Sunday, 23 September 2012

மோனாலிசாவின் எலும்புக்கூடு - அகழ்வில் கிடைத்த ஆச்சரியம்!




லியார்னடோ டா வின்சியின் அதி உன்னதப் படைப்பான, மறுமலர்ச்சிக்கால ஓவியங்களில் தலைசிறந்ததாக கொண்டாடப்படுவதான மோனா லிசா ஓவியத்தை வரைய டா வின்சிக்கு மொடலாக இருந்த பெண்ணின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்திருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தாலியின் புளோரன்ஸ் நகரிலுள்ள ஒரு கன்னியர்மடத்தின் நிலப்பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடானது மோனா லிசாவினுடையதாக இருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.
அகழ்வு நடக்கும் மடம்

புளோரன்ஸ் நகரத்தின் பட்டு வியாபாரியான பிரான்சிஸ்கோ டெல் கியோகொண்டாவுடைய மனைவியான லிசா கேரார்டினி என்கிற பெண்மணியே டா வின்சிக்கு மோனா லிசா மொடலாக இருந்தவர் என பெரும்பாலான வரலாற்றறிஞர்கள் நம்புகிறார்கள். தனது கணவன் இறந்ததும், லிசா கன்னியாஸ்திரீயாக வாழ்க்கையை நடத்தினார் எனவும், ஜூலை 15, 1542 இல் தனது 63ஆவது வயதில் அவர் இறந்தார் எனவும், வர இறந்ததும், அவர் பணிபுரிந்த கன்னியர்மடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் எனவும் நம்பப்பட்டு வந்தது. 

சென்ற வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு

அவ்வாறாக அவர் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட புனித எர்சுளா கன்னியர்மடத்திலே அகழ்வுப் பணிகள் சென்ற வருடம் தொடங்கப்பட்டன. மடத்தின் ஒரு மண்டபத்தின் அடியில் தோண்டியபோது ஒரு பெண்ணின் மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் நிதிப் பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்ட அந்த அகழ்வுப் பணியானது சென்ற மாதம் மீண்டும் தொடங்கப்பட்டபோது அவர்கள் ஒரு முழுமையான பெண்ணின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தார்கள்.
எலும்புக்கூடு

லிசாவின் இரண்டு மகன்கள் என நம்பப்படும் எலும்புக்கூடுகளோடு இந்த எலும்புக்கூட்டின் DNA மாதிரிகள் ஒப்பிடப்பட்டு, ஒரு தாய், இரண்டு மகன்கள் என அந்த எலும்புக்கூடுகள் உறுதி செய்யப்பட்டால், அது வரலாற்றில் பதியப்பட்டுள்ள பட்டு வணிகரின் குடும்பம்தான் என உறுதியாகும். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் மண்டையோட்டுக்குரிய முகத்தை  கணினி மூலம் வரைந்து ஒப்பிடுவதன்மூலம் அது டா வின்சியின் ஓவியத்தோடு பொருந்திப் போனால், உலகப் புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்துக்கு மொடலாக அமர்ந்த பெண்ணின் எலும்புக்கூடு என்கிற உலகப் பெரும் சொத்து நமக்குக் கிடைக்கும்.

எனினும், ஒரு வருடத்துக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடும் ஒரு உடலுடையதுதானா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.


உலகப் புகழ் பெற்ற இந்த ஓவியத்தை டா வின்சி 1504 இல் தொடக்கி 1519இல் முய்டித்தார் என நம்பப்படுகிறது. மொடலாக லிசா இருந்தாலும், டா வின்சி இந்த ஓவியத்தை ஆனா பெண்ணா என கண்டுபிடிக்கமுடியாத வகையில் ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாது வரைந்தார். மோனாலிசா என்கிற பெயரே கிரேக்க மொழியில் ஆண், (Amona) பெண்(Lisa) என்கிற சொற்களை பொருத்தி உருவாக்கப்பட்டதுதான். உலகத்தின் மிக குழப்பமான, வசீகரமான, புகழ்பெற்ற, அதிகளவில் கவர்ந்த, கவரப்பட்ட ஓவியம் இதுதான். இதன் புன்னகையே தனியாக உலகப் பிரசித்தி பெற்றது.
(neethujan bala)

No comments:

Post a Comment