Monday, 19 November 2012

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-02


போனபதிப்பில் கொள்கைகளை பின்பற்றுவோர் கொள்கைவாதிகளின் பெயர்களை உதாரணமாக கம்யுனிஷத்தை பின்பற்றுபவர்கள் சேகுவேராவின் பெயரையும், அகிம்சையை விரும்புவோர் காந்திஜியின் பெயரையும் தங்கள் பெயர்களின் பின்னால் சேர்த்துக்கொள்வதை தவறில்லை என்ற சாயலில் எழுதி இருந்தேன். அப்பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.


கொள்கைவாதியும் நடிகனும்

அதை படித்து விட்டு சிலர் அதெவ்வாறு சரியாகும் நாயகர்களின் பெயரை சேர்க்க முடியாத பட்சத்தில் கொள்கைவாதிகளின் பெயரையும் சேர்ப்பது தவறுதானே. என்று கடுப்புடன் கேள்விகளை வினவியிருந்தார்கள். 


 உதாரணமாக சேகுவேராவை எடுத்துக்கொள்ளுங்கள் அவரை பொறுத்தவரை சாதாரண குடிமகன் ஒருவனின் வாழ்வின் உயர்ச்சியே  தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்தவர் என்பதோடு மட்டும் நின்றுவிடாது வாழ்நாள் முழுவதும் தான் யாருக்காக வாழ்ந்தாரோ அவர்களில் ஒருவராக தன்னை உணர்ந்து வாழ்ந்தவர். அப்படிப்பட்ட சேகுவேராவை கூட தலைவர் என்று கூப்பிடவோ அப்படி நினைக்கும் வகையிலோ அவர் நடந்து கொள்ளவில்லை. சாதரணமாக நம் வாழ்வின் உணர்ச்சிகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் தோழர் எனும் பெயராலேயே இன்றுவரை அவர் அழைக்கப்படுகின்றார். “சே” என்பதன் அர்த்தமே “தோழர்” என்பதுதான். சேகுவேரா எனும் மனிதன் தன்னை பற்றி தன்வாழ்வை பற்றி சிந்தித்ததை விட சாதரணமான குடிமகரான  எங்களை பற்றி சிந்தித்ததே அதிகம். அதற்காக எங்களிடமிருந்து பணத்தையோ , உழைப்பையோ புடுங்கி சேவை எனும் பெயரில் திருப்பி தரவில்லை. சேகுவேரா என்னும் பரம்பரை மேட்டுக்குடியில் பிறந்த மனிதனின் வாழ்வின் நிலை காடு மேடென்று தாழ்ந்து செல்லச்செல்ல சாதாரண தரத்தில் இருந்த குடிமகனின் வாழ்வின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து சென்றது அதன் பெயர் தான் சோஷலிஷம்.
        
   
         அதையே ஒரு நடிகனை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுழைப்பிலும், தன் வியர்வையிலும் எங்களின் முன்னேற்றத்தையா அவன் கண்டு கொண்டிருக்கின்றான். நிலைமை முற்றிலும் எதிர்மாறாக இருக்கின்றது எங்களைப்பற்றி சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை. [தமிழர்களே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு நடிகர்தான் ஒரு விமானநிலையத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஈழத்தமிழர்களை பற்றிச்சிந்திக்க எனக்கு நேரமில்லையென வெளிப்படையாக அறிவித்திருந்தார்]  நாங்கள் மனித உணர்வுகள் மிக்க அடுத்தவனின் உணர்ச்சிகளை மதிக்கத்தெரிந்த மனிதன் என்னும் நிலையிலிருந்து மிருகத்தனமாக நடிகனுக்காக , கையை வெட்டியும்  நடிகனுக்காக சண்டை போட்டும் எங்கள் நிலையை காவாலி, தெருப்பொறுக்கி , பொறம்போக்கு என நாலாந்தர மனிதனாக தாழ்த்திக்கொள்ளும் பொழுது நடிகனோ தலைவன், சிகரம், என்பதையெல்லாம் தாண்டி கடவுள் எனும் விம்ப நிலையை எங்கள் மத்தியில் எடுத்துக்கொள்கின்றான் இதன் பெயர்தான் முள்ளமாறித்தனம் முடிச்சவிக்கத்தனம்.  

                        சுருங்க சொல்வதெனில் நாங்கள்  கேடுகெட்ட நிலையை அடையும்போது உயர் நிலையை அடையும் நடிகனின் பெயரை எங்கள்பெயரின் பின்னே சேர்த்துக்கொள்வதைவிட நாங்கள் உயர் நிலையை அடையவேண்டும் என்பதற்காக சமூகத்தில் தன்னை தாழ்த்திக்கொண்ட கொள்கைவாதியின் பெயரை எங்கள் பெயரின் பின்னே சேர்த்துக் கொள்வது எந்தவகையில் தவறு. நடிகனை முன்னுதாரணமாக கொண்டு நாங்கள் வாழ்வோமானால் நாங்கள் தான் சமூகத்தின் அடுத்ததலைமுறைக்கான கெட்ட உதாரணங்கள்  என்பதை என்றுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எங்கள் தலைவரின் சம்பளம்தெரியுமா...?? அவர் உதவுவதுதான் புரியுமா.....இல்லை அவருக்கு இருக்கும் ரசிகர் படைதான் தெரியுமா......அவர் உழைக்கிறார் அவரது இஷ்டம்???

நடிகர்களுக்காக வாதாடும் இந்த கதாநாயக வெறியர்களின் அடுத்த கேள்விக்கனைகள் இதுதான். ஐயாமாரே உங்கள் நடிகரின் சம்பளமும் தெரியும் அதற்காக அவர்வியர்வை சிந்தி [இன்னும் என்ன என்னவெல்லாம் சிந்தினாரோ] உழைக்கும் விதமும் தெரியும். அட அவர்கள் உதவும் வீதம் கூடதெரியுமையா.
    
            அது என்ன நடிகர்மாரின் சம்பளத்துக்காக எங்களுக்குள் அப்படி ஒரு அடிபாடு. என்னடிகரின் சம்பளம் பெரிதா? உன் நடிகனின் சம்பளம் பெரிதா? என்று உன்தரம் பெரிதா?? என்தரம் பெரிதா??? [இரண்டுபேருமே கீழ்த்தரம் என்பது வேறுகதை] என்று அடிபடுவது போல. எங்கள்  நடிகன் உழைக்கும் சம்பளமே அவனுடையது இல்லை என்பது எங்களுக்கு புரிந்தால்தானே.   


   
           ஒரு நடிகனாக அவர்கள்  என்னத்தை உழைக்கிறார்கள். அவர்கள் பேசும் வசனம் முதல் கொண்டு அவர்கள் போடும் சண்டை வரை அவர்கள் சொந்தமாக எதுவுமே செய்தது கிடையாது. ஒரு படத்தில் அவர்கள் செய்யும் வியத்தகு அம்சங்கள் என்று நாங்கள் நம்பி அவர்களை தலைவர்களாக கொண்டாடக்காரணமான அனைத்துமே அவர்கள் செய்ததில்லை. எவனோ ஒருவன் எழுதிய வசனத்தை தான் சொல்லுவதுபோல நடிகர் ஆட்டையை போட்டு அடித்துவிட அதை நாங்கள் அட என்தலைவரின் அறிவைப்பார்த்தாயா என்று மெச்சிக்கொள்வோம். ஆனால் யாருடைய வசனத்தால் தானுயர்ந்தாரோ அந்த வசனகர்த்தாவே சைக்கிளில் இருந்து இறங்கி காரில் செல்லும் நடிகருக்கு மரியாதை செலுத்தும் நிலையில் தான் நம் தமிழ் சினிமா உண்மையான திறமைக்கு மரியாதை கொடுத்து வைத்திருக்கிறது.
                
                    அதை விடுங்கள் நடிகர் வானுயர பறந்து சண்டை போடும் திறமையை பார்த்து நம்மாளுகள் வியந்து போய் வாயை பிளந்து போய்க்கொண்டிருக்கும் போது எங்கே நடிகர் கிழே விழுந்து வாயை பிளந்து விடக்கூடாதே என்பதற்காக அவரை கயிற்ரோடு கட்டி கடப்பாறையால் தாங்கும் துணைநடிகர்களின் உழைப்பெல்லாம் எங்கே போனது சில சமயங்களில் இவர்களுக்கு சம்பளமே வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் நடிகருக்காக பறப்பதே பிரதிநடிகன்தான். இப்படி தமக்காக நடித்து சில சமயங்களில் இறந்துபோகும் பிரதிநடிகனின் இறப்புக்குக் கூட இவர்கள் போவதே இல்லை அவர்களுக்குத்தான் நேரமே இல்லையே. படத்தின் தொடக்கத்தில் கூட இவர்களின் பெயர்கள் இடம்பெறாது ஏனெனில் நடிகரின் களவு பிடிபட்டுவிடுமே. [சிலர் உயிரை பணயம் வைத்து நடிகிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை]

              அட சண்டைதான் போடத்தெரியவில்லை ஆடவாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஏதோ பாட்டுக்கு முதலாம் வகுப்புப்பிள்ளை உடற்பயிற்சி செய்வது போல  உடம்பை ஆட்டாது கையையும் காலையும் ஆட்ட கமெரா அவரது முகத்தை மட்டும் தெளிவாக அண்மையில் காட்டும். [சிலர் ஆடுவார்கள் என்பதையும் மறுபதற்கில்லை] அப்படியானால் இவர்கள் செய்வதுதான் என்ன...?? நாங்கள் வியந்து போகும் சண்டையும் இவர்கள் போட்டது இல்லை. மயங்கும் வசனமும் இவர்களுடையதில்லை. மொத்தத்தில் ஆடவும் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக செய்து விடுகிறார்கள். தன் மகளை விட இளவயதுள்ள பெண்ணை [இளம் நாயகர்கள் தங்கள் வயதின் பாதியிலும் குறைந்த வயதுள்ள பெண்ணை] ஒரு சாண் துணியுடன் ஆட விட்டு  அவளின் உச்சிமுதல் பாதம் வரை மோர்ந்து தடவி பார்த்து உங்களின் ஆபாச உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பிழைக்கிறார்கள் இந்த போலி திறனாளிகள். இதைத்தான் பிறர் செய்தால் நாம் விபச்சாரம் என்கின்றோம். [தம்உடம்பை வைத்து பிழைத்த இந்த விபச்சாரக்காசில் இமயத்துக்கு வேறுபோவார்களாம் அதை நாங்கள் பக்தி என்று வேறு கொண்டாடி நமக்குள் அடிபட்டுக்கொள்ளவேண்டுமாம்]          
               இப்படி ஒரு படத்தில் நாம் எதை பார்த்து மயங்குகிறோமோ அதெல்லாமே பெரும்பாலும் நாயகனை விட அடிமட்டத்திலிருக்கும் சாதாரண மனிதனால் செய்யப்பட்டதுதான். எத்தனையோ பேரின் உழைப்பை மறைத்து தாங்கள் தான் உழைத்ததாக பொய் விம்பம் காட்டும் இந்த நாயகர்களை எதற்காக நாம் கொண்டாட வேண்டும். 

                                                                                       .                                          ........தொடரும்..........

No comments:

Post a Comment