Wednesday, 22 August 2012

முகமூடி வீரர் மாயாவி


முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்ஜியம்,குரன்,அழிக்கமுடியாத மண்டையோட்டு சின்னம், மாயாவியின் குதிரை அவரது மண்டையோட்டு குகை.அவரது மண்டையோட்டு மோதிரம் இன்னொரு உலகத்தையே காட்டியது.ஊரில் நடக்கும் திருவிழாக்களில் கோவில் கோவிலாக சென்று அங்கு திருவிழாவிற்காக போடப்பட்டிருக்கும் சிறிய கடைகளில் "மண்டையோட்டு மோதிரம் இருக்காண்ணா?"  ..தனுஸ் ஒரு படத்தில் பைக்வாங்குவதாக சென்று மனோபாலாவை கடுப்பேற்றியது மாதிரி வருடா வருடம் கடைபோடுபவர்களைக்கடுப்பாக்கியிருக்கின்றேன் நான்.

காட்டுக்குள் நுழையும் எவனுக்குமே மாயாவி என்ற பெயரைக்கேட்டால் கதிகலங்குமென்று நினைத்தால் மாயவி ஒரு தடவை தனது காதலி டயானாவிற்காக நகரத்திற்கு வந்திருந்தார் அங்கு நடைபெற்ற கொள்ளைகள் கடத்தல்கள் எல்லாம் ஸ்தம்பித்துப்போயின.அனைவரது தாடையிலும் அழிக்கமுடியாத மண்டையோட்டுக்குறி பொறிக்கப்பட்டது.ஒருதடவை மாயாவி ஒரு மன்னனுக்கு முன்னால் ஒரு தடியனுடன் மோதவேண்டியிருந்தது.அவன் ஒரு முட்டையை கையில் எடுத்து உடைத்துக்காட்டிக்கொண்டே கூறினான்:இந்த முட்டையை நொருக்குவதுபோல் உன்னை நொருக்கிவிடுவேன்" மாயாவி உடனே ஒரு தேங்காயை கையில் எடுத்து நொருக்கிக்கொண்டே கூறினார்"இந்த தேங்காயை நொருக்குவதுபோல் உன்னை நொருக்கிவிடுவேன்" அசத்தலாக இருந்தது.

மாயாவியின் சாகசங்களுக்கு லொஜிக்கைகொடுப்பதற்காக ஒருவிடயம் சேர்த்திருந்தார்கள்.மாயாவி தான் மாயாவி ஆகுவதற்கு முன்னர் பல விளையாட்டுக்களில் பங்குபற்றி மிகவும் முன்னிலையில் இருந்து பின்னர் காணாமல் போனார் என்பதுதான் அது.


"ஒவ்வொரு அடியும் இடி என விழுந்தது"இந்த வார்த்தைகள் நரம்புக்கு முறுக்கேற்றிய வார்த்தைகள். அவன் மாயாவியை சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்தான் அதற்குள்" டுமீல்" "டுமீல்" "டுமீல்" எதிரே இருக்கும் எதிரியின் துப்பாக்கியைமட்டும் குறிவைப்பது மாயாவியின் தனி ஸ்டைல்.ஆர்வக்கோளாறில் ஒன்று இரண்டு புத்தகங்களை சுட்டகதையும் நடந்தது.பாடலையில் மாயாவிபுத்தகங்கள் காமிக்ஸ்கள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.மாணவ முதல்வர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் அவ்வளவுதான்.மாணவமுதல்வர் அறை என்று ஒன்று இருக்கின்றது. போனால் உயிரோடு திரும்புவோமோ என்று பயப்படும் அளவிற்கு இருக்கும் அந்த அறை.அந்த அறைக்குள் அழைத்துச்சென்று அடி பின்னிவிடுவார்கள்.ஆசிரியர்களிடம் அகப்பட்டால் புத்தகம் வகுப்பறைக்குவெளியே பறப்பதுடன் அனைத்து மாணவர்களுக்கு முன்னால் அடிவாங்கவேண்டி வரும் முட்டிபோட்டு நிற்கவேண்டிவரும்.சோ ஏதோ கள்ளக்கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்கும்பல் மாதிரி மிகவும் ரகசியமாக நண்பர்களிடையே மாயாவிப்புத்தகங்கள் கடத்தப்படும்.ஒருதடவை வகுப்பறைக்கு ஆசிரியர் வந்துவிட  சகபாடிகள்  எழுந்து நின்றுவிட்டார்கள் பாவம் ஒரே ஒரு அப்பாவிஜீவன் மட்டும் தனதுனோட்புக்குக்குள் இருக்கும் மாயாவியின் புத்தகத்தினுள் மூழ்கியிருந்தான்.சுற்றியிருந்த அனைத்துமே அந்த ஜீவனுகு இருட்டாகவே தெரிந்திருந்தது மாயாவியின் புத்தகத்தைத்தவிர.திடீர் என்று சட சட வென அடி தொடர்ந்துவிழுந்தது அப்பொழுதுதான் சுயனினைவு வந்தவானாக நிமிர்ந்துபார்க்கின்றான்.ஆசிரியர் அடித்துவிட்டு சென்றுவிட்டார்.பின்னர் அவன் அவனாகவே எழுந்து ஏன் அடித்தீர்கள்? என கேட்கும்போது வகுப்பே சிரித்துவிட்டது.அத்துடன் ஆசிரியர்அவனிடமிருந்த மாயாவிப்புத்தகத்தை வாங்கி படிப்பதற்கு இலகுவாக 4 துண்டாக கிழித்துஅவனிடம் கொடுத்துவிட்டார்.சரி வெளிப்படையாகவே கூறுகின்றேன் அது நான்தான்.

ஆரம்பகாலங்களில் மாயாவி தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது ஆனால் விசாரித்ததில் இப்பொழுதெல்லாம் வருவதில்லையாம்.


முத்துகாமிக்ஸ்,முத்துமினிகாமிக்ஸ்,இந்திரஜால் காமிக்ஸ் என்று பல காமிக்ஸ்களில் மாயாவிவெளிவந்தாலும் மாயாவியை எனக்கு அறிமுகம் செய்தது என்னவோ ராணிகாமிக்ஸ்தான்.
ராணிகாமிக்ஸ் 1984 இல் ஆரம்பமானது.ஜேம்ஸ் பொண்ட்,மாயாவியால் பிரபலமான ராணிகாமிக்ஸ் தனது 5 ஆவது இதழுடன் சகலத்தையும் நிறுத்திக்கொண்டது.கம்பனியை மூடிவிட்டார்கள்.வெளி நாடுகளில் காமிக்ஸ்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப்போல் நம்மவரிடம் வரவேற்புக்கிடைப்பதில்லை என்பது வருத்தம்தான்.இணையத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் ஒன்று நூலக வாசிப்பு இல்லாமல்போய்க்கொண்டிருப்பது.இதே பாதிப்புத்தான் ராணிகாமிக்ஸையும் வீழ்த்திவிட்டது.

உண்மையில் மாயாவி தமிழில் வெளிவந்த ஹீரோவே அல்ல.மாயவியின் உண்மையான பெயர்  Phantom.இந்த கற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர் லீ போல்க். பான்ரொம் டி.விக்கள்,பத்திரிகைகள்,கேம்கள் என பல இடங்களைத்தொட்டு சக்கைபோடு போட்டது.

பான்ரொம்(மாயாவி) ஆபிரிக்காவின் பங்காலா என்னும் நாட்டில் காட்டில் இருப்பவராகவும் அங்கு நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராகப்போரிட்டு பழங்குடி இனத்தவரைபாதுகாப்பவராகவும் உருவாக்கப்பட்டார். கதைகளில் நாம் காணும் பான்ரொம்(மாயாவி) தனது மாயாவி பரம்பரையின் 21 ஆவது நபர்.அதாவது 21 ஆவது மாயாவி.
பான்ரொம் என்ற கதாப்பாத்திரம் 1536 இல் உருவானது.பிரிட்டிஸ் கப்பலோட்டியான கிரிஸ்ரோபர் வோல்கர் என்பவர் கடற்கொள்ளையர்களால் கொல்லப்படுகின்றார்.இதனால் இவரது மகன் வோல்கர் இறந்த தன் தந்தையின் மண்டையோட்டின் மீது தீமைகளுக்கெதிராக நான் போராடுவேன் என்று சத்தியம் செய்கின்றார்.இவரால் தொடங்கப்பட்டதுதான் பான்ரொம் தலைமுறை.

இது பரம்பரை பரம்பரையாக தந்தையிடம் இருந்து மகனுக்கு கடத்தப்படுகின்றது.ஒரு பான்ரொம் இறந்ததும் அவரது மகன் அடுத்த பான்ரொம் ஆகிவிடுவார்.இது சாதாரண மக்களுக்கு தெரியாது ஆகையால் பான்ரொமை/மாயாவியை மக்கள் மரணமில்லாதவராக கருதினார்கள்.

ஏனைய பல ஹீரோக்களைப்போல் மாயாவிக்கு எந்த சூப்பர் பவர்களும் இல்லை.அவரது பலம்,புத்திசாலித்தனம்,மரணமில்லாதவர் என்ற மற்றயவர்கள் இவர் மீது வைத்திருக்கும் பயம் இவற்றைக்கொண்டுதான் மாயாவி எதிரிகளை வீழ்த்துவார்.21 ஆவது மாயாவியின் பெயர் கிற் வோல்கர்.மாயாவியிடம் 2 முத்திரை அடையாளங்கள் உள்ளன.இவை அவரின் மோதிரங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.இதில் ஒன்று குறொஸ் அடையாளம்.இதற்கு தனி மரியாதை இந்த குறி உள்ளவர்களுக்கு எங்கும் உதவி கிடைக்கும் அத்துடன் இந்தஅடையாளமிடப்பட்ட இடத்தில் யாராவது அடாவடி செய்தால் தொலைந்தார்கள். அடுத்த குறி மண்டையோட்டுக்குறி.
இது தீயவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பரிசு.பழங்குடி இனத்தவர்களும் சரி ஏனையோரும் சரி தாடையில் பதிக்கப்பட்டிருக்கும் இந்தக்குறியின் மூலமாக தீயவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்.மாயாவிக்கு உதவியாக 2 மிருகங்கள் இருக்கும்.இதை மாயாவி பயிற்றுவித்து வைத்திருக்கின்றார்.ஒன்று குதிரை அதன் பெயர் ஹீரோ.மற்றையது ஒரு ஓநாய்(என்னது ஓநாயா? அது நாயாச்சே? அது தமிழ் தொடர்களில் நாயாக மாறிவிட்டது பான்ரொமில் அது ஓநாயாகத்தான் இருந்தது).மாயாவி டயானா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அமெரிக்காவில் மாயாவி கற்கும்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.இருவருக்கும் 2 குழந்தைகள் கூட இருக்கின்றார்கள்.கிட்,ஹோலோஸ் அவர்களது பெயர்கள்.மாயாவியின் மண்டையோட்டு குகை அதற்குள் தங்க கருவூலம்(இதை திருடவும் சதி நடந்தது மாயாவியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்தாலே செமத்தையாக கவனிக்கப்படுவார்கள் அவர்கள் மாயாவியின் குகைக்குள் சென்று திருடமுயன்றால் பெரிதாக ஒன்றும் நடைபெறவில்லை 1க்கு 3 ஆக சின்னங்களை வாங்கிக்கொண்டார்கள்),
பழைய புத்தகங்களைக்கொண்ட நூலகங்கள்,மர வீடு,மாயாவியின் முன்னோரின் சமாதிகள்,பல ஆண்டுகளாக உருகிக்கொண்டிருக்கும் மெழுகுதிரி,குரன் மாயாவி நிச்சயம் உங்களை இன்னொரு உலகத்திற்கே அழைத்து சென்றுவிடுவார்.இறக்கும் ஒவ்வொரு மாயாவியும் மண்டையோட்டு குகைக்குள்ளேயே அடக்கம் செய்யப்படுவார்.மர வீட்டில் ரேடியோ இருக்கின்றது,இதன் மூலம் இலாகா அதிகாரிகள் மாயாவியுடன் தொடர்புகொள்வார்கள்.ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இருந்தால் இதன் மூலம் தொடர்புகொள்வார்கள். மாயாவி நகருக்குள் செல்லவேண்டிய நிலை வந்தால் இவர் தனியே வேறொரு உடையை அணிந்துகொள்வார்.அண்டர்டேக்கரின் கோட் தொப்பியுடனான உடை அது.
இப்படி ஒரு முறை மாயாவி நகரத்திற்குள் வந்ததால் பலர் தாடையில் மண்டையோட்டுக்குறியுடன் திரிந்தார்கள்.

1936 பெப்ரவரி 17 இல் பான்ரொம் தினசரிப்பத்திரிகையில் வெளிவரஆரம்பித்தது.1939 மே 28 இல் வர்ணச்சித்திரங்களுடன் வெளிவந்தது.சராசரியாக இன்றுடன் 76 வருடங்கள்.ஆனால் இன்றும் பான்ரொம் தொடர்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.இது எவ்வளவு பிரபலம் தெரியுமா? ஒரு நாளில் மட்டும் உலகில்  பான்ரொம் காமிக்ஸ்ஸை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்.இதை ஆரம்பித்த லீ போல்க் தான் 1991 இல் இறக்கும்வரை பான்ரொம்தொடரை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.


மாயாவிதான் முதல்முதலில் உடலுடன் இறுக்கமான உடையைஅணிந்த முதல் ஹீரோ.இவருக்குப்பின் வந்த ஏனைய ஹீரோக்களுக்கு மாயாவி அணிந்ததைபோன்ற உடையே சட்டமாகிப்போனது.அத்துடன் ஏனையோர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடியை அணிந்த முதல் ஹீரோவும் மாயாவிதான்.பான்ரொமை உருவாக்கும் யோசனை பான்ரொம் கிரியேட்டரான போல்க்கிற்கு எப்படி வந்தது? போல்க்  Mandrake the Magician  என்ற பத்திரிகை கொமிக்ஸ்ஸை கிங்க்ஸ் ஃபெயூச்சேர்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.அது வாசகர்களிடம் அதிக வரவேற்பைப்பெற்றது.அது முடிவடைந்த பின்னர் பத்திரிகை வேறு ஒரு கதையை கதாப்பாத்திரத்தை உருவாக்குமாறு கேட்டது.உடனே போல்க் கிங்க் ஆதரும் அவரது இரவுகளும் என்ற தலைப்பில் ஸ்கிரிப்ட்களை எழுதி சில சாம்பிள்களை வரைந்தும்ககொடுத்தார்.ஆனால் பத்திரிகை அதை நிராகரித்துவிடவே உருவான பாத்திரம்தான் பான்ரொம்.
2 மாதங்கள் பான்ரொம் கதையை யோசித்தார்.2 வாரங்கள் சாம்பிள்களை வரைந்து கொடுத்தார்.

பான்ரொம் முதன்முதலில் The Singh Brotherhood என்ற தலைப்பில் வெளிவந்தது.போல்க் கதாப்பத்திரங்களை தானே வரைந்தார்.
இதை வாசிப்பதற்கு இங்கே கிளிக்.

1039 இல் பான்ரொம் கலர்ஃபுல்லாக வெளிவந்தது.
2 ஆம் உலக்ப்போரில் போல்க் வெளி நாட்டு ரேடியோ மொழிபெயர்ப்புப்பிரிவில் சீஃப்ஃபாக பணியாற்றியபோது அவர்கள் பயன்படுத்திய இரகசியக்குறியீடு என்ன தெரியுமா? ...."பான்ரொம்".2 ஆம் உலகப்போரில் பங்குபற்ற போல்க் செல்லும்பொழுது தனது காமிக்ஸ்வேலையை தனது உதவியாளரான வில்ஸனிடம் விட்டு சென்றார்.இன்றைய பான்ரொமின் ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் மற்றும் வரைபவர்கள் Tony DePaul , Paul Ryan (Monday-Saturday) ,Terry Beatty (Sunday)

DC கொமிக்ஸ் 1988-1990 வரை பான்ரொமை வெளியிட்டது.


பான்ரொம் ராணிகாமிக்ஸில் மாயாவி என்றபெயரில்வெளிவந்துகொண்டிருந்தபோது முத்துகாமிக்ஸ்,கொமிக்வேர்ல்ட்,இந்திரஜால் காமிக்ஸ்களில் வேதாளர் என்ற பெயரில் பான்ரொம் வெளிவந்தது.

ராணி காமிக்ஸின் முதலாவது மாயாவி புத்தகம்

1943 இல் பான்ரொம் 15 பாகங்களைக்கொண்ட தொடராகவெளிவந்தது.
இதில் பான்ரொமாக நடித்தவர்  TomTyler
இத்தொலைக்காட்சித்தொடர்தொடர்பானவிடயங்கள் இங்கேகிளிக்

The Phantom என்ற திரைப்படம்கூட வெளிவந்திருக்கின்றது.1996 இல் வெளிவந்தது.இயக்கியவர் Simon Wincer 

இத்துடன் நின்றுவிடாது  Phantom 2040 என்ற வீடியோகேம்கூட வெளிவந்தது.

நீதன் மாயாவியா  உனக்கு அழிவே இல்லையாமே? அதையும் ஒருகைபார்த்துவுடுவோம்....

மாயாவி-மன்னிக்கவும் என்னை உங்களால் அழிக்கமுடியாது...
டுமீல்...டுமீல்.....டுமீல்....


7 comments:

 1. எங்கள் ஊரில் ஒரு பழைய புத்தகக்கடை இருந்தது. அங்கு தான் ஏராளாமான காமிக்ஸ் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். புத்தகங்களை விலைக்கு விற்காமல் வாடகைக்கு விடுவார்கள்! 3ரூ புத்தகத்தின் ஒரு நாள் வாடகை 50 காசு... மாயாவி புத்தகங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பல முறை படித்திருக்கிறேன். இப்பொழுது தான் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இரும்புக்கை மாயாவி கூட குலபமாக கிடைக்கிறார் ஆனால் முகமுடி...

  பதிவிற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 2. ம்ம் நல்ல அனுபவம்தான் முகமூடியின் ரசிகர்களுகென்று முகமூடிபற்றிய பின்புலக்கதையும் நிச்சயம் இருக்கும் எனக்கும் தற்பொழுது இதே நிலைதான் நண்பரே தேடியும் கிடைப்பதில்லை.யாராவது வந்த முழு காமிக்ஸையும் மீள் பதிப்பு செய்தால் நன்றாக இருக்குமென்று நம்புகின்றேன்.வருகை தந்தமைக்கு நன்றிகள் சகோ

  ReplyDelete
 3. nanuam intha mayavi rasikanthan. Palaya kathaikalai online el parkka mudinthal evvalavu nandraka irukkum.................

  ReplyDelete
  Replies
  1. ம் அதைத்தான் நாமும் எதிர்பார்க்கின்றோம் இந்தத்தளத்தைப்பாருங்கள் நம்மைப்போன்ற காமிக்ஸ் ரசிர்களது தேவையை நிறைவு செய்யும் தளம்
   http://tamilcomicsulagam.blogspot.com/

   Delete
 4. அருமை நண்பரே.!

  ReplyDelete
 5. அருமை , பழைய நியாபகங்கள் ஆட்கொண்டடன

  ReplyDelete
 6. Antha book venum anpare kidaikkuma

  ReplyDelete