது உண்மைதான். ஆனால் செய்யும் சாதியை வைத்து சில மனிதர்களை மிருகத்திலும் கேவலமாக நடத்தும் வழக்கம் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர் வரமுதல் தெய்வ வழிபாட்டு நடவடிக்கைகளிலே முக்கியமானவர்களாக இவர்கள்தான் இருந்தார்கள். இவர்களின் இடத்தைத்தான் பார்ப்பனர்கள் பிடித்தார்கள்.

கடாரம் கொண்டவன் சமாதி இதுதான்.


நமது பழம் படிவுகள் எல்லாவற்றிலும் நல்லது அல்லாததை எடுத்துவிட்டு நல்லதை விட்டு விடுகிறோம். சிலப்பதிகாரம் ஒரு முக்கிய உதாரணம். உலக இலக்கியங்களில் இடம் பிடித்த, பல பிற்கால உத்திகள், முறைகள், ஆடல்கள் எல்லாம் உள்ள இதனை இளங்கோ படைத்ததன் உண்மையான நோக்கம் அறம் தவறும் அரசனுக்கு அறமே கூற்றாகும் என்கிற தமிழரின் அடிப்படை இலக்கை நிறுவுவதற்குத்தான். அறமே பண்டைத் தமிழரின் முக்கிய இலக்கு. அறத்தின்வழி வாழ்வதே வாழ்க்கை என அவர்கள் நம்பினார்கள். நாம் அறத்தின்வழி வாழாவிட்டாலும் பரவாயில்லை, சிலப்பதிகாரத்தை என்ன செய்தோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? “கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா என்கிற பட்டி மண்டபத்துக்கு மட்டும்தானே?

பண்டைத் தமிழருக்கு – நமது முன்னோருக்கு – சிங்களம் சாவகம் சீனம் எல்லாம் வென்றோருக்கு – கங்கை கொண்டோருக்கு – இமயம் வென்றோருக்கு – நாவாய் ஏறி நாற்றிசை வென்றோருக்கு பெருமை சேர்க்க நாம் முகப்புத்தகத்திலே Share if you are proud to be a Tamilan போடத் தேவையில்லை. அறத்தின்வழி வாழ்ந்தாலே போதும்.

வாருங்கள் வாழ்வோம்.(நீதுஜன் பாலா)

2 comments:

  1. இவ்வளவு நாளாக உங்கள் பதிவுகளை காணமல் போய்விட்டேன்.நெத்தியடி பதிவு சகோ ... ! பல உண்மைகளை உரக்கச் சொல்லி இருக்கின்றீர்கள் .. தொடருங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள்...உங்கள் ஊக்குவிப்புக்கும் வருகைக்கும் நன்றிகள்

      Delete