Friday, 12 October 2012

தமிழ் சினிமாவின் பித்தலாட்டங்கள்.தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் எல்லோருமே நாக்கையோ, அல்லது அகப்படும் எதையாவதோ பிடுங்கிக்கொண்டு சாகவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. தனிமனிதர்களின் துதிபாடி, நாயக வழிபாட்டை முன்னிறுத்தி எடுத்தால் மட்டுமே படம் ஓடும் என்கிற ஒரே ஒரு மந்திரத்தை வைத்துக்கொண்டு உலக மொக்கையாக படங்களைக் கொடுத்து வெறுப்பேற்றியதும் அல்லாது, அவை தொடர்ச்சியாக படுதோல்விகளை மட்டுமே அடைந்தாலும், தொடர்ச்சியாக – விடாப்பிடியாக அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த நிலைமையில் 2012 இன் மெகாஹிட் படமாக ஒரு இலையான் நாயகனாக நடித்த படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமிழர்களுக்கு அறிமுகமான நாயகன் இல்லை, இயக்குனர் இல்லை, கதை இல்லை, நாயகி இல்லை, ஒப்புக்காக மூன்று காட்சிகளில் மட்டும் வரும் சந்தானம்.. ஆனால் அஜித் என்கிற மந்திரப் பெயருக்காகவே – இந்தியாவிலேயே பெரிய ஒபினிங்கை தரக்கூடிய அந்த உச்ச நட்சத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட பில்லா 2 வை மிஞ்சி வாரி எடுத்தது நான் ஈ படம் வசூலை.

6,000,000 $ செலவில் தெலுங்கில் எடுக்கப்பட இந்தப் படம் தெலுங்கில் 20,000,000 $ ஐயும், தமிழில் 4,000,000 $ ஐயும் அள்ளிக் குவித்துள்ளது. தேவையே இல்லாத பிரமாண்டம், பாட்டு, கூத்து, கவர்ச்சி என்று என்னென்னவெல்லாமோ வைக்கிறார்கள். ஒரு அருமையான திரைக்கதை இருந்தால் கவர்ச்சி, ஆபாசம் மட்டுமல்ல, பெண்களையே காட்டாமல்கூட படம் எடுத்து வெற்றியை காட்டலாம். ஆனால் ஆண்களின் வயிற்றையும், (சிக்ஸ் பக்) பெண்களின் மார்பையும் காட்டுவதே வெற்றிக்கான சூத்திரமாக இருக்கிறது தமிழ் சினிமாவில். கடந்த ஐந்து வருடங்களாக வெளிவந்த 700க்கும் அதிகமான திரைப்படங்கள் சேர்ந்து மொத்தமாக  300,000,000நஷ்டத்தை உருவாக்கியிருக்கின்றன. இவ்வளவு பெரிய நட்டத்துக்கு இரண்டு காரணங்கள். ஒன்று – நாயக வழிபாடு, அடுத்தது – கதைப் பஞ்சம். இந்த இரண்டுக்கும் இடையான முரண்பாடுதான் சாபக்கேடாக ஆகி இருக்கிறது இங்கே.
வந்தேண்டா பால்காரன்...!

ஒரு நல்ல கதை இருந்தால் அதிலே ஒரு தனி மனிதனுக்கு துதிபாடுமாறான சூழ்நிலை இருக்காது, தனி மனிதனுக்கு துதி பாடும் கதைகள் நல்ல கதைகளாக இருக்காது.
உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளை எழுதிய ஆயிரம் எழுத்தாளர்கள் பிறந்த மொழி தமிழ் மொழி. உலகத்தரமான ஆயிரம் ஆயிரம் நாவல்கள் கொட்டிக் கிடக்கின்றன தமிழில். ஆனால் பெரும்பாலும் எதுவுமே திரைப்படமாக எடுக்கப்படுவதில்லை. காரணம்? இலக்கிய அறிமுகம் உள்ள படைப்பாளிகள் குறைந்துவிட்டார்கள், நாவலை திரைப்படமாக எடுக்கும் திறமை இங்கே இல்லை, மக்கள் அதையெல்லாம் பார்க்கமாட்டார்கள் என்கிற மனநிலை. உலக அளவிலான சந்தையைக் கொண்ட ஹோலிவுட் படங்களில் பெரும்பாலனவை நாவல்களையோ, உண்மைச் சம்பவங்களையோ அடிப்படையாக வைத்தே எடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கே அந்தப் பழக்கம் எண்பதுகளின் பின்னர் ஏறத்தாழ கைவிடப்பட்டு விட்டது. மொத்தமே இரண்டு மூன்று கதைகளை வைத்து மறுபடி மறுபடி எடுத்து நம்மை வதைக்கிறார்கள். போதாததற்கு ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கிறோம் என்று அறிவித்தல் வேறு.


ரீமேக்
தொடர் தோல்விகளுக்குப் பிறகு தமிழ் இயக்குனர்கள் கண்டுபிடித்த வெற்றிச் சூத்திரம் இது. ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களை மறுபடி எடுத்தால் ஆபத்து இல்லை, அவை மறுபடி வெற்றி பெரும் என்பது. ஆனால் உண்மை என்ன என்றால் ரீமேக் என்பது வெற்றியை தீர்மானிப்பதில்லை, ஐந்து சதவீத ரீமேக் படங்களே வெற்றி பெறுகின்றன. ஏனையவை வழக்கம்போல தோல்விதான். அதுவும் ரீமேக் என்றால் காட்சிக்கு காட்சி அப்படியே மறுபடி எடுப்பது என நினைக்கிறார்கள், தமிழின், அல்லது காலத்தின் சூழலுக்கு, பண்பாட்டுக்கு அதை சற்றும் மாற்றுவதில்லை. ஆடையின் நிறம் உட்பட அப்படியே மறுபடி எடுப்பதற்கு டப்பிங்கே (உண்மையில் அதன் பெயர் ட்ரக் சேன்சிங் – மொழி மாற்று.) செய்துவிடலாமே? ரீமேக்கை எம் ஜி ஆர் காலத்திலிருந்தே செய்து வருகிறார்கள். சில ஓடுவதும், பல தோற்பதும் காலம் காலமாக நடக்கிறது. ரீமேக் படங்களை எடுப்பதற்கென்றே அல்லது நடிப்பதற்கென்றே தமிழில் இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. இயக்குனர் ராஜா, ஜெயம் ரவி, விஜய், தனுஷ்... இப்படி. ரீமேக் என்பதன் அர்த்தம், ‘ஒரு கலைஞனாக என்னால் மக்களின் ரசனையை புரிந்துகொள்ள முடியவில்லை, சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் எனக்கில்லை, எனவேதான் இன்னொரு கெட்டிக்காரன் செய்ததை மறுபடி செய்கிறேன் என்பதுதான்.  ஆனால் அண்மைக்காலத்தில் வந்த படங்களில் நண்பன் தவிர அனைத்து ரீமேக் படங்களும் மண்ணையே கவ்வின. உத்தம புத்திரன் (ரெடி), கிக் (தில்லாலங்கடி), காவலன் (பொடிகாட்) மற்றும் மிக முக்கியமாக ஒஸ்தி (டபாங்)

கொப்பி
ரீமேக் என்பதே வெட்கக்கேடான நிலையில், அதுவே தோற்றுக்கொண்டிருக்கும்போது இயக்குனர்கள் அதிலும் கேவலமான வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதுதான் தழுவல் எனச் சொல்லிவிட்டு அப்படியே வேற்று மொழிப் படங்களை கொப்பியடிப்பது. அதிலும் ஒரு முன்னேற்றம் - முன்னெல்லாம் ஆங்கிலப் படங்களை மட்டுமே கொப்பியடித்துக் கொண்டிருந்த தமிழ் இயக்குனர்கள் இப்போதெல்லாம் சீன, கொரிய, ஆபிரிக்கப் படங்களை எல்லாம் கொப்பி அடிக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது அவர்களின் முன்னேற்றத்தையே அது காட்டுகிறது.

இப்போதெல்லாம் வெளினாட்டுப் பட டிவிடிக்களை போட்டுப் பார்த்து நல்ல கதைகளையும், காட்சிகளையும் உருவுவதற்கு என்றே பல உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். ரீமேக் துறையில் சிறந்து விளங்குவதற்கு பல நிபுணத்துவம் வாய்ந்த இயக்குனர்கள் உள்ளதுபோல வெளிநாட்டுப் படங்களை கொப்பி பண்ணுவதற்கும் நிபுணர்கள் உள்ளார்கள். அவர்களில் இயக்குனர் விஜய் முக்கியமானவர். அவர் மற்றவர்களை எல்லாம் தாண்டி, உலகத்துக்கே தெரிந்த, சினிமா பார்க்கும் பழக்கமுள்ள மனித சமுதாயத்தின் அனைவரும் பார்த்த டைட்டானிக் படத்தையே கொப்பி பண்ணியவர். (மதராசப்பட்டனம்) அவரது தெய்வத்திருமகளை மூலமான ஐ அம் சாமிலிருந்து கொப்பி அடிக்கும்போது நாயகனின் உள்ளாடை முதற்கொண்டு அனைத்தையும் கொப்பியவர்.

கொப்பியில் காமேடியாகிபோன இருவர் இருக்கிறார்கள். ஒருவர் செல்வராகவன். கிளாடியேட்டர், அபோகலிப்டோ முதலிய உலகளவில் பெயர்போன பதினோரு படங்களை வெட்டி ஒட்டி (தலைப்புக்கூட அவர் சிந்தித்தது இல்லை, பழைய படக் கொப்பி – ஆயிரத்தில் ஒருவன்) அவர் ஒரு படத்தை வெளியிட, அனைவரும் அதை கேவலமாக விமர்சனம் செய்தார்கள். அதற்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்கள்.. “ஆங்கிலப் படங்களுக்கு நிகராக ஒரு தமிழ்ப் படம் எடுத்தால் பாராட்டாமல் பொறாமையில் இப்படிஎல்லாம் பேசும்போது மனம் வேதனைப்படுகிறது. (ஐயா, நீ ஆங்கிலப் படங்களுக்கு நிகராக எடுக்கவில்லை, ஆங்கிலப் படங்களையே எடுத்திருக்கிறாய்!) அடுத்தவர் நமது கே வி ஆனந்த். எழத்தாளர்கள் சுபா தான் இவருக்கு கதை எழுவதாக தலைப்பில் போடுகிறார். ஆனால் கோ (ஸ்டேட் ஒஃப் பிளே),அயன் (மரியா புல் ஒப் கிரேஸ்) அடுத்ததாக மாற்றான் (ஸ்டக் ஒன் யூ) என தழுவு தழுவென்று தழுவியவர் அயன் படத்தில் ஆங்கில பட டிவிடிக்களை வாங்க திருட்டுத்தனமாக இயக்குனர் வருவதாக ஒரு காட்சி வைத்தார். அதில் அவரே நடித்திருந்தால் எதார்த்தமாக இருந்திருக்கும்.

தமிழ் சினிமா உலகத்தையே அதிர்ச்சி அடைய வைத்த கொப்பிகள் மூன்று. உலக நாயகன், கலைஞானி என்றெல்லாம் புகழப்படும் கமலஹாசனின் அவ்வை சண்முகி வந்த காலத்திலே ஆங்கிலப் படங்களை பார்க்கும் வழக்கம் அத்தனை பரவலாக இருக்கவில்லை. அனால் காலப்போக்கில் அதன் ஒரிஜினலான Mrs டவுட்ஃபையர் அகப்பட, கந்தலானார் கமல். அதிர்ந்துபோனது திரையுலகம். அடுத்தது பாரதிராஜா. தமிழ் சினிமாவின் நிறத்தையே மாற்றியவர். தான் வந்து அடுத்த முப்பது வருடங்களுக்கு தனது முதல் படத்தாலேயே செய்வாக்கு செலுத்தியவர், கண்களால் கைது செய் (த தோமஸ் கிரௌன் அஃபையர்) எடுத்து தனது மானத்தை இழந்தார். அடுத்தவர் அமீர். பாரதிராஜா போலவே இன்றளவும் செல்வாக்கை இழக்காத பருத்திவீரன் என்கிற படைப்பை தந்தவர். கதை என்கிற இடத்திலே தனது பெயரை போட்டு நடித்த யோகி வெளியான கொஞ்ச நாட்களிலேயே ஒஸ்காருக்கே அனுப்பப்பட்ட தென்னாபிரிக்க படத்தை (ட்ஸோட்சி) சுட்டது எனத் தெரியவர, மதிப்பு அனைத்தையும் இழந்தார்.

மற்றபடி ஏனைய இயக்குனர்கள் அனைவரும் சுடச் சுடச் சுடுவதை எதோ அது ஒன்றும் தப்பே இல்லை என்கிற மாதிரி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நந்தலாலா (கிகுஜிரோ), ஜக்குபாய் (வசாபி),  மன்மதன் அம்பு (ரொமான்ஸ் ஒன் த ஹை சீஸ்), சரோஜா (ஜட்ஜ்மென்ட் நைட்), கோவா (ரோட் ட்ரிப்), பொல்லாதவன் (பைசிக்கிள் தீவ்ஸ்), ஜேஜே (செரண்டிபிட்டி), வல்லவன் (ஸ்விம் ஃபான்), சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வாங்கிய, தமிழில் ஓடி ஓடி ஓய்ந்துபோன காதல் கோட்டை (த ஷோப் அரவுண்ட் த கோனர்), முரண் (ஸ்ரேஞ்சர்ஸ் ஒன் அ ட்ரைன்), எந்திரன் (பை சென்டினியல்மான், ஐ ரோபோட்),  ஆடுகளம் (கொக் ஃபைட்டர்) என விட்டால் ஒரு நானூறு படங்களின் ஒரிஜினலை சொல்லலாம்.

இயக்குனர்களுக்கு எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு? கதை அகப்படாவிட்டால் நல்ல நாவலை படமாக்கலாம், அல்லது ஒரு எழுத்தாளரை கதை எழுத சொல்லலாம்.. கொப்பி அடித்துத்தான் தீருவேன் என்றால் குறைந்தது தழுவல் என்று ஒரிஜினலின் பெயரையாவது போடலாமே? அடுத்தவனின் மூளையை, உழைப்பை திருடி விற்கும் உங்களுக்கு, கள்ள சீடி வாங்குவோரை, விற்போரை திட்ட என்ன தார்மீக உரிமை இருக்கிறது? நீங்கள் திருடலாம், நாங்கள் திருடக்கூடாதா?


இன்னும் இருக்கிறது வதை... தொடர்ந்து பார்ப்போம்.

4 comments:

 1. மச்சி பேஜ் செட்டிங்க்ல கொஞ்சம் கவனம் கொள்ளுங்க.. பல படங்கள் பிதுங்கி கிட்டு இருக்கு.. (வலைப்பூவில் மட்டுமே)..
  Deluxetemplates.com இல் சூப்பர் டேம்பிலேட்ஸ் இருக்கு நண்பா பாருங்க..

  and I read this article in venkayam.com. Only i use this blog when i come tamilmanam..

  keep give us good articles machi..

  ReplyDelete
 2. "யோகி" ட்ஸோட்சியை சுட்டு எடுத்த படம்தான். ஆனால் அமீர் அப்படத்தில் வெறும் நடிகர் மட்டுமே.
  இயக்குனர் சுப்ரமணிய சிவா

  ReplyDelete
  Replies
  1. அண்ணை மன்னிக்கணும் அப்ப அமீர் ஒரு படமும் சுட்டு எடுக்கவில்லை என்று நீங்க உறுதியாக சொல்ல முடியுமா??? அப்படி சொன்னால் நான் அமீர் படங்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்து எடுக்கின்றார் என்று முழுவிபரமும் தரலாம்...என்ன சொல்லுறீங்க??

   Delete