Thursday, 9 August 2012

கோப்பாயில் கோட்டையா......??? வியப்பும் முழிப்பும்.......!!!!!
இலங்கையில் எங்கெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அதிக பாதுகாப்பும் அவ்விடத்தை முக்கியத்துவப்படுத்தி சிறப்பு கவனிப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களை பொருத்தவரை இது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் அறிந்ததே. யாழ்பாணத்தில் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்ற போதும் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலவற்றை தவிர ஏனைய வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் கவனிக்கப்படாது விட்டு விடப்பட்டன என்பது கவலைகுரியதே. அந்த வகையில் யாழ்பாண வாழ் தமிழனாக எனது மன வேதனையை வெளிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கமாகும்.
                                                                      அண்மையில் நமது வெங்காயம் நண்பர்களுடன் யாழ்ப்பாணத்தின் சில முக்கியமான இடங்களுக்கெல்லாம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது நாங்கள் தெரிவு செய்த ஒவ்வொரு ஊரினதும் முக்கியமான இடங்களைபற்றியதேடலில் அவ்வூர்களில் சில ஊர்களின் வரலாற்று சின்னங்களையும் குறித்து அறியக்கிடைத்தது. வரலாறு சார்ந்த சின்னங்கள் என்றாலே எதிர்பார்ப்புக்கள் ஏனோ கண்மூடித்தனமாக வளர்ந்துவிடும் என்பது உண்மைதான். அதற்கேற்ப ஒவ்வொரு ஊரின் வரலாற்று இடங்கள் குறித்தும் எங்கள் மனதிலோ பிரம்மாண்டமான எண்ணங்களை வகுத்து கொண்டு போன எங்களுக்கு அந்த ஊரும் அவ்விடங்களும் தந்தது பூரணமான ஏமாற்றமும் வேதனையையும் மட்டுமே.

கோப்பாய் சங்கிலியன் வளைவும் குதியடிக்குளமும்
இதுதான் கோட்டை இருந்த இடம்

யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற யாழ்பாண இராசதானி நல்லூரில் அமைந்திருந்த போது அவ்வரசின் கீழ் பாதுகாப்பு கோட்டைகளும் உப அரசுகளும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பாதுகாப்பு அரணாகவும் உப அரசாகவும் இருந்த ஓரிடமே கோப்பாய். இதனால் கோப்பாயில் ஒரு பாதுகாப்புக் கோட்டை அமைந்திருந்ததுடன் அரசர் அடிக்கடி வந்து தங்கியிருக்கும் இடமாதலால் இக்கோட்டையின் முன்பு ஒரு நீராடும் தடாகமும் அமைக்கப்பட்டிருந்தது. நல்லூரில் எவ்வாறு யமுனாஏரி ஒரு நீராடும் தடாகமாய் அமைந்ததோ அதே போல் இங்கு அமைந்த இத்தடாகத்திற்கு குதியடிக்குளம் எனும் பெயர் அமைந்து விட்டது. அதுமட்டுமல்ல போர்த்துக்கேயர் படைகளின் உட்புகுவை தடுக்க கோப்பாயில் ஒரு பாதுகாப்பு படையையும் நிறுத்தி வைத்திருக்கிறான் சங்கிலியமன்னன். மேலும் கோப்பாயில் காணப்படும் இக்கோட்டைக்கும் நல்லூரில் காணப்பட்ட பிரதான அரசமாளிகைக்கும் இடையில் சுரங்க பாதைகளும் இருந்துள்ளன.போர்த்துகேயருக்கும் யாழ்பாண அரசுக்குமான யுத்தத்தின் போது இச்சுரங்கப் பாதையின் வழியாகவே கோப்பாய்க்கு தப்பி வந்த சங்கிலியன் இங்கிருந்து வன்னிராஜ்ஜிய உதவியை பெற்று மீண்டும் போர் புரிந்ததாயும் பின்னர் இங்கு தங்கியிருந்த சங்கிலியனை காக்கை வன்னியனின் படை சார்ந்த பிரிவினரே காட்டி கொடுத்ததாயும் ஒரு சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுடன் “கோப்பாய்” எனும் புத்தகத்திலும் அவ்வாறே எழுதப்படுள்ளது. அத்தோடு இன்றுவரை இராசபாதை என அழைக்கப்படும் வீதியானது ராஜபாட்டையாக இருந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது.
                             
                                         கோப்பாய் சங்கிலியன் கோட்டை குறித்து வரலாறு சொல்லும் சான்று இதுதான். இந்த தகவல்களை ஒரு வழியாக அறிந்து கொண்டு நாங்கள் நாலுபேரும் யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த மன்னனின் அமைவிடத்தை காணப்போகின்றோம் என்று மகிழ்வுடன் புறப்பட்டோம். அரண்மனையின் இடிபாடுகள் தான் தற்போது எஞ்சியிருக்கும் என அறிந்திருந்தாலும் வாசித்ததிலிருந்து கோட்டை வளைவும் குளமும் மட்டும் எஞ்சியிருப்பதாக அறிந்து கொண்டோம்.
கோப்பாய் குதியடிக்குளம்
             
                                 ஒரு வழியாக கோப்பாய்க்கு போய் இராஜவீதியையும் அடைந்தாயிற்று. இனி கோட்டை வளைவையும் குதியடிக்குளத்தின் அமைவிடத்தையும் விசாரிக்க வேண்டியதுதான் பாக்கி. சரி என்று எதிரிலிருந்த கடையொன்றில் விசாரித்தால்
                       “தம்பி கோப்பாயில் கோட்டையா ........?? உங்களுக்கு என்ன மறை கழன்று விட்டதா...??” என அடிக்காத குறையாக வெளியே கலைத்து விட்டார்கள். அது மட்டுமில்லை அவருக்கு ஒரு 50/55 வயது இருக்கும் அதனால் “தான் முதியவராம் கோப்பாயில் அப்படி இடமிருந்தால் தனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் வீணாக நேரத்தை வீணாக்காதீர்கள்........ “ என அறிவுரை வேறு. இம்மட்டுக்கும் அவரின் பிறப்பிடமும் இருப்பிடமும் கோப்பாய்தானாம். [வரலாறு வாழ்ந்திடும்...மண்ணாங்கட்டி நாண்டுகிட்டு சாகுங்கடா.....].
                             
                                           அச்சமயம் தான் கடையிலிருந்து சாப்பிட்டு வெளியே வந்த தலைக்கு சிவப்பு கோழிச்சாயம் பூசியிருந்த ஒரு இளைஞர் நாலு பக்கமும் அனுமார் வால் மாதிரி தொங்கிகொண்டிருந்த தன்ற கால்சட்டைக்குள்ள இருந்து காசை எடுத்து சிரித்துக்கொண்டே “ என்னண்ணே சங்கிலியன் கோட்டையோ ஒஹ் அதுக்கு எப்பிடி போறதெண்டா...... {அப்பாடா ஒருத்தனுக்கு தெரிஞ்சிருக்கே ஒரு வழியா போயிடலாம் எண்டொரு நிம்மதி} ........நல்லூருக்கு போய் முத்திரைச்சந்தியில விசாரியுங்கோ காட்டுவினம்.......நீங்கள் ஏதோ மாறி வந்திட்டியள் போல...” {கொய்யால அது தெரியாமத்தான் நாங்க வந்திருக்கிறோம் பாரு......அம்புட்டுத்தான் முடிஞ்சிருச்சு எங்க எல்லோருக்குமே ராஜபாட்டை படத்தை நாலுதரம் பார்த்த மாதிரி இருந்திச்சு.....பயபுள்ள வாயில இனிப்பை வைச்சு அடியில இடியை வைச்சிட்டானே......}.
                     
                                        சரி இது ஆவுரதில்ல எண்டு நினைத்த படியே சற்று தள்ளியிருந்த சயிக்கில் கடையில நிண்ட 40/45 வயதுள்ள ஒரு அண்ணாவிடம் கேட்டால் அவரும் இடத்தை சொன்னார். அப்பதான் பூமி ஒருக்கா சுத்திச்சுது ஏன்னெண்டால் நாங்கள் முதல் விசாரித்த கடைக்கு முன் ஒழுங்கையில் தான் குதியடிக்குளம் அமைந்திருந்தது. சரியென்று நொந்த மனதை ஆற்றிக்கொண்டு கோட்டை வளைவை அடைந்து கோட்டையை பார்க்கப்போறோம் எண்டால் இழவு இடிபாடுகளைகூட முழுசாக்காணோம் ஒன்றிரண்டு செங்கல்கள் தான் பாக்கி.
                                           
                                   அருகிலிருந்த வீட்டில் விசாரித்ததில் அந்த வீட்டு 27/28 வயது அண்ணன் சங்கிலியன் கோட்டை குறித்த தனக்கு தெரிந்த தகவல்களை சொன்னார். கோப்பாயில் இருக்கும் இவருக்காவது இக்கோட்டையை பற்றி தெரிந்திருக்கிறதே என சற்று மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் அங்கிருந்த அக்கால கிணறுகளும் சுரங்கங்களும் மூடப்பட்டுவிட்டதாகவும் தாங்கள் சிறுவயதில் அக்கிணறுகளை பார்த்ததாயும் கூறினார் அவர். அதைவிட சிறிது வருடங்களுக்கு முன்னால் வரை கோட்டைக்கு வரும் பாதையின் தொடக்கத்தில் இருந்த கோட்டை வளைவு சில நபர்களால் சில காரணங்களுக்காக உடைக்கப்பட்டுவிட்டதாகவும் கோட்டையின் சிதைவுகளும் அவ்வாறே இடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். தற்போதோ  கோட்டையின் இடிபாடுகளை சூழ புதர்மண்டியிருந்தது. வரலாறு சிதைந்து போன சோகத்துடன் குதியடிக்குளத்தை அடைந்தால் அங்கோ முற்றிலும் வித்தியாசமாக கோட்டைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதவாறு எதிர்பார்த்த தொனிப்புடன் குளம் இருந்தது. ஆனால் சுத்தவர புதர்கள் மண்டி கவனிப்பாரற்று அவ்வூர் மாடுகள் எல்லாம் அங்கே தான் தஞ்சம் புகுந்திருந்தன.
                               எமது வரலாற்றையும் பெருமையையும் அழிக்க இன்னொருவர் தேவையில்லை நாமே போதும்.யாழ்ப்பாணத்தின் பெருமைமிக்க மன்னன் ஆண்ட பூமியில் ஒரு அறிவித்தல் பலகையை நாட்டி "இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் இதை தவறாக பயன்படுத்தல் ஆகாது " என கேவலமாக அறிக்கை விடுவதை விடுத்து மாடுகளின் இராஜ்ஜியமாகிப்போக இடமளித்த கோப்பாய் வாழ் மக்களின் பெருந்தன்மையையும் யாழ்பாணத்து தொல்பொருள் மற்றும் வரலாற்று துறைகளை கவனிக்கும் பொறுப்பாளர்களின் தொழில் தர்மத்தையும் நினைத்து வியந்தவாறே நாங்கள் திரும்பவேண்டியதாயிற்று.
                       
                                  வரலாறுகள் எங்கோ சிதைக்கப்பட்டு மறைக்கப்படுகிறது என்றால் நம் பக்க நியாயங்களை பிடுங்குவதற்க்கான விதை எங்கோ விதைக்கப்படுகிறது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் நண்பர்களே.
                         
                           (        சுஜீந்தன் பரமேஸ்)                                                ....................தொடரும்.....................

No comments:

Post a Comment