Friday, 26 October 2012

பசுமாடு தமிழிலே அம்மா என்கிறது – தமிழ் உறவுப் பெயர்கள்


பசு அம்மா என்று கூப்பிடுகிறது, தமிழா! நீ என் ஆங்கிலத்திலே மம்மி என்று கூப்பிடுகிறாய்? என்று ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. தனது அம்மாவை நாகரிகம் கருதி மம்மி என்று கூப்பிடும் கேவலம் கேட்ட நாய்களுக்கு பரிந்து பேச நான் இங்கே வரவில்லை. ஆனால் அம்மா என்பது ஒரு தமிழ் சொல் அல்ல, அதையும் தாண்டி உன்னதமான உலகின் முதல் ஒலி என்பதை கூறவருகிறேன். ஏதோ தமிழில் மட்டும்தான் அம்மா, மிச்ச எல்லாமே சும்மா என மொக்கை போடாதீர்கள் நண்பர்களே! மம்மியும் அம்மாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஒரே ஒலிதான். இன்னொரு விடயம், அம்மா என்பதற்குரிய உண்மையான தமிழ்ச் சொல், தாய் என்பதுதான். ஆகவே, தமிழை கட்டிக் காக்க விரும்பினால் உங்கள் அம்மாவை தாயே என்று அழையுங்கள். என் மாடு கூப்பிடுவதுபோல  கூப்பிடுகிறீர்கள்?

உலகத்தின் எந்த இனத்துக்குமே பெற்றவளை குறிக்கும் ஒலி பொதுவானதுதான். ஒரு பிறந்த குழந்தையால் சிரமப்படாது சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “ம்மா என்பதுதான். காற்றோ, அழுத்தமோ இல்லாமல் மூடி வைத்திருக்கும் வாயை ‘அ‘ அல்லது ‘இ என எளிதாக திறக்கும்போது வருகிற ஒலிதான் ‘ம்மா, அல்லது ‘ம்மி. உலகத்தின் சகல மானுட இனத்துக்கும் பொதுவான, மொழிகள் வழங்கப்படமுதல் ஒலித்த உயிர் ஒலி. ஒலிகளுக்கு பிறகுதான் மக்களே வார்த்தை, மொழி, நாகரிக சொல்லாடல் எல்லாமே.


மொழி
அம்மா
இந்தி
மம்மி
அஃப்ரிக்கான்ஸ்
மம்மி
அல்பேனியன்
மம்ஜே
ஆமீனியன்
மம்மா
அசெர்பைஜானி
மம்மியா
பெலாருசியன்
மம்மிஜா
பெங்காலி
மாமி
டொச்
மும்மி
எஸ்பிராண்டோ (அறிஞர்கள் தயாரித்த சர்வதேச மொழி)
மம்மியோ
பிரெஞ்சு
மொமி
ஜேர்மன்
மமி
கிரீக்
மௌமியா
கன்னடம்
மாம்மி
மலாய்
மம்மியா
ரஸ்சியன்
முமியா
மலையாளம்
அம்மை
சிங்களம்
அம்மே

எல்லா மொழியிலுமே ‘ம்மே தான். இதிலே தமிழ் எங்கிருந்தும் வரவில்லை. எல்லாமே மழலைதான். பிறக்கும் குழந்தை முதன் முதலில் விடுகிற ஒலியை அருகிலிருக்கும் தாய் தன்னை கூப்பிடுவதாக எடுத்துக்கொண்டு மகிழ்கிறாள். அடுத்ததாக, கொஞ்சம் பிரயத்தனப்பட்டு விடும் அடுத்த ஒலியை (ப்பா) தகப்பன் தன்னுடையதாக எடுத்துக் கொள்ளுகிறான் (அப்பா). அவ்வளவே. தமிழ்? அது வேறு. தமிழ் எப்போது தோன்றியதோ, தெரியாது, ஆனால் மனித இனம் தோன்றியது முதலே பெற்றவள் அம்மா தான். ஐயோ, ஆ, சாய், சூய் போல, அம்மா என்பதுவும் ஒலி தான். மாடு கூப்பிடுகிறது என்று மொக்கை போடாதீர்கள். அது கத்தினால் புல்லை எடுத்துப் போடுங்கள். போதும்.

பெற்றவளுக்கான தமிழ்ச் சுட்டு தாய் என்பதுதான். பெற்றவன் தந்தை. ஆய் என்பதே தாய் என்பதன் வேர்ச்சொல். தன் ஆய் என்பதே தாய் ஆனது. ஆயின் ஆய் (அம்மாவின் அம்மா) என்பது ஆயாய் ஆகி, மருவி ஆயா ஆனது. (இது யாழ்ப்பாணத் தமிழில் வழக்கிலில்லை.) அதேபோல அந்தை என்கிற வேரிலிருந்து தன் அந்தை என்பது தந்தை ஆனது. (உந்தை, எந்தை என்கிற பயன்பாடுகள் செங்கத் தமிழிலக்கியங்களில் உள்ளன.)

தமிழின் உறவுப் பெயர்களின் சிறப்புக்கள் இரண்டு. கருக்குடும்பத்தின் உறவுப் பெயர்கள் தன் என்கிற முன்னோட்டோடே பயன்படுகின்றன. இது அன்னியோன்னியத்தை காட்டுகிறது.
தம் அக்கை – தமக்கை
தம் ஐயன் – தமையன்
தன் பின் (தனக்கு பின் பிறந்தவன்) – தம்பி
தன் அகங்கை (உள்ளங்கையிலே வைத்து தாங்கவேண்டியவள்) – தங்கை

அடுத்தது, பெரும்பாலான உறவுப் பெயர்கள் விளிக்கும் (கூப்பிடும்) சொற்களாகவே பயன்படுகின்றன. அம்மை (அம்மா), அப்பன் (அப்பா), அக்கை (அக்கா), அண்ணன் (அண்ணா), மாமன் (மாமா) என எல்லா உறவுகளுமே கூப்பிடும்போது எவ்வாறு வழங்கப்படுமோ, அவ்வாறே வழங்கப்படுகின்றன.

அம்மாவின் சகோதரன் தமிழ் உறவுகளிலே முதன்மையானவனாவான். தனது சகோதரி சம்பந்தமான சகல கடமைகளுமே அவனுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அவனுக்கு சில சிறப்பு உரிமைகளும் கிடைக்கின்றன. (இந்த வழக்கம் பெரும்பாலும் யாழ்ப்பாண வழக்கத்திலே இல்லை) அதன் ஒரு பகுதியாக அம்மான் என்கிற அம்மாவினை ஒத்த பதவி கிடைக்கிறது. மழலை வழக்கான மாமா என்பதுவும் அம்மா,அம்மா என்கிற ஒலியினையே கொண்டிருக்கிறது. (அதற்காக குழந்தை தெரிந்து கூப்பிட்டது என்றில்லை. குழந்தையின் ஒவ்வொரு ஒலியையும் ஒவ்வொரு உறவினர் தன்னை கூப்பிடுவதாக எடுத்துக் கொண்டபோது, இது மரியாதையாக மாமனுக்கு வழங்கப்பட்டது.)  மாமனின் மனைவிக்கு அத்தை என்கிற ஒலி ஒதுக்கப்பட்டது. முற்காலத்திலே மாமனின் மகனையே பெண்கள் திருமணம் செய்வது வழக்கமாதலால், பிற்காலத்திலே வேற்று மனிதர்களின் மக்களை திருமணம் செய்யும் வழக்கம் வந்தபோதும், கணவனின் தகப்பன் மாமா எனப்பட்டார். அவரது மனைவி, மாமி என அழைக்கப்படுவது ஒலி ரீதியான வழக்கமாக அல்லாது, பின்னர் தயாரிக்கப்பட்ட சொல்லாக இருக்கவேண்டும் என கருதப்படுகிறது.

பெற்றோரின் பெற்றோர் பாட்டி, தாத்தா என பொதுவாக வழங்கப்படுகின்றனர். இலங்கையிலே அப்பாவின் பெற்றோர் அப்பப்பா, அப்பம்மா எனவும், அம்மாவின் பெற்றோர் அம்மம்மா, அம்மப்பா எனவும் வழங்கப்படுகின்றனர். தமிழகத்திலே இவ்வாறான குறிப்பிட்டு வழங்கும் வழக்கம் இல்லை.

உங்கள் அப்பர் என்பது கொப்பர் என்றானது உள்ளிட்ட யாழ்ப்பாணத் தமிழின் சிறப்பு உறவுகளைப்பற்றி யாழ்ப்பாணத் தமிழ் – எனது தந்தை மொழி என்கிற பதிவிலே எழுதியுள்ளேன்

No comments:

Post a Comment