Friday, 31 August 2012

அமெரிக்கா – கனவுகளின் தேசம். (அவலத்தின் கல்லறையும்கூட)





அமெரிக்கா- நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருதடவையாவது போய் பார்த்துவிட ஆசைப்படும் நாடு. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – United States of America – கட்டுப்பாடுகள் இல்லை,வதைக்கும் சட்டங்கள் இல்லை, குடிமக்களை தலைவர்களாக நடத்தும் அரசு, ஜனாதிபதியையே பெயர்சொல்லி அழைக்கக்கூடிய சுதந்திரம், சாப்பாடு, ஏஞ்சலினா ஜோலி, பிஸ்ஸா, ஹோலிவூட் படங்கள், சிலபல பலான விஷயங்கள்... ஒவ்வொருவருக்கும் கனவுகான காரணம் வேறு. கனவு ஒன்றுதான் – அமெரிக்கா!

அத்தனை சுதந்திரமான வாழ்க்கைக்குள் புதைந்து கிடக்கும் அவலங்கள் என்னென்ன? ஆபத்துக்கள் என்னென்ன? அமெரிக்காவின் மக்களின் உண்மை நிலை என்ன, அமெரிக்காவின் உண்மை மக்களின் நிலை என்ன? எதுவும் வெளி உலகத்துக்கு தெரியாது, அல்லது தேவையில்லை. அமெரிக்கா உலகத்துக்கே வந்த ஒரு வியாதி, தொற்று, அதைப்பற்றி கவலையில்லை. உலகத்தின் மீதி அனைத்து நாடுகளையும் சுரண்டும் எலி அமெரிக்கா – தேவையில்லை. அமெரிக்கா! பெயரின் போதை.

உலக சனத்தொகையின் 5% கூட வராத அமெரிக்கா உலக மொத்த சக்தி உற்பத்தியின் கால்ப்பங்கை நுகர்கிறது. மொத்த நிலக்கரியில் 25%, எண்ணை உற்பத்தியில் 26%,இயற்கை வாயுவில் 27%.

 அமெரிக்காவில் அனுமதி உள்ள ஓட்டுனர்களை விட  கார்களின் எண்ணிக்கை அதிகம், தேவையைவிட வீடுகள் 38% அளவில் பெரியவை.

அமெரிக்கர்களில் 65 சதவீதமானோர் அதிக உடல் எடை கொண்டவர்கள். (Obese) நிறைய செலவு செய்து சாப்பிடும் தேவையில்லாத தீனிகளால் வரும் விளைவு. ஒட்டுமொத்தமாக நாள் ஒன்றுக்கு 815 கலோரிகளை உட்கொள்கிறார்கள். பொதுவான தேவையைவிட 200 பில்லியன் அதிகம். இது மட்டுமே 80 மில்லியன் மக்களுக்கு அடிப்படை ஊட்டத்துக்கு போதுமானது. இப்படி வகைதொகை இல்லாமல் தின்றுவிட்டு பின்னர் அதற்கு சிகிச்சை எடுக்க வருடம்தோறும் செலவிடும் தொகை 117 பில்லியன் டொலர். (இது போதாதென்று தினம்தோறும் அமெரிக்கர்கள் 200,000 தொன் சாப்பிடக்கூடிய உணவை குப்பையில் போடுகிறார்கள். ) மேலும், அமெரிக்காவில் விளையும் மனிதர்கள் உண்ணக்கூடிய சோளத்தில் 80% மற்றும் ஓட்சில் 95% கால்நடைகளுக்கு உணவாகிறது.  உலகளவில் வருடம்தோறும் பசியால் சாகும் மனிதர்களின் எண்ணிக்கை பத்து மில்லியன். ஒரு பில்லியன் மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.

வருடத்துக்கு சராசரியாக ஒரு அமெரிக்கர் கடனட்டைகளுக்கு (Credit Cards) கட்டும் வடுடாந்த வட்டி  1900டொலர். இது சுமார்  35 நாடுகளில் மக்களின் சராசரி வருமானத்திலும் அதிகம்.

75 வருடங்கள் வாழும் ஒரு அமெரிக்கர் உலகத்துக்கு விட்டுச்செல்லும் குப்பையின் அளவு 52 தொன். உலகளவில் கொட்டப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய குப்பையின் 72% அமெரிக்கர்களால் இடப்படுகிறது.

உலகளாவிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான காபன் வெளியேற்றம் கூடிய நாடு அமெரிக்கா. அதைவிட அதிர்ச்சி, அதனை குறைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் போட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட மறுத்ததுதான். தனது நாட்டு மக்களின் நன்மைக்காக, மீதி அனைத்து நாட்டின் மக்களையும் பலிபோட கொஞ்சமும் யோசிக்காத நாடு அமெரிக்கா. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்னாம், கியூபா, வெனிசுலா, வடகொரியா.. இது மெரிக்கா தேவையில்லாமல் சண்டைபோட்டு அளித்த நாடுகள். ஜப்பானில் அணுகுண்டு, வியட்நாமில் வயல்நிலங்களுக்கும் மக்களுக்கும் நஞ்சு, மெக்ஸிகோ மக்களுக்கு மின்சார வேலி... அமெரிக்காவின் மந்திரம் ஒன்றுதான். தன நட்டு மக்களைத்தவிர வரு யாருமே மக்களில்லை.

எந்த நாட்டில் யாரை அழிக்க வேண்டுமென்றாலும் அந்த நாட்டின் அனுமதி  இல்லாமல் தாக்குதல் நடத்தும். தன்னை ஒருகாலத்தில் ஆண்ட , உலகத்தையே ஆண்ட பிரித்தானியா கூட அமெரிக்கா சொன்னால் கேட்டுத்தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் பின்விளைவுகள் எதையும் யோசிக்காமல் அமெரிக்கா அணுகுண்டு போட்டுவிடும். ஏன்? அமெரிக்காவின் மந்திரம் ஒன்றுதான். தன் நாட்டு மக்களைத்தவிர வேறு யாருமே மக்களில்லை.

அது என்னப்பா தன் நாட்டு மக்கள், தன் நட்டு மக்கள்.. யார்தானப்பா அந்த அமெரிக்காவின் மக்கள்?

அமெரிக்காவில் தற்போது இருக்கும், தங்களை அமெரிக்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே அமெரிக்க மண் சொந்தமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால்  வெறும் நானூறு வருடங்களாக வாழும் இனங்களுக்குரியவ்ர்களே அவர்கள். அமெரிக்காவின் சுதந்திரப் போர்- புரட்சி கூட வரலாற்றில் முக்கியத்துவம் பெறாததற்கு காரணமும் இதுதான். ஏனெனில் விடுதலை கிடைத்தது சுதேச்களுக்கு இல்லை. அந்தப் புரட்சியால் அந்த மண், ஒரு அந்நிய ஆட்சியாளரிடமிருந்து இன்னொரு குழு அன்னியர்களிடம்தான் சென்றது.  அமெரிக்கர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒவ்வொருவர் கால்வைத்து நிற்கும் நிலத்திலும் அந்த மண்ணை முதலில் மிதித்தவர்களுடைய இரத்தம் படிந்துள்ளது.



மெக்ஸிகோவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் சுதேச மக்கள். ஆனால் அந்த மக்கள் தனது நாட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக மின்சாரவேலி போட்டுவைத்துள்ள நாடு அமெரிக்கா. ஏற்கெனவே ஓரளவு தெரியும் என்றாலும், இந்தப் பதிவை எழுதுவதற்காக முழு வரலாற்றையும் படித்தபிறகு எதேச்சையாக ஒரு ஹொலிவூட் படம் ஒன்றை பார்த்தேன். அமெரிக்காவின் நேர்த்தியான வீதிகள், பெரும் அங்காடிகள், கட்டடங்கள் – இத்தனை காலமும் பார்த்தபோது பிரமிப்பை தந்தவை – மனதில் பாரமாயின. அந்த ஒவ்வொரு கட்டடத்துக்கும் அடியில் செவ்விந்தியர்களின் இரத்தம், கண்ணீர், சாம்பல்



 

35000 வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் உலகத்தின் நீரில் பெருமளவு பனிக்கட்டிகளாக உறைந்திருந்தது. ( 40,000 வருடங்களுக்கு முன்பிலிருந்து முதல் 20,000 வருடங்களுக்கு முன்புவரை பனி யுகமாக இருந்தது. (Ice Age) ) தற்போது பெரிங் நீரிணையாக உள்ள வட அமெரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் பகுதி அப்போது நிலப்பகுதியாக இருந்தது. இற்றைக்கு 12,000 வருடங்களுக்கு முன்னர் அவ்வழியாகவே அமெரிக்காவின் பூர்வகுடிகள் சைபீரியாவிலிருந்து வட மற்றும் தென் அமெரிக்காவுக்குள் குடியேறினர் என நம்பப்படுகிறது. அலாஸ்காவில் முதலில் குடியேறி, பின்னர் படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்தனர். ஹோஹோகம், எடினன்கள், ஹோப்வேல்லியங்கள், அனசாசிகள் முதலிய இனக்குடிகள் அப்பகுதிகளில் தோன்றின. நெடுங்காலப்போக்கில்  மக்கள் நாகரிக ரீதியாக பெருவிருத்தியடைந்தனர். மயன் முதலிய நாகரீகங்கள் தோன்றின. பிரமிட்கள், மாளிகைகள், பெரும் கட்டிடங்கள் என்பன எழுந்தன. வரலாறோ, விஞ்ஞானமோ விடைசொல்ல முடியாத நாஸ்கா கோடுகள், தங்க நகரம் முதலிய அதிசயங்கள் உருவாயின. ஐரோப்பிய அந்நியர்கள் ஊடுருவியபோது ஹோபி, ஸோனி முதலிய இனக்குழுக்களில் மொத்தமாக இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில்  வாழ்ந்துகொண்டிருந்தனர்.

நாடுகாண் பயணங்கள் தொடர்பாக ஆண்டாண்டு காலமாக கடத்தபட்டு வரும் தகவல்களில் பெரும்பாலானவை தவறானவையே. தென்மேற்கு ஐரோப்பியர்கள் நாடுகாண் பயணங்கள் மூலம் அமெரிக்க நிலப்பகுதியை கண்டுபிடிப்பதற்கு முன்னரே வட ஐரோப்பிய நோர்ஸ் இனத்தவர்கள் கிரீன்லாந் வழியாக வட அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டார்கள். அவ்வாறாக அவர்கள் புதிதாக கண்டுபிடித்த நிலமாக அமெரிக்கா ஆனது. (Newfoundland – கனடாவில் உள்ள தீவு.) கிபி 985 காலப்பகுதியில் லீப் எரிக்சன் என்பவர் அமெரிக்காவில் முதலாவது ஐரோப்பிய குடியேற்றத்தை நிறுவினார். அந்தக் குடியேற்றம் நிகழ்ந்து ஐந்து நூற்றாண்டுகளின் பின்னரே அமெரிக்கா – மூன்றாவது முறையாக மனித இனத்தால் கண்டுபிடிக்கப்பட்டபோது – அதுவும் தவறான விளக்கத்துடன் – வரலாறு துள்ளிக்குதித்தது. ஆசியாவுக்கு செல்லும் கடல்வழிப் பாதையை கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மாலுமிகளில், ஸ்பெயின் அரசி இசபெல்லாவால் அனுப்பப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 இல், கரீபியன் தீவுகளை அடைந்தார். அதனை ஆசியாவின் கிழக்குப்பகுதி என நினைத்தார் அவர். மேற்குப்புறமாக பயணித்து அடையப்படும் இந்தியா எனவே முடிவு செய்தார்கள். அப்பகுதி மேற்கிந்தியா என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து பூர்வகுடிகளும், செவ்விந்தியர்கள் என அழைக்கப்பட்டனர்.  கொலம்பஸ் தனது வாழ்க்கையில் அமெரிக்காவின் பெருநிலப்பகுதியை அடையவே இல்லை. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என அவர் அழைக்கப்படுவதற்கு காரணம், புதிய உலகம் என அழைக்கப்பட்ட , ஐரோப்பாவின் மேற்குப்பகுதியில் காணப்பட்ட கண்டத்தை கண்டுபிடித்ததற்காகத்தான்.
அமெரிகோ வெஸ்பூசி

அமெரிகோ வெஸ்பூசி என்ற இத்தாலிய கடலோடியே, முதன்முதலில் அமெரிக்க நிலப்பகுதி ஆசியாவின் தூரகிழக்குப் பகுதி அல்ல, அது தனிக் கண்டம் என கண்டறிந்தவர். அதனாலேயே அவரது முதற்பெயரின் பெண் உச்சரிப்பே அந்த நிலப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது. (நிலப்பகுதிகளையும், நாட்டையும் அன்னைக்கு நிகராக போற்றும் பண்பு உலகின் அனைத்து கலாசாரங்களிலும் உண்டு. (ஜேர்மனில் மட்டும்தான் தந்தைநாடு, மீதி உலகெல்லாம் தாய்நாடு தான்.) அதனாலேயே ஆண்பெயர் பென்பெயராக மாற்றப்பட்டது.) 1499 முதல் 1502 வரையான காலப்பகுதிகளில் அவர் செய்த பயணங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே அமெரிக்காவின் உண்மையான புவியியற் தோற்றப்பாடு எடுத்துக்கூறப்பட்டது.


தொடர்ந்து ஸ்பானியக் குடியேற்றங்கள் அமெரிக்காவில் தோன்றத் தொடங்கின. காலப்போக்கில் பல ஐரோப்பியக் குடியேற்றங்கள் அமெரிக்காவில் நிலைகொள்ளத் தொடங்கின. ஸ்பானியக் கொலனிகள் தென் அமெரிக்காவை நோக்கி நகர, ஆங்கிலேய கொலனிகள் வட அமெரிக்காவை ஆக்கிரமித்தன. நெதர்லாந்து, சுவீடன்,ஜேர்மன்,பிரான்ஸ் முதலிய நாடுகளிலிருந்து மக்கள் வியாபாரம் செய்யவும், பயிர்ச்செய்கைக்குமாக அமெரிக்க நிலப்பகுதிக்குள் ஊடுருவினர். தென்னமெரிக்காவின் கோப்பி இறப்பர், கொக்கோ, வாழை, கணியங்கள், இரத்தினங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டனர். ஐரோப்பாவில் தண்டனை வழங்கப்பட்டவர்களை அடைத்துவைக்கவென பல சிறைக்கூடங்கள் மத்திய, தென் அமெரிக்காவில் கட்டப்பட்டன. (அவ்வாறாக தண்டனை பெற்று தென்னமெரிக்க பிரெஞ்ச் கயானா சிறைகளில் அடைக்கப்பட்ட ஹென்றி ஷாரியர் பலதடவைகள் முயன்று தப்பி, பின்னர் எழுதிய பட்டாம்பூச்சி (Pappilon) என்ற உலகப்புகழ்பெற்ற  சுயசரிதையில், அவ்வாறு அடைபட்ட கைதிகளும், சுதேச மக்களும் படும் பாட்டை மிக நேர்மையாக எழுதியுள்ளார்.) அமெரிக்காவின் கோதுமை முதலிய வயல்களில் வேலை செய்யவும், வேறு தேவைகளுக்காகவும் அடிமைகளாகக் கறுப்பின மக்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டனர். இந்தியாவிலிருந்தும் மத்திய அமெரிக்காவின் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்ய மக்கள், ஏமாற்றி அழைத்துவரப்பட்டனர். பெரும்பாலும் தமிழர்களாகவும், மலையாளிகளாகவும் இருந்த அவர்களின் வழித்தோன்றல்களே இன்று மேற்கிந்தியத் தீவுகளில் பெருமளவு வாழ்கிறார்கள். இவ்வாறாக அமெரிக்காவின் பூர்வகுடிகளை ஓரம்கட்டி, உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்காவில் வாழ்ந்த பல்லாயிரம் மக்கள் – வெவ்வேறுபட்ட பல இன மக்கள் – உலகின் நாகரிகத்தில் ஐரோப்பியரை முந்திய மக்கள் – வேற்றுக்கிரக ஜீவராசிகளோ, கடவுள்களோ வானிலிருந்து தரையிறங்க ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் இறந்குதளமாக ஓவியங்கள் வரைந்துவைத்த மக்கள் – தங்கத்தில் மாளிகை கட்டி வாழ்ந்த மக்கள் – ஐரோப்பியர்களால் தந்திரமாகவும், மிரட்டப்பட்டும், சண்டை மூலமாகவும், கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டனர். வாழ உவப்பற்ற அரிசோனா பாலைநிலம் வழியாக வடமேற்கு அமெரிக்காவுக்கு தள்ளப்பட்டனர். (எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்தவர்கள் என வரலாறு புகழும் மாயன் இன மக்களை ஸ்பானியர்கள் எவ்வாறு அழித்தார்கள் தெரியுமா? அவர்களோடு உறவடுவதாகக் காட்டி, அவர்களிடம் சில பொருட்களை வாங்கி, அவர்களுக்கு கம்பளிப் போர்வைகளை அன்பளிப்பாக கொடுத்தார்கள். அம்மை நோயாளிகள் தமது உடலில் போர்த்தியிருந்த போர்வைகள். இந்த சூழ்ச்சி தெரியாமல் அதை வாங்கி போர்த்த அனைத்து மாயன் இன மக்களும் அம்மை என்கிற தொற்று நோயாலே இறந்தார்கள். ) ஆரம்பத்தில் வர்த்தகத் தொடர்புகள், ஒப்பந்தங்கள் என இருந்த ஆக்கிரமிப்பு, போகப்போக நேரடி யுத்தமாக வெடித்தது. அதுவரை அப்பெரு நிலப்பரப்பில் தனியாக, எவ்வித முரண்பாடுகளுமே இல்லாது வாழ்ந்த மக்களால் ஐரோப்பியர்களுடன் மொத முடியவில்லை. (குதிரையையே கண்டிராத மக்கள் பலர் குதிரையில் ஏறிவந்த ஐரோப்பியர்களை, குதிரையுடன் சேர்த்து தனியான விசித்திர உயிரினமாக கருதினார்கள் என்றும் ஒரு கதை உள்ளது.) காலப்போக்கில் அவர்களுடன் போரிடவென்றே இவர்கள் குதிரைகளுக்கும், ஆயுதங்களுக்கும் பழகினார்கள். எனினும் பழங்குடிகளால் அந்நியர்களை வெல்ல முடியவில்லை.

தோற்று, அந்நியர்களால் சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்ட அவர்கள் விலங்குகளுக்கு சரணாலயம் ஒதுக்குவதுபோல, குறித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் மட்டும் வாழ அனுமதிக்கப்பட்டனர். அடக்கப்பட்ட அம்மக்களில் பல தலைவர்கள் எழுந்தனர். அவ்வாறாக எழுந்த தலைவர்களில் ஒருவர்தான் செவ்விந்தியர் தலைவர் சியாட்டல். இரக்கமற்றவர்களுடன் போரிடுவது அழிவைத்தான் தேடித்தரும் என்பதால் இவர் அமைதியை நிலைநாட்ட முயன்றார். அதிலும் தோல்விதான் கிடைத்தது என்பது வேறுகதை.
வரலாற்றுக்கு கிடைத்துள்ள சியாட்டலின் ஒரே புகைப்படம்.

சியாட்டலின் உண்மையான பெயர் ஸீஅஹ்ட்ஹ்ல். ஆங்கிலேயர்களின் வாய்க்குள் அது நுழையாததால் சியாட்டலானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்க அரசு செவ்விந்தியர்கள் அனைவரையும் நாடுகடத்தியது. அதனால் பலப்பல இனக்குழுக்களாக சிதறிக்கிடந்த பூர்வகுடிகள் அனைவரும் ஒரே இடத்துக்கு நகர நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வாறாக இடரீதியாக இணைந்த மக்களை உணர்வு ரீதியாகவும் இணைத்தவர் சியாட்டலே.

அவ்வாறாக நாடுகடத்தப்பட்டு நகர்ந்தபோது பசி, பட்டினி, மற்றும் காலநிலையின் கொடூரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். ஆனால் அந்நியர்கள் விடாது அவர்களை ஒரு சிறிய பகுதிக்குள் முடக்கியது. செவ்விந்தியர்கள் ஆயிரக்கணக்கில் வளர்த்துவந்த பைசன் மாடுகளை ஐரோப்பியர்கள் விளையாட்டுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் வேட்டையாடினர். அமெரிக்காவின் தனித்துவமான கழுகு இனங்கள் பல அவர்களால் கொல்லப்பட்டன. செவ்விந்தியக் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளையர்கள் மக்களை கொன்றதோடு, அவர்கள் சொத்துக்களை கொள்ளையிட்டனர். பெண்களை கடத்தினர். கிராமங்களுக்கு தீவைத்தனர். இவ்வாறாக அநியாயத்தின் சகல வழிகளையும் அவர்கள் பயன்படுத்தினர். கடைசியாக செவிந்தியர்களிடம் மிஞ்சியிருந்த இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பையும் தங்களிடம் விற்றுவிடுமாறு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிரான்க்லின் டியர்ஸ் கேட்டுக்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் முன்னர் சியாட்டல் நிகழ்த்தியதாக கூறப்பட்ட உரை வரலாற்றில் அதி முக்கியத்துவம் பெற்றது. (அவர் பல உரைகள் நிகழ்த்தியிருப்பதலும், கிடைத்த உரை பலகாலத்தின் பின்னர், அதுவும் பல மொழிபெயர்ப்புக்களை கடந்து வந்ததாலும், உரையின் சரியான வடிவமும், தகவலும் வரலாற்றுக்கு கிடைக்காதே போய்விட்டன. ஆனால் சியாட்டலுடைய புகழும், அமெரிக்கா செவ்விந்தியர்களுக்கு செய்த துரோகத்தின் இரத்தக்கறையும், வரலாறில் அழியாதவை.)  பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறிகளுக்கும், பூர்வகுடிகளுக்கும் நிகழ்ந்த இறுதிப் போரில் செவ்விந்தியர்கள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டு வடமேற்கு அமெரிக்காவுக்கு துரத்தியடிக்கப்பட்டனர். பின்னர் பல வருடங்கள் கழித்து தனது தலைகுனிவை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் அவர்களுக்கு நாடெங்கிலும் வாழக்கூடிய சுதந்திரத்தை அளித்தது (1952).


சியாட்டலின் அந்த வரலாற்றை கரைத்த உரையின் சுருக்கிய வடிவம் வருமாறு:

காலம் எனது மக்களின் கண்ணீரை துடைத்துவிட்டிருக்கிறதுபோல தோன்றுகிறது. அது நிலையானது அல்ல என அறிவீர்கள். நாளையே துக்கம் நம்மை சூழலாம். நான் இங்கே என்ன சொல்லுகிறேன் என்பதெல்லாம் அங்கே வாஷிங்டனில் ஆள்பவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது நான் அறிந்ததே. வாஷிங்டனின் தலைவர்  எமக்கு தனது ஆசிகளையும் நட்புக் கொள்ளும் விருப்பையும் தெரிவித்துள்ளார். எமது நட்பு அவருக்கு தேவைப்படுகிறதாம். சிறிய அளவிலாவது. அவரது மக்களோ எண்ணிலடங்காதவர்கள். நாமோ மிகச்சிலர். எனவே எமது மிச்சமுள்ள மண்ணையும் தனக்கு விற்றுவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பதிலுக்கு நாம் மகிழ்ச்சியாக வாழ அவர் ஏற்பாடு செய்வாராம். இது அவரது பெரும்தன்மையையே காட்டுவதாகத்தான் எடுத்துக்கொள வேண்டியிருக்கிறது. நமக்கோ எவ்வித உரிமையும் இல்லை என்கிறபோது நாம் மறுத்தாலும் அவர்கள் எம்மண்ணை கைப்பற்றி நம்மை நாட்டைவிட்டே துரத்துவார்கள் என்பது நாம் அறிந்ததே.

ஒரு காலம் இருந்தது. நாம் இந்த மண் முழுவதும் செறிந்துவாழ்ந்தோம். இப்போது அதன் நினைவுகள் மடுமே எமக்கு சொந்தம். நமது இளைஞர்கள் துடிப்பானவர்கள். அவர்கள் கோபத்துடனும் வெறியுடனும் வெகுண்டெழுகிறார்கள். நம்மால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. நமது முன்னோர்களை வெள்ளையர்கள் கொன்றபோது நாம் அமைதியாய்த்தான் இருந்தோம். ஏனெனில் இழக்கப்படும் உயிர்கள் மீளக் கிடைப்பதில்லை என நாங்கள் அறிந்திருந்தோம். புறப்படும் இளைஞர்கள் அடைய முயல்வது வேண்டுமானால் இலட்சியமாக இருக்கலாம், ஆனால் அவர்களின் அன்னையர் இழப்பது தமது மகன்களின் உயிரை. 

அமெரிக்க ஜனாதிபது நம்மை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அவர்களின் கடவுளோ நம்மை பாதுகாப்பதில்லை. அவர்களின் கடவுள் வேறு, நமது கடவுள் வேறு. அவர்களை காக்கும் கடவுளே எங்களை அழிக்கிறது.ஒருவேளை நம் இரு பகுதியினருக்கும் ஒரே கடவுள்தான் என்றால் அவன் பாரபட்சம் பார்க்கிறான். அழுகின்ற நமது குழந்தைகளின் முகம் அவனுக்கு ஏன் தெரிவதில்லை? அவர்களின் மதத்தின் நெறிகள் கடவுளால் கல்லில் எழுதப்பட்டன.. நமது நெறிகள் நமது முன்னோரால் நமது ஆன்மாக்களில் எழுதப்பட்டன. அவர்கள் இறந்தவுடன் வானத்துக்கு போகின்றார்கள். ஆனா நாமோ, இறந்தபின்னும் இந்த மண்ணிலேயே வாழ்கிறோம். இந்த காற்றில், ஆறுகளில், பள்ளத்தாக்குகளில் வாழும் ஆயிரக்கணக்கான முன்னோரே நமது வழிகாட்டிகள். அவர்களில் ஒருவர் இறந்தவுடன் அவர் தன மண்ணை மறுக்கிறார், அம்மண் அவரை மறக்கிறது. நாமோ, மண்ணை மரணத்தின்பின்னும் விடுவதில்லை.

வெள்ளையர்களின் கடவுள் நமக்கு என்ன செய்யும்? அதனால் எம்மை காப்பாற்ற முடியாது. அவர்கள் வலியவர்களாகிக்கொண்டே போகிறார்கள், நாம் எளியவர்கள் ஆகிக்கொண்டே போகிறோம், பின் எப்படி ஜனாதிபதி சொன்னதுபோல நாம் சகோதரர்கள் ஆக இருக்க முடியும்? இரவும் பகலும் ஒரே வேளையில் வரமுடியாது. சிவப்பினத்தவரும் வெள்ளையரும் ஒன்றாக இணையமுடியது. விடியலின் சூரியன் வருவதானால் விடிகாலையின் பணிகள் மறைந்துதான் போகும். எனிவே அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்பதைத்தவிர எமக்கு வேறு வழியே இல்லை. வெள்ளையர்களின் தலைவரான அவர் பேசுவதை காரிருளில் நாம் இருக்கும் இந்த வேளையில் இயற்கையின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். 

சிவப்பர்களின் இரவுகள் இருளாகவிருக்கவே சபிக்கப்பட்டன. ஒரு நட்சத்திரத்தைக்கூட அங்கே காணமுடியாது. வேட்டையர்களின் காலிலேயே நமது விதி தங்கியுள்ளது. 

ஒரு காலம் வரும். பல பிறைகள் கடந்ததும் அது வரும். நம்மனைவரதும் ஆன்மாக்களின் சக்திகள் சேரச் சேர, நமது இனமும் வலிமை பெறும். முன்னோரை பின்னோர் பின்பற்றுவர், தேசங்களை தேசங்கள் பின்பற்றும். கடலலைகள் போல ஒன்றன்பின் ஒன்றாக இது நடக்கும். இதுவே இயற்கை, இதில் குறைபட ஒன்றுமில்லை. வெள்ளையர்களின் கடவுள் என்று நாமும் மனிதர்கள்தான் என வெள்ளையனுக்கு சொல்லுகிறானோ, அன்றே நாம் அவர் சொன்னதுபோல சகோதரர்களாக வாழமுடியும்.

வெள்ளையர்களே, நீங்கள் சொன்ன ஒப்பந்தத்தை நாங்கள் கருத்திலெடுக்கிறோம். ஆனால் உங்களது கோரிக்கையை – அது உண்மையில் கட்டளைதான் – ஏற்றால், நாம் இனி எப்போதுமே எமது முன்னோர்களின் கால்பட்ட நிலங்களை, அவர்களின் கல்லறைகளை காணமுடியாது என அறிவோம். இந்த பெருநிலத்தின் ஒவ்வொரு மண் துணுக்கும் எங்களைப் பொறுத்தவரை மதிப்புகுரியதுதான். இங்குள்ள ஒவ்வொரு மரமும், மலையும், காடும் எங்களது இன்பதுன்பங்களில் பங்கெடுத்தவை. நீங்கள் மிதித்துக்கொண்டிருக்கிறேர்களே, இந்த மண், அது எங்களது முன்னோரின் நெருக்கமான பாத அடிகளை சுமந்தது. பூட்ஸ் போட்ட உங்களது காலின் மிதித்தலைத்தவிர, எங்களது முன்னோரின் வெறும் பாதங்களின் ஸ்பரிசம் அதற்கு இதமானது. 

எங்களது பழங்கதைகள், வரலாறுகள், வீரம், மகிழ்ச்சி எல்லாமே எங்களது ஆன்மாக்களில் படிந்திருக்கும். எங்களில் கடைசி  மனிதன் கொல்லப் பட்டபிறகோ அவையனைத்தும் உங்களுக்கு – வெள்ளையர்களுக்கு பொழுதுபோக்கும் புரானக்கதைகளாக மாறிப்போகும். 

வெள்ளையர்களே, நாளை உங்களில் ஒரு குழந்தை நீங்கள் கட்டியெழுப்பியுள்ள  ஒரு வீதியிலோ, கடையிலோ, தனியே நின்றாலும், அது தனிமையில் நிற்காது. ஏனெனில் இந்த மண்ணில் ஒரு சிறு இடம்கூட தனிமையானது அல்ல. அங்கெங்கிலும் எம் அனைவரதும் ஆன்மா அலைந்துகொண்டிருக்கும். 

அவர்கள் எங்களுடன் இணக்கமாக போவது எமக்கு நல்லதுதான். ஆனால் இறந்தவர்கள் முன்னே வலிமை செல்லாது. இறந்தவர்கள் என்றா சொன்னேன்? இறப்பு என்று ஒன்றுமே இல்லை. அது வெறும் ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு செல்லும் நிகழ்வே. 


மார்ச் 11, 1854 இல் நிகழ்த்தப்பட்ட இந்த உரையே வரலாறில் முகியத்துவம் பெற்ற சியாட்டலின் உரையாகும். தனது மொழியான லுஷூட்சீத் மொழியில் நிகழ்த்தப்பட்ட உரை பின்னர் சின்நூக் ஜர்கன் மொழியில் பெயர்க்கப்பட்டு, பின்னரே ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர் ஹென்றி ஸ்மித் என்பவரால் உரையின் ஆங்கில வடிவம் எழுதப்பட்டது. உரை நிகழ்த்தப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளின்பின்னரே உரை உலகத்துக்கு உறைத்தது. அதன்பின்னரே உலகத்தின் அனைத்து முன்னோடிகளுக்கும் நடப்பதுபோல, சியாட்டலும் இறந்து பல வருடங்களின் பின்னரே அவரது மதிப்பு உலகத்தால் உணரப்பட்டது. அமெரிக்காவின் நகரம் ஒன்றுக்கு அவரது பெயர் வைக்கபட்டது. (வெறுமனே அமேரிக்கா ஒரு கண்டம் என்று ஐரோப்பியர்களுக்கு சொன்னவனது பெயர் இரண்டு கண்டத்துக்கு, ஒரு நாட்டுக்கு, உண்மையாக அந்த மண்ணின் மக்களின் தலைவனின் பெயர் ஒரு நகரத்துக்கு, அதுவும் பிழையான உச்சரிப்புடன்.)

இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட செவ்விந்தியர்களின் மண்ணில் அறத்துக்கு மாறாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தான் இன்றைய அமெரிக்காவின் வெள்ளையர்கள், கருப்பர்கள், இந்தியர்கள், சீனர்கள்,  மற்றும் நமது அமெரிக்கா சொந்தக்காரர்கள். அந்த மண்ணில் அவர்களுக்கு ஒரு மண்ணும் இல்லை

No comments:

Post a Comment