Saturday, 22 September 2012

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு


வழக்கமாக மேடைகளில் பேசுபவர்கள் ஒரு பொதுவான பாணியை பின்பற்றுவார்கள்...வணக்கம் கூறும் முறை ,நிச்சயம் குறைந்தது நான்கு திருக்குறள் ,அன்னப்பட்சி போன்றவை ...இந்த பாணியை மாற்றினால் அரசாங்கம் வரி விலக்கு அளிக்க மாட்டேன் என்று கூறியதோ என்னவோ தெரியவில்லை மாற்றவே மாட்டேன் என்று விடாப்பிடியில் இருக்கின்றார்கள் ..பெரும்பாலானோர் இதைத்தான் பின்பற்றுகிறார்கள் இப்படியான தொன்றுதொட்டுவரும் மேடைப்பேச்சுக்களை கேட்டால் எனக்கு காதால் ரத்தம் வந்துவிடும் .. ...சுகி .சிவம்

தமிழகத்தின் மிக சிறந்த பேச்சாளரான சுகி .சிவம் ,சு.ப.வீரபாண்டியன் போன்றவர்களது பேச்சுக்களுக்கு பின்பு நீண்ட காலத்தின் பின் நான் கேட்ட ஒரு தரமான பேச்சு பாலமுருகனுடையது ...


சு.ப.வீரபாண்டியன்

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற எல்லோரும் அவசியம் பார்த்திருக்க வேண்டிய நிகழ்ச்சிதொகுப்பு ...
அதில் மெய் சிலிர்க்கும் வண்ணம் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார் பாலமுருகன் ...(சுருக்கமாக கூறினால் எல்லோரையும் துவைத்து காயப்போட்டார் என்றும் கூறலாம் )

தமிழ் நாட்டின் தெருக்களிலே தமிழ்தான் இல்லை என்று பாவேந்தர் மனம்நொந்து பாடினார்
ஆம் தமிழின் நிலை அம்மட்டே ....ஊருக்குள் சென்று தெருவுக்குள் நுழைந்து வீட்டுக்குள் செல்ல காலடி எடுத்து வைப்போம் வாருங்கள் ...
இல்லங்களின் பெயர்களோ வாசினி வாஸ்,வசந்தவிலாஸ் ,ஊருணி வாஸ் ...போதுமா ...எங்கேயாவது யாராவது தமிழ்குடில் ,தமிழர்இல்லம் ,தமிழ் அகம் என்று பெயர்வைத்தால் அவர்களை அரைவேக்காட்டு பைத்தியங்கள் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் ...
இல்லம் என்ற சொல்லிலே இல் வருகிறதாம் ...இல் என்றால் இல்லை என்று பொருளாம் ...அந்த வீட்டில் வறுமைவந்து தாண்டவமாடுமாம் ....தொண்டு செய்து பழுத்தபழம் தந்தை பெரியார் பிறந்த நாட்டிலே வாஸ்து சாஸ்திரமும்  ஜோதிடமும் சேர்ந்து செய்கின்ற மாய மாயங்கள் இவை .....போனால் போகட்டும் என்றே உள்ளே நுழைய முயன்றால் கிரீல் கேட்கள் நம்மை தடுத்து நிறுத்தும் ...இரும்புபடல்கள் என்று சொல்லிவிடாதீர்கள் 10000 ரூபாய் கொடுத்து விலைகொடுத்து வாங்கியது பீற்றிக்கொள்ள வழி இல்லாமல் போய் விடும் ...ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள் நாய்கள் ஜாக்கரதை அதற்கு மேலே வீட்டு உரிமையாளரின் பெயரும் படித்த படிப்பும் வகிக்கின்ற பதவியும் கொட்ட எழுத்துக்களில் ஆங்கிலத்தில் இருக்கும் ...ஒருவேளை நாம் இருப்பது இங்கிலாந்திலேயோ என்று எண்ணி விடாதீர்கள் சத்தியமாக தமிழ்நாட்டில்தான் இருக்கின்றோம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வளர்ந்தே இல்லங்களில் உள்ள பெயர் பலகையில் கூட இன்றைக்கு நாம் தமிழை எழுதுவதில்லை .....
சரி அனுமதி கேளுங்கள் காலிங் பெல்லிடம் மன்னிக்கவும் அழைப்பு மணியிடம் ...வந்து கதவு திறக்கையில் ...
கதவிடுக்கில் கிரீச் கிரீச் என்று சத்தம் வரும் ...வந்து கதவை திறந்தவர் பெயரை கேட்டால் ரமேஷ் சுரேஷ் என்று பெயரும் வரும் ...ஆம் இல்லங்களில் உள்ளவர்களின் பெயர்களில் கூட இன்றைக்கு தமிழ் இல்லை 
இல்லங்களின் வாசல்களிலே வெல்கம் என்று மிதியடி போட்டிருப்பார்கள் ....
நாம் மிதித்து செல்ல வசதிக்காக போட்டிருக்கின்றார்கள் ....

வீடு மூன்றடுக்கு மாளிகையா கிரௌண்ட் ப்ளோர்ரா ,செகண்ட் ப்ளோரா என்பார்கள் தவறிக்கூட தரைத்தளவீடு,முதல்தள வீடு ,இரண்டாம் தள வீடு என்று சொல்ல மாட்டார்கள் ...
வீட்டுக்குள் சென்றால் ஒபென்ஹால் பாத்ரூம் பெட்ரூம் கிச்சின் என்றெல்லாம் உண்டு கடன் வாங்கி கட்டிய வீடல்லவா ....அதனால்தான் மொழியையும் கடன்வாங்கி பேசுகிறார்கள் ...
இவர்கள் தாயை மட்டுமல்ல தாய்மொழியையும் அனாதை இல்லத்தில் விட்ட பாவிகள் ...
கதவு டோர் ஆனது சாளரம் யன்னல் ஆனது மரபேழை இழை பேழை எல்லாம் இப்பொழுது பீரோ ஆனது ..பூட்டிற்கு சாவி எங்கே?...எல்லாம் அரபு சொற்கள் இங்கே ......

உணவுப்பொருட்களில் கலப்படம் என்றால் கோபம் வருகின்றதே ...உங்கள் தாய் மொழியில் கலப்படம் என்றால் கோபம்வரவில்லையே ஏன்?

வேட்டிக்கட்டுவதால் வேட்டி வேஷ்டி ஆனது ..உயர்ந்திருப்பதால் மிசை...மேசையாய் இருந்து மேதையானது.....

இல்லங்களில் உள்ள பெயர்களில் கூட இற்றைக்கு தமிழ் இல்லை...பாதருக்கு டாடியாம் மதருக்கு மம்மியாம் ...அப்பா ..அம்மா..என்ற சொற்களை எல்லாம் தமிழர்களே இன்றைக்கு அம்மியில் வைத்து நசுக்கி விட்டீர்களே ...
அதுவும் மம்மி என்று அழைக்கும்போதே அந்த தாய் அடைகின்ற பூரிப்பு மகிழ்ச்சி எவ்வளவு தெரியுமா ?....ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகன் மம்மி என்று அழைக்கக்கேட்ட தாய் என்று புது குறளே படைக்கலாம்...
வள்ளுவரே என்னை மன்னித்துவிடுங்கள் ....
இவர் எல்டர் பிரதராம்... இவர் யங்கர் பிரதராம் ....அண்ணன் தம்பிகளென்றே அண்ணாவும் தம்பியும் சரித்திரம் படைத்து விட்ட நாட்டில்தான் இந்த கொடுமை ........
அதைவிட தமையன் தம்பி என்று தீந்தமிழில் அழகான சொற்களுண்டு ...எல்டர் பிரதர் யங்கர் பிரதர் வேண்டுமென்பவர்கள் இவர்கள் கனி இருக்க காய் கவரும் தமிழ் மக்கள் அல்ல தமிழ் மாக்கள் ..

ஐந்தறிவு விலங்கிற்கு தெரிந்த தமிழ் ...பகுத்தறிவு தமிழனுக்கு தெரியாமல் போனதே ஏனோ ?...
ஆம் இன்றைக்கு நாம் உண்ணுகின்ற உணவில் கூட தமிழ் இல்லை 
பசி எடுத்தல் தமிழா ரைஸ் கேட்கின்றாய் சாதம் கேட்கின்றாய் எங்காவது சோறு கேட்கின்றாயா ?
சோறு என்றால் அரிசி உணவு என்று பொருள் இறைவனுடைய திருவடி நிழல் என்றும் பொருள் ...வெந்த அரிசிக்கும் வேகாத அரிசிக்கும் வேறுபாடு அறியாத ஆங்கிலத்திலே கேட்கின்றாயே ?..
கருவேற்பிலை கார்ப்பிலையானதே சந்தணம் சாண்டல் ஆனது இல்லங்களில் உள்ள உணவுப்பொருட்களிலும்  பயன்பாட்டுபொருட்களிலுமே இன்றைக்கு தமிழ் இல்லை ...
மோர்னிங் பெட்டில  இருந்து எழுந்திரிச்சு டிய குடிச்சுட்டு டிபன் பண்ணிட்டு ஆபீஸ்இக்கு கிளம்பி இந்த ட்ராபிக்இல போனா மத்தியானம் ஆபீசிலேயே லஞ்ச முடிச்சிட்டன் இப்ப வீட்டுக்கு வந்திருக்கன் டயட்டா இருக்கு ஒரு டி போட்டுட்டு வா ....என்று நாகரீக தமிழில் பேசும் தமிழர்களே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் நீங்கள் நாகரீக தமிழை பேசவில்லை தமிழன் என்ற அடையாளத்தை இழந்துகொண்டிருக்கின்றீர்கள் 
என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள் 

செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ ?....என்ற பாவேந்தருடைய பாடல்வரி என்னுள் கனலாய் இருக்கின்றது ...
தமிழன் பண்பாடே உறவுமுறை பழக்கவழக்கம் உணவுமுறை எல்லாவற்றையும் அழித்து அனாதை ஆக்க ஆசைப்படுகின்றான் ...

ருச்சிய நாட்டு அறிஞன் ஒருவன் சொன்னான் "என் மொழி நாளைக்கு சாகுமென்றால் அதற்கு முன்னரே இன்றைக்கே நான் சாக விரும்புகிறேன் என்று ..
இக்கருத்துக்கு குடைபிடிக்கும் உலக தமிழர்களே எழுந்துவருங்கள் ....நம் தமிழை உயர்த்தி பிடிப்போம் ...இல்லத்திலே மெல்ல தமிழ் இனி சாகுமா வளருமா என்று தீர்மானியுங்கள் என்று கூறி விடை பெறுகின்றேன் நன்றி வணக்கம் 

என்றவாறு பாலமுருகனின் பேச்சு அமைந்திருந்தது .........நிச்சயமாக தமிழ் ஆத்மாக்களின் இதயத்தை தட்டிப்பார்க்கின்ற பேச்சு

No comments:

Post a Comment