Sunday, 12 August 2012

நல்லூர் கந்தசாமி கோயில்

நல்லூர் கந்தசுவாமி கோயிலானது இலங்கை தமிழரின் மத மற்றும் கலாசார, வரலாற்று அடையாளமாகும். இது யாழ்ப்பாணத்தின் முப்பெரும் முருகத் திருத்தலங்களுள் ஒன்றாகும். (அன்னதானக் கந்தன் – செல்வச் சந்நிதி, அபிஷேகக் கந்தன் – மாவிட்டபுரம்,அலங்காரக் கந்தன் – நல்லூர்.) இலங்கையின் செல்வச் செழிப்புமிக்க கோயிலும் இதுவேயாகும். அத்துடன் உலகெங்கிலுமிருந்து அதிகளவு பக்தர்களை கவரும் தலமும் இதுவே.

நல்லூர் கந்தசுவாமி கோயிலானது பலதடவைகள் இடிக்கப்பட்ட வரலாறு உடையது. அவ்வாறு ஒவ்வொரு முறை இடிக்கப்படும்போதும் மீண்டும் புதுப்பொலிவுடன் அது கட்டப்பட்டும் வருகிறது. தற்போது காணப்படுவது நான்காம் முறை கட்டப்பட்ட கோயிலாகும். முன்னைய கோயில்களைப் பற்றியும், அவை கட்டப்பட்ட ஆண்டு, கட்டியவர் போன்ற தகவல்கள் உறுதியானதாக கிடைக்கவில்லை. கைலாயமாலை போன்ற வரலாற்று நூல்களில் உள்ள தகவல்களின்படி முதலாவது கோயில்  கி.பி.948 இல் கோயில் கட்டப்பட்டதாக நம்ப இடமுண்டு. அது கலிங்க மாகனின் அமைச்சராக யாழ்ப்பான இராசதானியை ஆண்டவரால் கட்டப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. தற்போது ஆலயம் உள்ள குருக்கள் வளவு என்கிற இடத்தில் அது கட்டப்பட்டது. அது தென்னிலங்கை படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டது. பின்னர் சப்புமல் குமாரய எனப்பட்ட சென்பகப்பெருமாளால் இரண்டாவது கோயிலானது மிகப் பெரும் கோயிலாகக் கட்டப்பட்டது. ஆரியச்சக்கரவர்த்தியான கனகசூரியனை வென்ற இவன் 1450இலிருந்து 1467வரையாழ்ப்பாணத்தை ஆண்டான். அவனாலேயே வரலாற்றுத்தகவல்களின்படி இந்தியப் பெரும் கோயில்களுக்கு இணையாக, உள்ளே தலைநகரமும், அரண்மனைகளும் அடங்கத்தக்கதாக,சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களோடு, நான்கு பக்கமும் நான்கு பெரிய வாசல்களோடு, வரலாற்றின் தனித்துவம் பெற்ற நல்லூர் கோயில் எழுப்பப்பட்டது என அறியக்கிடைக்கிறது. அவனைப்பற்றியே கோயில் கட்டியத்தில் “ஸ்ரீமான் மகாராஜாதி ராஜ அகண்ட பூமண்டலப் பிரதியதிகர்த்தா விச்சிறாந்த கீர்த்தி ஸ்ரீகஜவல்லி சமேத சுப்ரமண்ய பாத அரவிந்த ஜனாதிரூடசோடன மகாதான சூர்ய குலவம்ச உத்பவ ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு” எனக் கூறப்படுகிறது.

முருகைக்கற்களையும், செங்கற்களையும், கருங்கற்களையும் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கோயிலானது போர்துக்கேயர்களால் தளபதி பிலிப்பி டி ஒலிவேரா தலைமையில் 1624இல்இடிக்கப்பட்டது. இடித்துப்பெறப்பட்ட கற்களே போர்துக்கேயர்களின் கோட்டைகளையும், மத ஆலயங்களையும் கட்டப் பயன்பட்டன. கோயில் இருந்த இடத்தில் தேவாலயம் ஒன்றும் எழுப்பப்பட்டது. 

மூன்றாவது கோயிலானது சிறு மடாலயமாக இரண்டாம் கோயில் இருந்த இடத்துக்கு அருகில் கிருஷ்ண சுப்பையரால் நடாத்தப்பட்டது. அந்தக் கோயிலை அகற்றவேண்டும் என்கிற நிபந்தனையில் அந்நியர்களால் தற்போதுள்ள இடத்தில் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
நான்காவதும், இப்போதுள்ளதுமான கோயிலானது 1749இல் கிருஷ்ண சுப்ப ஐயர், மற்றும் ரகுநாத மாப்பான முதலியாரால் குருக்கள் வளவு என அழைக்கப்பட்ட இடத்தில் - முதலாவது கோயில் இருந்த இடத்தில் என நம்பப்படுகிறது – கட்டப்பட்டது. கட்டப்பட்டபோது அவ்விடத்தில் முஸ்லிம்களின் குடியிருப்பும், ஒரு இஸ்லாமிய ஞானியின் நினைவான ஒரு தர்காவும் இருந்தது. அதன் நினைவாகவே தற்போதுள்ள இரண்டு மணிக்கூண்டுகளும் இஸ்லாமிய கட்டட முறையில் அமைக்கப்பெற்றுள்ளன. கிழக்கு நோக்கியிருக்கும் கோபுரமானது திராவிட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலானது இன்றுவரை மாப்பான முதலியாரின் பரம்பரையாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலம் காலமாக புதிய பல மாற்றங்களை ஏற்று விருத்தியடைந்து வரும் இக்கோயிலுக்கு தென்புற வாசலில் 108 அடி உயரமான கோபுரமானது 2011 ஓகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கோயிலின் திருவிழாவானது (மகோற்சவம்) ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்துக்கே விசேடமானதாகும். ஆவணி அமாவாசைக்கு தீர்த்தோற்சவம் வருமாறு 25 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அதற்கே உலகெங்கிலுமிருந்து பக்தர்களும்,இலங்கையெங்கிலுமிருந்தும் வியாபாரிகளும் திரளுவர். 
(நீதுஜன் பாலசுப்ரமணியம்)No comments:

Post a Comment