Thursday, 20 September 2012

நடராஜர் - ஆனந்தக் கூத்தும் அறிவியலும்


நடராஜர்


எல்லாம் வல்ல ஆனந்த நடராஜப் பெருமானின் பாதாரவிந்தங்களைப் பணிந்து வணங்கி.. என்பதாகத்தான் நான் படித்த மகாஜனக் கல்லூரியின் எந்த உரையையும் – அது எனது செல்லப் பிராணி என்கிற தலைப்பில் எனது மச்சாள் நிகழ்த்தும் சிறு பேச்சாகட்டும், அல்லது இரண்டு மணித்தியாலங்கள் பொறுமையை சோதிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளான நினைவுப் பெருரைகளாகட்டும் – தொடங்கும். ஏனெனில் எங்களது கல்லூரியுள் அமைந்துள்ள கோயிலின் தெய்வம் ஆனந்த நடராஜப் பெருமான். சொந்தப் பாடசாலையின் பெருமை பாடுவதாகத் தொடங்கவேண்டியுள்ள இந்தக் கட்டுரைக்காக என்னை மன்னித்தீர்களானால்,  சொந்த இனத்தின் பெருமையாக உள்ள நடராஜப் பெருமானின் சிறப்பை ஆராயலாம். நாம் தமிழராக பெருமைப்படத் தேவையில்லாத பல விடயங்களுக்காகப் பெருமைப்படுகிறோம். ஆனால் நமது உன்னதப் பெருமைகளை மறந்துவிடுகிறோம். இன்னும் எத்தனை காலத்துக்கும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதானதான ஒரு கர்வம்தான் நடராஜப் பெருமானின் திருவுருவம். அதனால்தான், பாடசாலை என்றாலே சரஸ்வதி சிலைதான் வைக்கவேண்டும் என்கிற மரபை உடைத்து, (யாழ்ப்பாணத்தின் 90% பாடசாலைகளில் - அவை கிறிஸ்தவப் பாடசாலைகளாக இருந்தாலும் – முன் பூந்தோட்டத்தில் ஒரு சரஸ்வதி சிலையை நான் காணுகிறேன்.)  எனது பாடசாலையில் நடராஜப் பெருமானின் சந்நிதி உள்ளது. அதன் வலிமையைத்தான் பாருங்களேன், இறைநிராகரிப்புக் கொள்கைகளை உடைய என்னை, நடராஜரின் பெருமைகளை பேசும் கட்டுரையை எழுத வைத்ததோடல்லாமல், அந்தக் கட்டுரையையே, வழமைபோல ‘எல்லாம் வல்ல ஆனந்த நடராஜப் பெருமானின் பாதாரவிந்தங்களைப் பணிந்து வணங்கி.. எனத் தொடங்க வைத்துவிட்டதே!

மகாஜனக் கல்லூரியின் ஆனந்த நடராஜர்


அவ்வாறான நடராஜரின் திருவுருவத்தை ஆதியிலிருந்து சமய ரீதியாக, தத்துவ ரீதியாக, அறிவியல் ரீதியாக, கலா ரீதியாக ஆராய்வோம், வாருங்கள். நாத்திகம் பேசுவது பஷன் ஆகிவிட்டதால், கண்மூடித்தனமாக மதரீதியான எல்லாவற்றையும் மறுதலிக்கும் நவயுக இளைஞர்கள் மத்தியிலே, விஞ்ஞானமும் ஒருவகையிலே கண்மூடித்தனமாக நம்பவைக்கும் மதம்தான் என்பது தெரியாமல், எல்லாவற்றுக்கும் விஞ்ஞான விளக்கம் கேட்கும் அந்தக் கற்பித உலகத்தில் வாழ்பவர்களுக்கு மத்தியிலே, இந்தக் கட்டுரையை வளர்க்க வேண்டியுள்ளதால், மதம், ஆன்மிகம், அடிப்படை சக்தி, இறைவன், உலகம், விஞ்ஞானம், பரிசோதனை, சோசலிசம், கொம்யூனிசம்...  எதிலுமே நம்பிக்கை இல்லாதவனாக, (Infidel) சிந்தனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் சொலிப்சிசத்தின் (Solipsism) சுய வடிவத்தை நான் பின்பற்றுகிறேன் எனச் சொல்லிவிட்டு ஆரம்பிக்கவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் இந்தக் கட்டுரை மதப் பிரசங்கமாக மாறி விளங்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.
- நீதுஜன் பாலசுப்பிரமணியம்-


1:அறிமுகம்

2004 ஆம் ஆண்டு, இரண்டு மீட்டர் உயரமான நடராஜர் சிலை ஒன்று ஜெனீவாவின் CERN என்கிற European Centre of Particle Physics ஆய்வு மையத்திலே வைக்கப்பட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தியாவுடனான அந்த நிறுவனத்தின் நட்பை காட்டுமுகமாக இந்திய அரசால் அந்த சிற்பம் அன்பளிக்கப்பட்டது. பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடாக கருதப்படக்கூடியது இது என்பதால், அந்த நிறுவனத்திலே இது நிறுவப்பட்டுள்ளது.
செர்ன் நடராஜர்

உலகத்தின் அருங்கலைச் செல்வமான இது தோற்றம் பெற்றது, விருத்தியடைந்தது எல்லாமே தென்னிந்தியாவிலேதான். ஆடற் தலைவனின் நடராஜ உருவம் தமிழர்களின் கொடை. ஒட்டுமொத்த இந்தியாவின், இந்துக்களின், தமிழர்களின் கலாசார அடையாளம்தான் நடராஜர் உருவம். நீங்கள் எந்த மொழிப் படத்திலும், நூதனசாலை, அல்லது கலைப் பொருட்கள் விற்குமிடம் என ஒரு காட்சியை காட்டினால் அங்கே ஆடற் தலைவனின் சிலையை காண்பீர்கள். உலகெங்கிலுமே பரந்துள்ள, கலையின் குறியீடு இது. உலகளவில் நடராஜர் சிலை கடத்தப்பட்டளவு வேறு சிலைகள் கடத்தபட்டிருக்குமா, சந்தேகமே.

நடராஜர் என்பது சமஸ்கிருதப் பெயர். ஆடலிறை என்பதாக இதனை மொழியாக்கம் செய்கிறார்கள். அபத்தம். தமிழர்கள் உருவாக்கிய உருவத்துக்கு தமிழிலே பெயரில்லையா? கூத்தன் என்பதுதான் அந்த உருவத்தின் தமிழ்ப் பெயர். ஆனந்தக் கூத்தன் தான் ஆனந்த நடராஜர். பரதமும், நடராஜரும் தமிழர் உலகத்துக்கு வழங்கிய அருஞ் செல்வங்கள். ஒன்றோடு ஒன்று பிணைந்தவை. இசை, ஆடல், சிற்பம் என்பதான முதுகால முப்பெரும் தமிழர் கலைகளின் சங்கமம், நடராஜர் திருவுருவம்.

அந்த நடராஜர் உருவத்தை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை என நான் நம்புகிறேன். எனவே, சற்றும் சம்பந்தமே இல்லாத தொங்கலுக்கெல்லாம் போய்த்தான் இந்தக் கட்டுரை பயணிக்கும். அலுப்பூட்டலாம், வெறுப்பேற்றலாம், நொந்துபோகும் அளவுக்கு நீண்டுகொண்டே போகலாம். யார் கண்டது, இந்தப் பதிவை சுட்டு, வெட்டி, தனது பதிவாக போடப்போகும் நண்பர்களில் யாராவது இதை மகிழ்வூட்டும் அளவுக்கு சுருக்கி விடலாம். காத்திருப்போம்.


அல்லது  அதுவரை காத்திராமல் இறங்குவோம்...
விரைவிலேயே…


சிந்துவெளி  நாகரிகத்தில் வணங்கப்பட்ட சிவன், வேதகால உருத்திரன், ஆரியர்கள் பயந்த தமிழர் தலைவன்தான் சிவனா, முதற் தமிழ்ச் சங்கத்தில் சிவன்புலவனாக இருந்தானா...

இன்னும் சிதம்பரம், நடராஜ தத்துவங்கள், நடனம், சிற்பங்கள்...
எல்லாமே.....


......பார்ப்போம்.

2 comments:

  1. நடராஜர் என்று சொன்னால் அது இனம் புரியாத உடல் சிலிர்ப்பு உண்டாகும் அந்த வார்த்தையின் பொருள்

    ReplyDelete