Tuesday, 11 September 2012

9/11 ஸ்பெஷல் - ஒசாமா கொலையில் உதவிய பாகிஸ்தான் மருத்துவர் பரபரப்பு பேட்டி!



9/11 ஸ்பெஷலாக, ஒசாமா பின் லேடன் கொலையில் சம்பந்தப்பட்டிருந்த பாகிஸ்தான் மருத்துவர் ஷாகில் அப்ரிடி முதன் முதலாக வாய்திறந்தார். லேடனை கொல்லுவதில் தனக்கு இருந்த பாரதூரத் தன்மையை இப்போதுதான் உணர்வதாக அவர் மனம் திறந்தார்.
ஷாகில் அப்ரிடி

அமெரிக்க உளவுத்துறை CIA ஒசாமாவை பொறிவைத்தபோது உதவியதற்காக இவர் பாகிஸ்தானிய உளவுத்துறை ISI ஆல் கைது செய்யப்பட்டார். ஒசாமாவின் இருப்பை உறுதிசெய்வதற்காக ஒசாமாவின் குடும்பத்தவர்களின் DNA மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக,போலியான ஹெபடைடிஸ் B தடுப்பூசி வழங்குபவற்காக இவர் போயுள்ளார் எனத் தெரியவருகிறது. இவரை கைது செய்த ISI, இராணுவக் குழு ஒன்றுக்கு உதவியதற்காக இவரைக் குற்றம் சாட்டி இருந்தாலும், CIA க்கு உதவியதானால் ஏற்பட்ட கடுப்பே இவரைக் கைது செய்ததற்கு காரணம் எனத் தெரிகிறது. கடந்த மே மாதம் இவருக்கு 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு முதன்முதலாக வாய்திறந்த இவரது பேட்டி இன்று நள்ளிரவு ஃபொக்ஸ் செய்தி சனலில் வெளியானது.பாகிஸ்தானின் பெஷாவர் மத்திய சிறையில் கடும் காவலில் வைக்கப்பட்டிருந்த இவரது பேட்டி எவ்வாறு வெளியானது என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது. இவர் அடைத்து வைக்கபட்டுள்ள  சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியை கடத்திக் கொண்டுசென்று இந்தப் பேட்டி தொலைபேசியாலேயே எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.



தனது பேட்டியில், CIA குறிவைத்தது ஒசாமா என்று தெரியாமல்தான் தான் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். வெறுமனே அந்த வீட்டில் தீவிரவாதிகள் இருப்பது மட்டுமே தனக்கு சொல்லபட்டதாகவும், அதனால்தான் தான் உதவியதாகவும் தெரிவித்த அவர், அது ஒசாமாதான் என தனக்கு தெரியாது என்றார். வேலை முடிந்ததும் தன்னை ஆஃப்கானிஸ்தானுக்கு தப்பி ஓடிவிடுமாடி CIA கூறியதாகவும், அதற்கு தேவை இருக்கும் என தான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள சூனியப் பிரதேசத்தி கடக்கவும் தன்னால் முடியாதிருந்தது என்றார். ஒசாமா இறந்து 20 நாட்களில் இவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர், தொடர்ந்து எட்டு மாதங்கள் தனது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும்,ஒரு வருடமாக தனது விலங்கை அவர்கள் கழற்றவில்லை எனவும் சொன்னார். நாய்களைப்போல, நக்கி சாப்பிட மட்டுமே தான் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தான் மிகக் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர்கள், “இந்தியாவை விட அமெரிக்காதான் எங்களது முக்கியமான விரோதிகள் என அடிக்கடி சொன்னதாகவும் தெரிவித்தார்.


இத்தனை சித்திரவதைகள் கொடுக்கப்பட்டாலும், அமெரிக்காவுக்கு உதவி செய்ததற்கு தான் பெருமைப்படுவதாகவும், இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் மறுபடி உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் விருப்பம் தெரிவித்தார் என மேலும் அந்தப் பேட்டி தெரிவிக்கிறது.



ஒசாமாவின் கொலையானது பாகிஸ்தானுக்கு பல வழிகளில் அவமானமாக ஆகிவிட்டது. ஒசாமாவுக்கு புகலிடம் கொடுத்தது என்பது ஒரு கேட்ட பெயர். ஊடுருவிய ஒசாமாவை கண்டுபிடிக்கவில்லை என்பது ஒரு கரும்புள்ளி. அத்துடன் வேறு ஒரு நாடு, தனது நாட்டுக்குள் ஊடுருவி, விசாரணை செய்து, தனது அனுமதி இல்லாமலேயே ஒரு கொலையையும் செய்தது அதன் கையாலாகத் தனத்தையும் காட்டுகிறது. எனவே,இந்தியாவை விடவும் அமெரிக்கா அதன் முக்கிய எதிரியாக ஆகிவிட்டது. எவ்வாறாயினும்,9/11 தாக்குதலுக்கு பதிலாக அமெரிக்கா ஒசாமாவை கொன்றது என எடுத்துக்கொண்டாலும்,அந்த ஒசாமாவை கொன்ற தாக்குதலுக்கு பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு கொடுக்கப்போகும் பதிலடி என்ன?

(Neethujan balasupramaniyam)

No comments:

Post a Comment